இரண்டாம் பகுதியை ஆரம்பிப்பதற்கு முன், ரவி, ஒரு வார்த்தை.
போன பதிவில், ஆசிய வேளாண்மை குறித்து எழுதியிருந்தேன். அதற்கும் நீங்கள் ‘குருகுல‘ வாசத்தில் கற்ற ஆசிய வேளாண்மை குறித்த பார்வைக்கும் வித்தியாசம் உண்டு. காரணம், நீங்கள் ‘பரிமாணம்‘ வழியாக ‘நிகழ்‘ காலத்தில் இருந்தவர்! பீடாதிபதியாக இருந்து உங்களுக்கு மார்க்சியம் ‘கற்றுத் தந்த‘ எஸ். என். நாகராசன், சொல்லும் ஆசிய உற்பத்தி முறை வேறு. பதிவில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள ஆசிய உற்பத்தி முறை வேறு. இரண்டையும் போட்டு குழப்பி உரையாட வராதீர்கள்.
‘ஆசிய உற்பத்தி முறையா! – சோசலிசமா? வரலாற்றில் எது சாத்தியம்?’ (‘நிகழ்’ 21, மார்ச்’ 92, ‘மார்க்சியம் – கிழக்கும் மேற்கும், பக்கம்: 56 – 61) என உச்சிக் குடுமி அசைய எஸ். என். நாகராசன் கேட்பதற்கும், முதல் பகுதியில் சுட்டிக் காட்டப்பட்டிருப்பதற்கும் உள்ள வேறுபாட்டை அவசியம் தோழர்கள் உணர வேண்டும். இல்லாவிட்டால், ‘வைணவத்தில் மார்க்சிய சித்தாந்தத்தை’ தரிசித்த எஸ். என். நாகராசன் பரம்பரையை சேர்ந்த ரவி சீனிவாஸ் வந்தடைந்த ‘இந்துத்துவா மார்க்சிய’த்துக்கு நம்மையும் அறியாமல் நாமும் வந்தடைவோம்!
ஏதோ பயம் காட்டுவதாக நினைத்துவிடாதீர்கள். இந்த எஸ். என். நாகராசன் இருக்கிறாரே… அடேங்கப்பா சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். உடம்பெல்லாம் விஷம். தனிப் பதிவாக இவரை குறித்து எழுதும் எண்ணம் இருக்கிறது. அரைகுறை மார்க்சிய அறிவுடன், ஸோ கால்ட் அறிவுஜீவி பரம்பரையை தமிழ் சிறுபத்திரிகை சூழலில் உருவாக்கிய பெருமை இவருக்கு மட்டுமே உண்டு! இயக்கம், கட்சி என்றெல்லாம் இருக்க வேண்டாம். அது அவசியமில்லை. தனியாக நாம் செயல்படலாம். எழுதி எழுதி அறிவை மட்டுமல்ல, புரட்சியையும் வரவழைக்கலாம்… என்பதான ‘பாதுகாப்பான‘ புரட்சிக்கு வித்திட்ட பிதாமகர் இவர்தான். இவரிடம், வாய் போத்தி ‘இளைய மார்க்ஸை‘ அறிந்துக் கொண்ட எஸ். வி. ராஜதுரை, தத்தகாபித்தகா என்று எழுதிய ‘அந்நியமாதல்‘ நூலை காரணமில்லாமலா, ‘க்ரியா‘ ராமகிருஷ்ணன் வெளியிட்டார்?
இப்படி ‘சிறப்பு‘ வாய்ந்த இந்த எஸ். என். நாகராசனிடம்தான் தன் மகன் கண்ணனை மார்க்சியம் ‘கற்க‘ சுந்தர ராமசாமி அனுப்பினார். அட பொய்யில்லை ஸ்வாமி! சத்தியமான உண்மை இது.
தொழிற்கல்வியை முடித்துவிட்டு, இலக்கிய மானேஜராக, ஒன் மேன் இலக்கிய தாதாவாக (ஆர்மி?!) அமர முயன்ற கண்ணனுக்கு, அதென்ன பொடலங்கா மார்க்சியம்? என்ற கேள்வி திடீரென எழுந்தது. ‘அம்பி, சரியான கேள்வி கேட்டுட்டடா… கவலையேப்படாத… நம்மாள் நோக்கு மார்க்சிய சித்தாந்தத்தை சரியா சொல்லித் தருவா…’ என உச்சி (குடுமி) மோந்து வேலூர் காந்தி நகரில் (காட்பாடிக்கு அருகில்) இருந்த எஸ். என். நாகராசனிடம் அனுப்பி வைத்தார்.
கண்ணனும் அவருடனேயே தங்கி, (வேஷ்டி, சட்டைகளை துவைத்துப் போட்டாரா என்று தெரியவில்லை!) மார்க்சியம் ‘கற்றார்!’
எஸ். என். நாகராசன் உபன்யாசம் செய்யச் செய்ய அதை கண்ணன், ஆடியோ கேசட்டில் பதிவு செய்தார். முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சாரியார் வழியில் கிட்டத்தட்ட 20க்கும் அதிகமான கேசட்டுகள் நிரம்பின! எப்போது வேண்டுமானாலும் இந்த உபன்யாச ஆடியோ கேசட்டுகள், சிடி உருவில் ‘காலச்சுவடு‘ சார்பாக விற்பனைக்கு வரலாம்! அப்படி வரவேண்டும் என்பதுதான் ஆசை. அப்போதுதான் தோழர் மருதையன், தோழர் ‘சூரியன்‘ உட்பட முன்னணி தோழர்களை பேச வைத்து நாமும் மார்க்சிய சிடி– களை வெளியிட முடியும்!
இப்படியாக ஊன் உறக்கமில்லாமல் கண்ணன் ‘கற்ற‘ மார்க்சியத்தைதான் இப்போது ‘காலச்சுவடு‘ இதழ்களில் பார்த்துக் கொண்டிருக்கிறோம்!
சரி, எங்கோ ஆரம்பித்து, எங்கோ வந்துவிட்டோம்.
முதல் பகுதி :
ரவி சீனிவாஸ் – க்கு மறுப்பு அல்லது பசுமைப்புரட்சியின் வன்முறை – 1
இனி 2வது பகுதி –
அமெரிக்காவுக்கு ஏன் திடீரென வேளாண்மை மீது ஆர்வம் வரவேண்டும்?
காரணம், சென்ற பதிவின் இறுதியில் சொன்னபடி தோழர் மாசேதுங் மீது இருந்த பயம்தான். முதல் உலகப் போருக்கும், இரண்டாம் உலகப் போருக்கும் இடைப்பட்ட காலத்தில் சீனத்தில் விவசாயிகளை ஒன்றிணைத்து தோழர் மாசேதுங் எழுப்பி வந்த விவசாயிகளின் இயக்கங்கள் குறித்த தாக்கம் ஆசிய நாடுகள் எங்கும் ஒரு உத்வேகத்தை அளித்தன. வேளாண்மையை அடிப்படையாக கொண்ட ஆசிய நிலப்பரப்பில் தோழர் மாசேதுங்கின் வழிமுறை ஒரு புதிய வெளிச்சத்தை அளித்தது.
1927ம் ஆண்டு, மார்ச் மாதம் தோழர் மாசேதுங் வெளியிடப்பட்ட ஹுனான் விவசாயி இயக்கப் பரிசீலனை பற்றிய அறிக்கை நினைவுக்கு வருகிறதா?
இரண்டாம் உலகப் போருக்குப் பின், இங்கிலாந்தை போலவே தானும் ஆசிய நாடுகளில் கொள்ளையடிக்க வேண்டும் என அமெரிக்கா விரும்பியது. இங்கிலாந்து அரசின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த காலனி நாடுகளுக்கு ‘சுதந்திரம்‘ அளிக்கும்படி நெருக்கியது. வேறு வழியில்லாமல், பிரிட்டனும் அதற்கு ஒப்புக் கொண்டது.
ஆனால், அமெரிக்க வேளாண்மை பார்வை இயற்கையோடு கூட்டுறவு வைத்துக் கொள்ளும் அடிப்படையில் அமையவில்லை. பதிலாக இயற்கையை வெற்றிக் கொள்ளும் அடிப்படையில் அமைந்திருந்தது. அதாவது கடன் அதிகரிப்பு, வேதியியல் உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லிகள் போன்ற வெளியில் இருந்து வாங்கி பயன்படுத்தும் பொருட்களின் உபயோக அதிகரிப்பின் அடிப்படையில் அமைந்திருந்தது.
இது தங்களுடைய அரசியல் முன்னுரிமைகள் மற்றும் நலன்களை பேணிக் காக்க உதவுவதால் இந்திய ஆளும் வர்க்கமாக இருந்த மேல் வகுப்பினரில் பெரும்பாலோர் இந்த வழிமுறைக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர். காரணம், நிலத்தில் இறங்கி அவர்கள் யாரும் வேலை செய்ததில்லை!
ஆனால், அமெரிக்க பாணி வேளாண்மை அமெரிக்காவிலேயே சரியாக பிரபலமாகவில்லை என்பதுதான் உண்மை. செயற்கை உரங்களின் அதிகமான உபயோகம், ஓரினப் பயிர்களை அதிகமாக பயன்படுத்தல், வேகமான, மிகையான இயந்திரமயப்படுத்தல் ஆகியவை 30 ஆண்டுகளுக்குள்ளாகவே அமெரிக்காவின் வளமான சமவெளிகளை பாலைவனமாக்கிவிட்டன.
1930ல் அமெரிக்காவில் தோன்றிய பெரும் பஞ்சம் பெருமளவில் அமெரிக்க வேளாண்மை புரட்சியின் விளைவாக ஏற்பட்டதுதான் என்கிறார் ஹைமேன். ஆனால், இந்தத் தகவல்கள் உலகின் பிற பகுதிகளுக்கு சென்றபோது ராக்பெல்லர் நிறுவனத்தின் பார்வைக்கு சென்று, கவனமாக பரிசீலிக்கப்பட்ட பின்பே அனுப்பப்பட்டன.
இந்த விவரங்கள் அனைத்தும் இந்தியாவில் மூடி மறைக்கப்பட்டது. இவ்வளவு கொடூரமான இந்த அமெரிக்க மாதிரியை இந்தியாவுக்கு மாற்றியமைப்பதில் மூன்று பன்னாட்டு குழுக்கள் ஈடுபட்டன. அவை:
1. தனியார் அமெரிக்க நிறுவனத்தினர் (போர்ட், ராக்பெல்லர்)
2. அமெரிக்க அரசு
3. உலக வங்கி
போர்ட் நிறுவனம், 1952ம் ஆண்டு முதலே இந்திய வேளாண்மைத் தளத்தில் தன்னை ஈடுபடுத்தி வந்துள்ளது. 1905ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்திய வேளாண்மை ஆய்வு நிறுவனம், 1958ம் ஆண்டு மறுசீரமைக்கப்பட்டது. ராக்பெல்லர் நிறுவனத்தின் கள இயக்குநரான ரால்ப் கம்மிங்ஸ், இந்திய வேளாண்மை ஆய்வு நிறுவனத்தின் முதல்வராக நியமிக்கப்பட்டார். 1960ம் ஆண்டு பதவிக்கு வந்த ஏ. பி. ஜோஷியை அடுத்து 1965ம் ஆண்டு எம். எஸ். சுவாமிநாதன் இந்தப் பதவிக்கு வந்தார்.
எம். எஸ். சுவாமிநாதனை குறித்து பார்ப்பதற்கு முன், இந்தியாவில் போர்ட் மற்றும் ராக்பெல்லர் நிறுவனத்தின் பங்கை குறித்து சுருக்கமாக தெரிந்து கொள்வோம்.
இதற்கு பதிலாக குறிப்பிட்ட சில பகுதிகளை எடுத்துக் கொண்டு அங்கு தீவிரமாக இந்த அமெரிக்க வேளாண்மை கொள்கையை நடைமுறைப்படுத்தலாம் என்று அந்தக் குழு பரிந்துரை செய்தது. இதனை அடுத்து 1960 – 61ம் ஆண்டு தீவிர வேளாண்மை வளர்ச்சித் திட்டம் (IADP) அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த நிறுவனத்தின் கீழ், 150 ஆராய்ச்சியாளர்கள் கற்றுத் தேறினர். இந்தக் காலகட்டத்தில் இரண்டாயிரம் இந்தியர்கள் அமெரிக்க வேளாண்மைக் கல்விக் கூடங்களை பார்வையிட அமெரிக்க அரசு நிதியுதவி அளித்தது.
ஏழை நாடுகளில், அதிக மூலதனத்தை வாங்கிக் கொள்ளும் இந்த வேளாண்மை மாதிரியை புகுத்துவதற்கு கடன் அளிக்க உலக வங்கி போன்ற சர்வதேச நிதி அமைப்புகள் முன்வந்தன. 1960களின் மத்தியில் இந்தியா தனது நாணய மதிப்பை 37.5% குறைக்க கட்டாயப்படுத்தப்பட்டது.
இந்திய செயற்கை உரத் தொழிற்துறையில் அந்நிய மூலதனம் அனுமதிக்கப்படுவதற்கான சாதகமான சூழ்நிலைகளை தோற்றுவித்தல், இறக்குமதி கொள்கையை தாராளமயப்படுத்தல், உள்நாட்டு கட்டுப்பாடுகளை முழுவதுமாக நீக்குதல் போன்றவற்றை நடைமுறைப்படுத்த உலக வங்கியும், அமெரிக்க மானிய அமைப்புகளும் இந்தியாவை நெருக்கின.
இத்தகைய கொள்கைகளை நடைமுறைப்படுத்த தேவையான அந்நியச் செலாவணிக்கு உலகவங்கி கடன் அளித்தது. 1966 – 71க்கு இடைப்பட்ட ஐந்தாண்டுத்திட்டத்தில் பசுமைப்புரட்சிக்கான அந்நிய செலவாணி ரூ. 1114 கோடியாகும். இது அதற்கு முந்தைய ஐந்தாண்டுத் திட்டத்தில் வேளாண்மைத் துறைக்கு ஒட்டுமொத்தமாக ஒதுக்கப்பட்ட தொகையைப் போல் ஆறு மடங்கு! (ரூ. 191 கோடி)
சரி, அடுத்ததாக சி. சுப்பிரமணியம் எதனால் பசுமைப் புரட்சியை இந்தியாவுக்கு கொண்டு வந்தார் என்று பார்க்கலாமா? அல்லது அமெரிக்க கைக்கூலியாக உருவான எம். எஸ். சுவாமிநாதனின் பின்புலம் குறித்து பார்க்கலாமா?
அட, இரண்டையுமே பார்ப்போமே!
– தொடரும்
மறுமொழியொன்றை இடுங்கள்