Archive for ஜனவரி, 2009

ரவி சீனிவாஸ் – க்கு மறுப்பு அல்லது பசுமைப்புரட்சியின் வன்முறை – 2

ஜனவரி 31, 2009

இரண்டாம் பகுதியை ஆரம்பிப்பதற்கு முன், ரவி, ஒரு வார்த்தை.

போன பதிவில், ஆசிய வேளாண்மை குறித்து எழுதியிருந்தேன். அதற்கும் நீங்கள் குருகுலவாசத்தில் கற்ற ஆசிய வேளாண்மை குறித்த பார்வைக்கும் வித்தியாசம் உண்டு. காரணம், நீங்கள்பரிமாணம்வழியாகநிகழ்காலத்தில் இருந்தவர்! பீடாதிபதியாக இருந்து உங்களுக்கு மார்க்சியம்கற்றுத் தந்தஎஸ். என். நாகராசன், சொல்லும் ஆசிய உற்பத்தி முறை வேறு. பதிவில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள ஆசிய உற்பத்தி முறை வேறு. இரண்டையும் போட்டு குழப்பி உரையாட வராதீர்கள்.

‘ஆசிய உற்பத்தி முறையா! – சோசலிசமா? வரலாற்றில் எது சாத்தியம்?’ (‘நிகழ்’ 21, மார்ச்’ 92, ‘மார்க்சியம் – கிழக்கும் மேற்கும், பக்கம்: 56 – 61) என உச்சிக் குடுமி அசைய எஸ். என். நாகராசன் கேட்பதற்கும், முதல் பகுதியில் சுட்டிக் காட்டப்பட்டிருப்பதற்கும் உள்ள வேறுபாட்டை அவசியம் தோழர்கள் உணர வேண்டும். இல்லாவிட்டால், ‘வைணவத்தில் மார்க்சிய சித்தாந்தத்தை’ தரிசித்த எஸ். என். நாகராசன் பரம்பரையை சேர்ந்த ரவி சீனிவாஸ் வந்தடைந்த ‘இந்துத்துவா மார்க்சிய’த்துக்கு நம்மையும் அறியாமல் நாமும் வந்தடைவோம்!

ஏதோ பயம் காட்டுவதாக நினைத்துவிடாதீர்கள். இந்த எஸ். என். நாகராசன் இருக்கிறாரேஅடேங்கப்பா சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். உடம்பெல்லாம் விஷம். தனிப் பதிவாக இவரை குறித்து எழுதும் எண்ணம் இருக்கிறது. அரைகுறை மார்க்சிய அறிவுடன், ஸோ கால்ட் அறிவுஜீவி பரம்பரையை தமிழ் சிறுபத்திரிகை சூழலில் உருவாக்கிய பெருமை இவருக்கு மட்டுமே உண்டு! இயக்கம், கட்சி என்றெல்லாம் இருக்க வேண்டாம். அது அவசியமில்லை. தனியாக நாம் செயல்படலாம். எழுதி எழுதி அறிவை மட்டுமல்ல, புரட்சியையும் வரவழைக்கலாம்என்பதானபாதுகாப்பானபுரட்சிக்கு வித்திட்ட பிதாமகர் இவர்தான். இவரிடம், வாய் போத்திஇளைய மார்க்ஸைஅறிந்துக் கொண்ட எஸ். வி. ராஜதுரை, தத்தகாபித்தகா என்று எழுதியஅந்நியமாதல்நூலை காரணமில்லாமலா, ‘க்ரியாராமகிருஷ்ணன் வெளியிட்டார்?

இப்படி சிறப்புவாய்ந்த இந்த எஸ். என். நாகராசனிடம்தான் தன் மகன் கண்ணனை மார்க்சியம்கற்கசுந்தர ராமசாமி அனுப்பினார். அட பொய்யில்லை ஸ்வாமி! சத்தியமான உண்மை இது.

தொழிற்கல்வியை முடித்துவிட்டு, இலக்கிய மானேஜராக, ஒன் மேன் இலக்கிய தாதாவாக (ஆர்மி?!) அமர முயன்ற கண்ணனுக்கு, அதென்ன பொடலங்கா மார்க்சியம்? என்ற கேள்வி திடீரென எழுந்தது. ‘அம்பி, சரியான கேள்வி கேட்டுட்டடாகவலையேப்படாதநம்மாள் நோக்கு மார்க்சிய சித்தாந்தத்தை சரியா சொல்லித் தருவா…’ என உச்சி (குடுமி) மோந்து வேலூர் காந்தி நகரில் (காட்பாடிக்கு அருகில்) இருந்த எஸ். என். நாகராசனிடம் அனுப்பி வைத்தார்.

கண்ணனும் அவருடனேயே தங்கி, (வேஷ்டி, சட்டைகளை துவைத்துப் போட்டாரா என்று தெரியவில்லை!) மார்க்சியம்கற்றார்!’

எஸ். என். நாகராசன் உபன்யாசம் செய்யச் செய்ய அதை கண்ணன், ஆடியோ கேசட்டில் பதிவு செய்தார். முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சாரியார் வழியில் கிட்டத்தட்ட 20க்கும் அதிகமான கேசட்டுகள் நிரம்பின! எப்போது வேண்டுமானாலும் இந்த உபன்யாச ஆடியோ கேசட்டுகள், சிடி உருவில் காலச்சுவடுசார்பாக விற்பனைக்கு வரலாம்! அப்படி வரவேண்டும் என்பதுதான் ஆசை. அப்போதுதான் தோழர் மருதையன், தோழர்சூரியன்உட்பட முன்னணி தோழர்களை பேச வைத்து நாமும் மார்க்சிய சிடிகளை வெளியிட முடியும்!

இப்படியாக ஊன் உறக்கமில்லாமல் கண்ணன்கற்றமார்க்சியத்தைதான் இப்போதுகாலச்சுவடுஇதழ்களில் பார்த்துக் கொண்டிருக்கிறோம்!

சரி, எங்கோ ஆரம்பித்து, எங்கோ வந்துவிட்டோம்.

முதல் பகுதி :

ரவி சீனிவாஸ் – க்கு மறுப்பு அல்லது பசுமைப்புரட்சியின் வன்முறை – 1

இனி 2வது பகுதி –

மெரிக்காவுக்கு ஏன் திடீரென வேளாண்மை மீது ஆர்வம் வரவேண்டும்?

காரணம், சென்ற பதிவின் இறுதியில் சொன்னபடி தோழர் மாசேதுங் மீது இருந்த பயம்தான். முதல் உலகப் போருக்கும், இரண்டாம் உலகப் போருக்கும் இடைப்பட்ட காலத்தில் சீனத்தில் விவசாயிகளை ஒன்றிணைத்து தோழர் மாசேதுங் எழுப்பி வந்த விவசாயிகளின் இயக்கங்கள் குறித்த தாக்கம் ஆசிய நாடுகள் எங்கும் ஒரு உத்வேகத்தை அளித்தன. வேளாண்மையை அடிப்படையாக கொண்ட ஆசிய நிலப்பரப்பில் தோழர் மாசேதுங்கின் வழிமுறை ஒரு புதிய வெளிச்சத்தை அளித்தது.

1927ம் ஆண்டு, மார்ச் மாதம் தோழர் மாசேதுங் வெளியிடப்பட்ட ஹுனான் விவசாயி இயக்கப் பரிசீலனை பற்றிய அறிக்கை நினைவுக்கு வருகிறதா?

இரண்டாம் உலகப் போருக்குப் பின், இங்கிலாந்தை போலவே தானும் ஆசிய நாடுகளில் கொள்ளையடிக்க வேண்டும் என அமெரிக்கா விரும்பியது. இங்கிலாந்து அரசின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த காலனி நாடுகளுக்குசுதந்திரம்அளிக்கும்படி நெருக்கியது. வேறு வழியில்லாமல், பிரிட்டனும் அதற்கு ஒப்புக் கொண்டது 

இப்படி சுதந்திரமடைந்தஆசிய நாடுகள், அதிகரித்து வந்த விவசாய போராட்டங்களை எதிர்கொள்ள நேரிட்டது. இந்த நேரத்தில்தான் சீனாவில் கம்யூனிச கட்சி ஆட்சிக்கு வந்தது. உள்ளூர் விவசாயச் சங்கங்கள், நிலங்களை ஆக்ரமித்துக் கொள்ளவும், கடன்களை தள்ளுபடி செய்யவும் , சொத்துக்களை மறு விநியோகம் செய்யவும் சீன அரசு ஊக்குவித்தது.
இந்த சீன அனுபவம் ஆசிய நாடுகள் முழுக்க உற்சாக ஊற்றை வரவழைத்தது. விவசாய இயக்கங்கள், பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா, மலேசியா, வியட்நாம் மற்றும் இந்தியாவில் பரவத் தொடங்கின.
மேலே குறிப்பிட்ட ஆசிய நாடுகளில் புதிதாக தலைமையேற்றிருந்த அரசியல் தலைவர்கள், இத்தகைய விவசாய போராட்டங்களை ஒடுக்கி, அரசியல் நிலையை அமைதிப்படுத்த வழிகளை கண்டுப்பிடிக்க வேண்டியிருந்தது. முக்கியமாக கிராமப் பகுதிகளில் நிலவியஅபாயகரமானசூழ்நிலையை சீர்செய்வது முக்கிய அஜண்டாவாக இருந்தது.
அதனால்தான் இந்திய அரசின் உத்தரவுப்படி 1950ல் பெரும்பாலான இந்திய மாநிலங்கள், ஜமீந்தாரி முறை ஒழிப்பு, குத்தகைகாரர்களுக்கு பாதுகாப்பு, நியாயமான கூலி நிர்ணயம் போன்ற வடிவங்களில் நிலச்சீர்திருத்தத்தை கொண்டுவந்தன. சில உச்சவரம்புகளும் கொண்டுவரப்பட்டன.
இதே காலகட்டத்தில்தான் சத்தமில்லாமல் அமெரிக்காவில் வேளாண்மை உற்பத்தி மற்றும் வேளாண்மை அமைதி குறித்த 2வது செயல் திட்டம் தயாரிக்கப்பட்டு வந்தது. ‘சீனாவில் ஏற்பட்ட மாற்றம்இந்த செயல் திட்டத்தை இன்னும் வேகப்படுத்தியது.
அதாவதுஅரசியல்தலையீட்டிற்கான ஒரு புதிய தலைமுறைக்காக அமெரிக்க நிதி நிறுவனங்கள், ராக்பெல்லர், போர்ட் நிறுவனங்கள், மற்றும் உலக வங்கி போன்றவை தங்களை தயாரித்துக் கொண்டன.
கிராமப்புறத்தை அரசியல் ரீதியாக நிலைப்படுத்துவது முக்கியமான நோக்கமாக இருந்தது. விவசாய சமுதாயம் முளைவிடும் புரட்சித்தன்மையுடன் விளங்கியதால், அது நெருக்கப்படும்போது, புதிய முதலாளித்துவ ஆதிக்கம் செலுத்தும் புதிய அரசுகளுக்கு எதிராக போராட்டம் கொடுக்கத் தயங்காது என்பது சர்வதேச ரீதியாக புரிந்து கொள்ளப்பட்டிருந்தது. இந்த புரிந்து கொள்ளல், புதிய ஆசிய அரசுகள் கம்யூனிஸ ஈர்ப்பிலிருந்து பிரித்து இழுக்க, கிராமப்புறங்களை முன்னேற்றுவதை குறிக்கோளாக கொண்டிருந்த, அமெரிக்காவால் அறிமுகப்படுத்தப்பட்ட, 1952ம் ஆண்டு கொழும்புத் திட்டத்தில் தங்களை இணைத்துக் கொள்ளத் தூண்டின. கிராமப்புறங்களை நிலப்படுத்தும் வழிமுறைகளாக அந்நிய மூலதனத்தால் அரவணைக்கப்படும் கிராம முன்னேற்றத் திட்டங்கள் பரிந்துரை செய்யப்பட்டன…” என்கிறார்கள் ராபர்ட் ஆந்தர்சன் மற்றும் பேக்கர் மோரிசன்.
அதாவது ரவி, உணவு உற்பத்தியை அதிகரித்து, அதன் மூலம் விவசாயப் போராட்டத்தை மழுங்கச் செய்வதற்கான ஆயுதமாக உருவாக்கப்பட்ட பசுமைப் புரட்சி திட்டத்தில் அறிவியலும், அரசியலும் கலப்புமணம் புரிந்து கொண்டன!

ஆனால், அமெரிக்க வேளாண்மை பார்வை இயற்கையோடு கூட்டுறவு வைத்துக் கொள்ளும் அடிப்படையில் அமையவில்லை. பதிலாக இயற்கையை வெற்றிக் கொள்ளும் அடிப்படையில் அமைந்திருந்தது. அதாவது கடன் அதிகரிப்பு, வேதியியல் உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லிகள் போன்ற வெளியில் இருந்து வாங்கி பயன்படுத்தும் பொருட்களின் உபயோக அதிகரிப்பின் அடிப்படையில் அமைந்திருந்தது.

இது தங்களுடைய அரசியல் முன்னுரிமைகள் மற்றும் நலன்களை பேணிக் காக்க உதவுவதால் இந்திய ஆளும் வர்க்கமாக இருந்த மேல் வகுப்பினரில் பெரும்பாலோர் இந்த வழிமுறைக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர். காரணம், நிலத்தில் இறங்கி அவர்கள் யாரும் வேலை செய்ததில்லை!

ஆனால், அமெரிக்க பாணி வேளாண்மை அமெரிக்காவிலேயே சரியாக பிரபலமாகவில்லை என்பதுதான் உண்மை. செயற்கை உரங்களின் அதிகமான உபயோகம், ஓரினப் பயிர்களை அதிகமாக பயன்படுத்தல், வேகமான, மிகையான இயந்திரமயப்படுத்தல் ஆகியவை 30 ஆண்டுகளுக்குள்ளாகவே அமெரிக்காவின் வளமான சமவெளிகளை பாலைவனமாக்கிவிட்டன.

1930ல் அமெரிக்காவில் தோன்றிய பெரும் பஞ்சம் பெருமளவில் அமெரிக்க வேளாண்மை புரட்சியின் விளைவாக ஏற்பட்டதுதான் என்கிறார் ஹைமேன். ஆனால், இந்தத் தகவல்கள் உலகின் பிற பகுதிகளுக்கு சென்றபோது ராக்பெல்லர் நிறுவனத்தின் பார்வைக்கு சென்று, கவனமாக பரிசீலிக்கப்பட்ட பின்பே அனுப்பப்பட்டன.

இந்த விவரங்கள் அனைத்தும் இந்தியாவில் மூடி மறைக்கப்பட்டது. இவ்வளவு கொடூரமான இந்த அமெரிக்க மாதிரியை இந்தியாவுக்கு மாற்றியமைப்பதில் மூன்று பன்னாட்டு குழுக்கள் ஈடுபட்டன. அவை:

1. தனியார் அமெரிக்க நிறுவனத்தினர் (போர்ட், ராக்பெல்லர்)

2. அமெரிக்க அரசு

3. உலக வங்கி

போர்ட் நிறுவனம், 1952ம் ஆண்டு முதலே இந்திய வேளாண்மைத் தளத்தில் தன்னை ஈடுபடுத்தி வந்துள்ளது. 1905ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்திய வேளாண்மை ஆய்வு நிறுவனம், 1958ம் ஆண்டு மறுசீரமைக்கப்பட்டது. ராக்பெல்லர் நிறுவனத்தின் கள இயக்குநரான ரால்ப் கம்மிங்ஸ், இந்திய வேளாண்மை ஆய்வு நிறுவனத்தின் முதல்வராக நியமிக்கப்பட்டார். 1960ம் ஆண்டு பதவிக்கு வந்த ஏ. பி. ஜோஷியை அடுத்து 1965ம் ஆண்டு எம். எஸ். சுவாமிநாதன் இந்தப் பதவிக்கு வந்தார்.

எம். எஸ். சுவாமிநாதனை குறித்து பார்ப்பதற்கு முன், இந்தியாவில் போர்ட் மற்றும் ராக்பெல்லர் நிறுவனத்தின் பங்கை குறித்து சுருக்கமாக தெரிந்து கொள்வோம்.

போர்ட்  1952ம் ஆண்டு இந்தியாவிலுள்ள சுமார் 100 கிராமங்கள் அடங்கிய 15 சமுதாய மேம்பாடுத் திட்டங்களுக்கு போர்ட் நிறுவனம் நிதியுதவி அளித்தது. ஆனால், 1959ம் ஆண்டு இந்தியாவுக்கு வருகை தந்த 13 அமெரிக்க வேளாண் அறிஞர்கள் அடங்கிய போர்ட் நிறுவனத்தின் குழு, இந்தியாவிலுள்ள 5 லட்சத்து 50 ஆயிரம் கிராமங்களிலும் ஒரே சமயத்தில் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த முடியாது என பரிந்துரை செய்ததை அடுத்து இந்தத் திட்டம் கைவிடப்பட்டது.

இதற்கு பதிலாக குறிப்பிட்ட சில பகுதிகளை எடுத்துக் கொண்டு அங்கு தீவிரமாக இந்த அமெரிக்க வேளாண்மை கொள்கையை நடைமுறைப்படுத்தலாம் என்று அந்தக் குழு பரிந்துரை செய்தது. இதனை அடுத்து 1960 – 61ம் ஆண்டு தீவிர வேளாண்மை வளர்ச்சித் திட்டம் (IADP) அறிமுகப்படுத்தப்பட்டது.

ராக்பெல்லர்  ராக்பெல்லர் நிறுவனம், இந்திய ஆய்வு நிறுவனங்களை மறு சீரமைப்பதற்கு பண உதவி செய்து வந்தது. அத்துடன் அமெரிக்க நிறுவனங்களை சென்று பார்க்க, அங்கு பயிற்சி பெற, இந்தியர்களுக்கு நிதியுதவியும் அளித்தது. 1956க்கும் 1970க்கும் இடையில் அமெரிக்க வேளாண்மை நிறுவனங்களையும், ஆய்வு நிலையங்களையும் சென்று பார்க்க இந்தியத் தலைவர்களுக்கு 90 குறுகியகால நிதியுதவி அளிக்கப்பட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

இந்த நிறுவனத்தின் கீழ், 150 ஆராய்ச்சியாளர்கள் கற்றுத் தேறினர். இந்தக் காலகட்டத்தில் இரண்டாயிரம் இந்தியர்கள் அமெரிக்க வேளாண்மைக் கல்விக் கூடங்களை பார்வையிட அமெரிக்க அரசு நிதியுதவி அளித்தது.

ஏழை நாடுகளில், அதிக மூலதனத்தை வாங்கிக் கொள்ளும் இந்த வேளாண்மை மாதிரியை புகுத்துவதற்கு கடன் அளிக்க உலக வங்கி போன்ற சர்வதேச நிதி அமைப்புகள் முன்வந்தன. 1960களின் மத்தியில் இந்தியா தனது நாணய மதிப்பை 37.5% குறைக்க கட்டாயப்படுத்தப்பட்டது.

இந்திய செயற்கை உரத் தொழிற்துறையில் அந்நிய மூலதனம் அனுமதிக்கப்படுவதற்கான சாதகமான சூழ்நிலைகளை தோற்றுவித்தல், இறக்குமதி கொள்கையை தாராளமயப்படுத்தல், உள்நாட்டு கட்டுப்பாடுகளை முழுவதுமாக நீக்குதல் போன்றவற்றை நடைமுறைப்படுத்த உலக வங்கியும், அமெரிக்க மானிய அமைப்புகளும் இந்தியாவை நெருக்கின.

இத்தகைய கொள்கைகளை நடைமுறைப்படுத்த தேவையான அந்நியச் செலாவணிக்கு உலகவங்கி கடன் அளித்தது. 1966 – 71க்கு இடைப்பட்ட ஐந்தாண்டுத்திட்டத்தில் பசுமைப்புரட்சிக்கான அந்நிய செலவாணி ரூ. 1114 கோடியாகும். இது அதற்கு முந்தைய ஐந்தாண்டுத் திட்டத்தில் வேளாண்மைத் துறைக்கு ஒட்டுமொத்தமாக ஒதுக்கப்பட்ட தொகையைப் போல் ஆறு மடங்கு! (ரூ. 191 கோடி)

சரி, அடுத்ததாக சி. சுப்பிரமணியம் எதனால் பசுமைப் புரட்சியை இந்தியாவுக்கு கொண்டு வந்தார் என்று பார்க்கலாமா? அல்லது அமெரிக்க கைக்கூலியாக உருவான எம். எஸ். சுவாமிநாதனின் பின்புலம் குறித்து பார்க்கலாமா?

அட, இரண்டையுமே பார்ப்போமே!

– தொடரும்

 

ரவி சீனிவாஸ் – க்கு மறுப்பு அல்லது பசுமைப்புரட்சியின் வன்முறை – 1

ஜனவரி 30, 2009

புதிய ஜனநாயகம்ஜனவரி 2009 இதழில் வெளியான தோழர் சுடர் எழுதிய எம்.எஸ்.சுவாமிநாதன்: வேளாண் விஞ்ஞானியா? அமெரிக்கக் கைக்கூலியாஎன்ற கட்டுரையை கீற்று இணையதளம் வெளியிட்டிருந்தது. (http://keetru.com/literature/essays/sudar.php).

அதற்கு ரவி சீனிவாஸ் ஒரு எதிர்வினை எழுதியிருக்கிறார். அது கீற்றில் வெளியாகியிருக்கிறது. அந்தப் எதிர்வினையை தனது வலைத்தளத்திலும்எம். எஸ். சுவாமிநாதன், பசுமைப்புரட்சிகட்டுரைஎதிர்வினை என்ற தலைப்பில் வெளியிட்டிருகிறார். http://www.ravisrinivas.blogspot.com/

நண்பர்கள், அந்த இரு கட்டுரைகளையும் வாசித்தப் பின் இந்த மறுப்பை படிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

பல நூல்கள், ஆதாரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தக் கட்டுரை அமைவதால், நீளம் கருதி இதை பகுதிப் பகுதியாக வெளியிடுகிறேன்.

இந்த மறுப்பு ரவி சீனிவாஸ் என்ற தனி மனிதனுக்காக மட்டுமல்ல. அவரைப் போன்று இருக்கும் அனனத்து வலதுசாரிகளுக்காகவும்தான். இந்திய வேளாண்மை, விவசாயிகளின் நலன், குறித்த புரிதலுக்காகவும்தான். இன்று இணையத்தில் வளைய வரும் பல நண்பர்களுக்கு இந்திய விவசாயிகளின் நிலை தெரியவில்லை… அதாவது தெரிவிக்கப்படவில்லை. பசுமைப் புரட்சி என்ற பெயரால் அமெரிக்க ஏகாதிபத்தியம் செய்த மோசடி கொஞ்சம் நஞ்சமல்ல. ரத்தத்தை உறைய வைக்கும் அந்த சரித்திரத்தை அனைவருமே தெரிந்து கொள்ள வேண்டும்.

விவசாயிகளின் இப்போதைய வறுமை நிலைக்கு யார் காரணம்? கொத்துக் கொத்தாக தற்கொலை செய்து கொள்ளும் நிலமைக்கு அவர்களை தள்ளியது யார்? விவசாய நிலங்கள் நச்சுத்தன்மையுடன் பயனற்று போனதற்கு எது காரணம்… என முடிந்தளவு இந்தக் கட்டுரையில் ஆராய்ந்திருக்கிறேன்.  

பதிவாக, இதை பகிர்ந்துக் கொள்ள காரணமிருகிறது. இந்த நீண்ட நெடிய வரலாற்று பின்னணியை புரிந்து கொண்டால்தான், நக்சல்பாரிகளின் தேவையை, அவசியத்தை உணர முடியும். இந்தியா சுதந்திரம் அடைந்ததாக சொல்லப்படும் காலத்தில் இருந்த கம்யூனிஸ கட்சிகளின் தலைமை விவசாயிகளுக்கு இழைத்த துரோகமும் இதனுள் அடங்கி இருக்கிறது. எம். எஸ். சுவாமிநாதன், போன்ற புறம்போக்கு கழிசடை, அமெரிக்க கைக்கூலிகளின் உருவாக்கமும் இதே வரலாற்றில்தான் புதைந்திருக்கிறது.

உணர்ச்சி வசப்பட்டு ரவி குறிப்பிட்டுள்ளார் பாருங்கள்…

// பசுமைப்புரட்சிக்கு எதிர்ப்பு வந்த போது அதை வலியுறுத்தி ஆதரித்தவர் அன்றைக்கு அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியம். அவரும் அமெரிக்க கைக்கூலியா.//

கைக்கூலி அல்ல ரவி… இந்திய விவசாயிகளை அமெரிக்காவுக்கு கொத்தடிமையாக விற்ற ‘தலைவர்’தான் சி. சுப்பிரமணியம்.  இந்திய பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரி, பசுமைப் புரட்சி இந்தியாவில் வருவதை தடுத்தார். அதனைத் தொடர்ந்து அவர் ‘திடீரென’ மறைந்துவிடவே, அவசர அவசரமாக எம்.எஸ். சுவாமிநாதன், சீ… மன்னிக்க, சி. சுப்பிரமணியம், துணையுடன் பசுமைப் புரட்சியை இந்தியாவின் வேளாண் முறையாக்கினார்.

சரி, பதிவுக்கு வருவோம்.

தகவல் பிழைகளோ, பொருள் பிழையோ இருப்பின் சுட்டிக் காட்டுங்கள்.

சூனியம்

ரவி சீனிவாஸ், பொய் சொல்லுவார், உண்மைகளை திரித்து கூறுவார் என்பதற்கு வலுசேர்ப்பது போலவே, அவரது இந்த எதிர்வினையும் அமைந்திருக்கிறது.

உண்மையில் ‘பசுமைப்புரட்சி’ என்பது என்ன, அது எப்போது தோன்றியது, ஏன் உருவானது, யாரால் – எந்த சூழலில் வடிவமைக்கப்பட்டது என்பதை தெரிந்து கொள்வதற்கு முன், ஆசிய வேளாண்மை என்றால் என்னவென்று பார்த்துவிடுவோம். அதாவது பசுமைப் புரட்சிக்கு முந்தைய காலகட்டம். இதை தெரிந்து கொண்டால்தான் பசுமைப் புரட்சியின் விபரீதத்தை முழுமையாக உணர முடியும்.

இந்திய – ஆசிய வேளாண்மை  ஒரு வேளாண்மை ஆவணம்என்பதுநவீன வேளாண்மையின் தந்தை என்றழைக்கப்படும் சர் ஆல்பிரட் ஹோவர்ட் எழுதியபுகழ்பெற்ற புத்தகம். 1940களில் வெளியான இந்தப் புத்தகத்தில்,

ஆசியாவில் மிகவும் நிலைபெற்றுவிட்ட வேளாண்மை அமைப்பை நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இன்று இந்திய, சீன சிறு வயல்களில் நிகழ்ந்து கொண்டிருப்பவை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இடம் பெற்றுவிட்டன. கீழ்திசை வேளாண்மை நடைமுறைகள் உச்சகட்ட சோதனையிலும் வெற்றிகரமாக தேறிவிட்டது. பண்டைக் காலத்திய காடுகளைப் போல, புல்வெளிகளைப் போல, வேளாண்மையும் உறுதியாக நிலைபெற்றுவிட்டது..’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், ஆல்பிரட் ஹோவர்ட் இப்படி சொல்வதற்கு முன்பே, அதாவது 120 ஆண்டுகளுக்கு முன்பே, டாக்டர் ஜான் அகஸ்டஸ் வோல்க்கர் திட்டவட்டமாக ஆசிய – இந்திய வேளாண்மை முறையே சிறந்த முறை என புகழ்ந்திருக்கிறார். இவர் 1889ம் ஆண்டு, இந்திய வேளாண்மையில் வேதியியலைப் புகுத்த, ஆங்கில அரசுக்கு ஆலோசனை வழங்க, இந்திய அரசுக்கான செயலாளராக நியமிக்கப்பட்டவர்.

இங்கிலாந்திலுள்ள ராயல் வேளாண்மை நிறுவனத்துக்கு அளித்த அறிக்கையில் வோல்க்கர் இப்படி குறிப்பிட்டிருக்கிறார்:

இந்திய வேளாண்மை ஒட்டுமொத்தமாக மிகவும் பழமையானது என்றும் பிற்போக்கானது என்றும் கருதுவதில் எனக்கு உடன்பாடு கிடையாது. பெரும் பகுதிகளில், அதை மேலும் செழுமையடையச் செய்வது தேவையற்ற ஒன்று. இந்திய வேளாண்மையில் மேம்பாடு செய்வதை விட, ஆங்கில வேளாண்மையில் மேம்பாடு செய்ய பரிந்துரை செய்யலாம்.

சாதாரண வேளாண்மை நடைமுறையில், நிலத்தை களைகள் இல்லாமல் வைத்துக் கொள்வதில், தன்னிச்சையான நீர்ப்பாசன முறைகளை பின்பற்றுவதில், மண்வளம் பற்றிய அறிவியல், எப்போது விதைக்க வேண்டும், எப்போது அறுவடை செய்ய வேண்டும் என்பது குறித்த அனுபவத்தில் இந்திய வேளாண்மையை விட சிறந்த ஒன்றை கண்டுபிடிப்பது கடினமான செயல். மாற்றுப் பயிர்முறை, கலப்பு பயிர்முறை ஆகியவை குறித்த அவர்கள் அறிவு அற்புதமானது. இப்படியொரு செம்மையான வேளாண்மை முறையை இதுவரை கண்டதில்லை என அடித்துச் சொல்வேன்..”

என்கிறார் வோல்க்கர். அதனால்தான், உலகப் போருக்கு முன்புவரை ஐரோப்பாவுக்கு கோதுமை ஏற்றுமதி செய்துவந்ததில் இந்தியா முக்கிய பங்கு வகித்தது.

”1873ல் சூயஸ் கால்வாய் திறக்கப்பட்ட பின்னர், முதன்முதலாக கோதுமை இந்தியாவிலிருந்து வந்தது. இதற்கு காரணம், தங்கள் ஆதிக்கத்துக்கு உட்பட்டிருந்த ஒரு பகுதியிலிருந்து மலிவான விலையில் தொடர்ந்து கோதுமையை பெற பிரிட்டிஷ் வியாபாரிகள் வலியுறுத்தியதுதான். அதனால்தான் தங்கள் பேரரசுக்கு தொடர்ந்து உறுதியான கோதுமை பெற உகந்த இடமாக இந்தியாவை, பிரிட்டன் கருதியது. இதனையடுத்து நூற்றாண்டுகளாக விவசாயிகள் பயிர் செய்து வந்த சிந்து, கங்கை நதிப்பள்ளத்தாக்குகளில் கால்வாய்களையும், இருப்புப்பாதைகளையும் போடுவதில் தொழிற்சாலை பெருமுதலாளிகள் இறங்கினர்…” என்கிறார் பான் போர்கன்.

பல நூற்றாண்டுகளாக விவசாயிகள் தங்களுடைய சொந்த நிலத்தில், தாங்கள் பயிரிட்ட தானியத்தில் இருந்து, சிறந்த விதைகளை தேர்ந்தெடுத்து, பிரித்து, பாதுகாத்து, மீண்டும் விதைத்து, இயற்கை தன் போக்கிலேயே இழந்த உயிர்சத்துக்களை மீண்டும் பெற்றிட அனுமதித்து வந்திருக்கிறார்கள். 

ஒரேவார்த்தையில் சொல்ல வேண்டுமானால், பாரம்பரிய வேளாண்மை முறைகள் கலப்பு மற்றும் மாற்றுப் பயிர் முறைகளை அடிப்படையாகக் கொண்டிருந்தது. உதாரணமாக, பயறு வகைகள் பூமிக்கு அளிக்கும் நைட்ரஜன் சத்து, அடுத்ததாக பயிரிடப்படும் தானிய வகைகளின் விளைச்சலுக்கு பெருமளவு உதவியது.

இதற்கு மாற்றானதுதான் பசுமைப் புரட்சி. இது ஒரே மாதிரியான ஓரினப் பயிர்களை அடிப்படையாகக் கொண்டிருந்தது….

அதனால்தான் பயங்கரமான பஞ்சம் நிலவிய காலத்திலும் கூட, இந்தியாவெங்கும் ஒவ்வொரு வீட்டிலும் விதைகள் பாதுகாத்து வைக்கப்பட்டன; விதைகள் இல்லாமல் உணவு உற்பத்தி தடைப்பட்டு விடக் கூடாது என்ற நோக்கம்தான் இதற்கு காரணம்.

புரிகிறதா? இப்படி இனாமாக வயல்களில் இருந்து கிடைத்து வந்த விதைகளைத்தான், விலை கொடுத்து வாங்கும் பொருளாக பசுமைப் புரட்சி மாற்றியிருக்கிறது. அதுமட்டுமல்ல, விதைகளை வாங்குவதற்காக ஒவ்வொரு நாடும் சர்வதேசக் கடன்களை பெற வேண்டியிருந்தது; பெற்றே ஆக வேண்டும் என உலகவங்கி நிர்பந்தித்தது.

இதன் தொடர்ச்சியாக விவசாயிகள் விதைகளை பயன்படுத்த வங்கிக்கு படை எடுத்தனர். வேறெதற்கு கடன் வாங்கத்தான். ஆனால், ரவி இதை மறுக்கிறார். இதற்கான பதிலை அடுத்தடுத்த பகுதிகளில் பார்ப்போம்…

இப்படி இருந்த இந்திய வேளாண்மை, ஏன் பசுமைப் புரட்சிக்கு சென்றது? இந்தக் கேள்விக்கான விடையை பார்ப்பதற்கு முன், பசுமைப் புரட்சியை எந்த சூழலில் அமெரிக்கா (சந்தேகமே வேண்டாம். அமெரிக்காவின் கண்டுபிடிப்புத்தான் இது) உருவாக்கியது என சுருக்கமாக பார்த்துவிடுவோம்.

முதல் உலகப் போருக்கும், ‘சுதந்திரத்துக்கும்’ இடைப்பட்ட காலத்தில், உலகப் பணவாட்டத்தின் காரணமாக ஏற்பட்ட ஏற்றுமதி சரிவு, பொருளாதர வீழ்ச்சி, 2ம் உலகப்போரின்போது கிட்டத்தட்ட முழுவதுமாக நொடிந்துப்போன கப்பல் போக்குவரத்து,

மும்பை கப்பல் தொழிலாளர் தோழர்களின் போராட்டம், எழுச்சி நினைவுக்கு வருகிறதா? அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியையும் இங்கே நினைவுப் படுத்திக் கொள்ளுங்கள்…

போன்ற காரணங்களால், இந்திய வேளாண்மைக்கு பின்னடைவு ஏற்பட்டது.

இதை மீட்டெடுப்பதற்கான சூழலியல் மாற்று மற்றும் தற்சார்பு குறித்து, ‘தலைவர்கள்’ ஆராய ஆரம்பித்தார்கள். 1942 – 1946 வரை தடைசெய்யப்பட்டிருந்த ‘மகாத்மா’ காந்தியின் ‘அரிஜன்’ பத்திரிகையில், 1946 – 47ல் வேளாண் பற்றாக்குறையை அரசியல் ரீதியாக எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என பல கட்டுரைகள் வெளியாகின.

உள்ளூர் வளங்களை பயன்படுத்தி எப்படி அதிகமான உணவை உற்பத்தி செய்ய வேண்டும் என்று மீரா பென், குமரப்பா (ரவி சீனிவாஸ் குறிப்பிட்டுள்ளது இவரைத்தான்), பியாரேலால் ஆகியோர் கட்டுரைகளை எழுதினார்கள்.

//ஆனால் ஜே.சி.குமரப்பா போன்ற காந்தியர்கள் அதற்கு முன்பே இந்தியாவில் எத்தகைய வேளாண்மை வேண்டும் என்பதை எழுதியிருந்தனர். குமரப்பா என்ன எழுதினார் என்பது இந்தப் பொய்யர்களுக்கு தெரியுமா.//

என ஆவேசத்துடன் கீ போர்டை தட்டியபடி ரவி கேட்கிறார். கஷ்டம். ரொம்ப ரொம்ப கஷ்டம். குமரப்பா சொன்னது இந்திய வேளாண்மையை அப்படியே பின்பற்ற வேண்டும் என்றுதான். ஆனால், ரவி இதற்கு மாற்றான பசுமைப் புரட்சிக்கு கொடி பிடிக்கிறார்!! முன்னுக்குப் பின் முரண்.

சும்மா, நான்கு பெயர்களை தெரிந்து வைத்துக் கொண்டு ‘எதிர்வினை’ புரியக் கூடாது ரவி.

இந்த சூழலில்தான் சத்தமில்லாமல் அமெரிக்க நிறுவனங்களிலும், மானிய அமைப்புகளிலும் வேளாண்மை வளர்ச்சி குறித்து வேறுவித பார்வை உருவெடுத்துக் கொண்டிருந்தது. அதாவது ஆசிய உற்பத்தி முறைக்கு எதிரான மாற்றுப் பார்வை. இந்தப் பார்வையைத்தான் மூன்றாம் உலக நாடுகள் அனைத்தும் பின்பற்ற வேண்டும் என்ற முடிவுடன் அமெரிக்கா களம் இறங்கியது.

இப்படி வேறு பாதைக்கு உலக வேளாண்மையை கொண்டு செல்ல வேண்டும் என அமெரிக்கா தீர்மானித்ததற்கு காரணம் என்ன தெரியுமா?  கம்யூனிஸம்!

ஆமாம், பசுமைப் புரட்சிக்கு காரணம் தோழர் மாசேதுங் மீது அமெரிக்காவுக்கு இருந்த பயம்தான்!!!!

தொடரும்

இதற்குதானே ஆசைப்பட்டாய் பிரபாகரா…

ஜனவரி 29, 2009

கேள்வி: தமிழீயத்திற்கானதாக என்ன அரசியல் அமைப்பை நீங்கள் கருதுகிறீர்கள்?

பிரபாகரன்: அது தமிழீழத்தின் ஒரு சோசலிச அரசாக இருக்கும். மேலும் மக்களால் ஆதரிக்கப்படும் ஒரு தனி அரசியல் கட்சி மட்டும் அங்கிருக்கும். நான் பலகட்சி ஜனநாயகத்துக்கு எதிரானவன். அந்த ஒரு கட்சி ஆட்சி மூலமாகத்தான் ஈழத்தை துரிதமாக நாங்கள் முன்னேற்ற முடியும். ஒரு சோசலிச அமைப்பில் மக்களுடைய தேவைகள் மிக முக்கியமானவை.

கேள்வி: நாடாளுமன்ற ஜனநாயகத்தை வைத்திருப்பீர்களா?

பிரபாகரன்: இல்லை. மக்கள் தேர்ந்தெடுக்கும் ஒரே கட்சி மட்டும் உள்ள யுகோஸ்லாவியாவில் உள்ளதைப் போன்றதொரு பாணியிலான மக்கள் ஜனநாயகமாக இருக்கும்.

கேள்வி: டெலோ மீது ஒரு யுத்தத்தை நீங்கள் தொடுப்பதற்கான காரணங்கள் என்ன? தீவிரவாதிகளிடையேயான ஒற்றுமையின்மை உங்கள் இயக்கத்தை பலவீனப்படுத்தும் என்று நீங்கள் கருதவில்லையா?

பிரபாகரன்: எங்கள் போராட்டத்தில் ஒரு ஒருமைப்பட்ட அணுகுமுறையை நாங்கள் மேற்கொள்ள வேண்டும். எங்களுக்குள் நிலவும் எந்த ஒற்றுமையின்மையும் தமிழ் இயக்கம் முழுவதையும் பலவீனப்படுத்தும். எனது கருத்தின்படி போராட்டத்துக்கு தலைமையேற்க ஒரேயொரு தீவிரவாத குழு மட்டுமே இருக்கவேண்டும். மேலும் சிரீலங்கா இராணுவ தாக்குதல்கள் பலவற்றை எங்கள் புலிகள் மட்டுமே முறியடிக்க முடிந்தது. ஒரு ஒருமைப்பட்ட தனி இயக்கத்தோடு போரிடுவது சிரீலங்கா இராணுவத்துக்கு ஆபத்தானதாக இருக்கும். இப்போது ஒரே ஒருமைப்பட்டதாக புலிகள் இயக்கம் இருக்கிறது.

– 1986ம் ஆண்டு ஜூன் மாதம், ஆங்கில ‘இந்தியா டுடே’ மாதமிருமுறை இதழுக்கு பிரபாகரன் அளித்த பேட்டியிலிருந்து

பிரபாகரனுக்கு

ஈழ மக்கள் மருத்துவ வசதியில்லாமல் தொற்று நோய்க்கும், இலங்கை இராணுவத்தின் தாக்குதலுக்கும் ஆளாகி தவித்து வரும் நேரத்தில், இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

உன்னை தோழர் என்று அழைக்கவோ, போராளி என ஒப்புக் கொள்ளவோ மனம் மறுக்கிறது. பசி, பட்டினியுடன் அடுத்த விநாடி உயிர் வாழ்வோமா என்ற நிச்சயமற்ற நிலமையில் ஒரு இனமே அழிந்து கொண்டிருக்கும்போது, பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகி சகோதரிகள் கதறிக் கொண்டிருக்கும்போதுஎப்படி உன்னை புரட்சியாளனாக, மதிக்க முடியும்?

ஈழத்தமிழர்களின் இன்றைய நிலமைக்கு யார் காரணம் என எப்போதாவது உனக்குள் கேட்டிருக்கிறாயா? சிங்கள இனவெறிதான் இதற்கு காரணம்இதுகூடவா தெரியாது என்று சொல்லிவிட்டு போகாதே. சிங்கள இனவெறி மட்டுமல்ல, உனது பாசிச நடவடிக்கைகளும் இன்றைய ஈழ நிலமைக்கு காரணம். இதுதான் உண்மை.

உன்னையும், உனது இயக்கத்தையும் வளர்த்து ஆளாக்கியது யார்? சத்தியமாக ஈழத்தமிழர்களல்ல. இந்திய உளவுப்படை! அதனால்தான் ஆரம்பம் முதலே உனது பயணம் தெற்காசிய பிரதேசத்தின் நாட்டாமையாக வலம் வரத் துடிக்கும் இந்திய ஆளும் வர்க்கத்தின் உதவியை எதிர்பார்த்து நிற்பதாக அமைந்துவிட்டது. இது போதாதென்று உலக போலீஸ்காரனான அமெரிக்க ஏகாதிபத்தியத்திடம் பிச்சை வேறு

ஏன் பிரபாகரா, குள்ளநரிகளும் ஓநாய்களும், எதற்காக, எதன் பொருட்டு உதவி செய்யும், வளர்த்து ஆளாக்கும் என்ற தெளிவில்லாமலா ஒரு இயக்கத்தை கட்டி எழுப்பினாய்? அதுசரி, ‘விடுதலைப் புலிகள்இயக்கத்துக்கு என்ன அரசியல் தெளிவு, சித்தாந்தம் இருக்கிறது? உனக்கு அரசியல் ஆலோசகராக இருந்த பாலசிங்கம் ஒரு போலி கம்யூனிஸ்ட். இந்திய உளவுத்துறையின்முழுநேர ஊழியனாகபணிபுரிந்த ஆள். அப்புறம் பழ. நெடுமாறன் வகையறா. பாசிஸ்ட் இந்திராகாந்தியை ஆதரித்த பழ. நெடுமாறனால் என்ன விதமான அரசியல் தெளிவை உனக்குள் ஏற்படுத்தியிருக்க முடியும்? தமிழக நக்சல்பாரிகளை கொடூரமாக தாக்கிய தேவாரம், மோகன்தாஸ் போன்ற அடியாட்களை பராமரித்த எம்.ஜி. இராமச்சந்திரனை புகழ்ந்த பழ. நெடுமாறானால் எப்படி போராளிகளுக்கு சித்தாந்தத்தை கற்று தந்திருக்க முடியும்?

அதனால்தான் உன்னால் உலகம் முழுக்க அரசியல்ரீதியான ஆதரவை திரட்ட முடியவில்லை. அரசியல் உரிமையை வென்றெடுக்க முடியவில்லை. எழுதப்பட்ட, எழுதப்படாத வரலாற்று நெடுகிலும், ‘ஆயுதங்களிலிருந்து அதிகாரம்தான் பிறக்கிறது, சித்தாந்தமல்ல. மக்களை திரட்டி அவர்களின் ஒத்துழைப்போடு நடத்தப்படுவதுதான் புதிய ஜனநாயக் புரட்சியாக இருக்கும்’ என்று காணப்படுகிறதேஇதை நீ கற்காமல் போனதால்தான், உலகிலுள்ள புரட்சிகர இயக்கங்களுடன் உன்னால் தொடர்பு கொள்ளவோ, ஆதரவு திரட்டவோ முடியவில்லை.

புரட்சிகர நடவடிக்கையில் உன்னால் ஏன் இறங்க முடியாமல் போயிற்று?

காரணம் உனது பிறப்பு! (புலிகள் இயக்கத்தின் தோற்றத்தை குறிப்பிடுகிறேன்). எல்.டி.டி., எனப்படும் புலிகள் இயக்கம் வடக்கு மாகாணமான யாழ்பாணம் வளைகுடா பிராந்தியத்தை தளமாக கொண்டுதானே செயல்பட ஆரம்பித்தது. மேல்சாதி முதலாளித்துவ, குட்டி முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ, பணக்கார விவசாயப் பின்னணியில் உருவான, உனது இயக்கத்தால், ஏகாதிபத்திய, பாசிச அரசாங்கத்தின் வால் பிடித்தபடி செல்லத்தான் முடியும். ஈழ மக்களை இப்படியான அவலநிலைக்குத்தான் கொண்டுவந்து நிறுத்த முடியும்.

தமிழக ஓட்டுக் கட்சிகள் என்னை ஆதரிக்கிறார்கள் என சந்தோஷப்படாதே. உனது பிறப்பை போலவே (இங்கும் புலிகள் இயக்கத்தின் தோற்றத்தை குறிப்பிடுகிறேன்) தமிழக ஓட்டுப் பொறுக்கிகளின் பிறப்பும் மேல்சாதி முதலாளித்துவ, குட்டி முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ, பணக்கார விவசாயப் பின்னணியில் உருவானவைதான். அதனால்தான் ஓட்டுக் கட்சிகள் உன் புகழ்பாடுகிறார்கள்.

பிரபாகரா, ஈழத்தில் சொந்தக் காலிலும், வெளியில் புரட்சியாளர்களையும், பரந்துபட்ட மக்களையும் சார்ந்து நிற்கும் யுத்த தந்திரங்களை நீ கற்றிருந்தால், இன்று ஈழத்தின் நிலமையே வேறாக இருக்கும். ஆனால், இந்த போர்த்தந்திரங்களை உனது அரசியல் ஆலோசகராக தன் வாழ்நாள்வரை இருந்த பாலசிங்கம் சொல்லித்தந்திருக்க மாட்டான். காரணம் முன்பே சொன்னபடி பாலசிங்கமே ஒரு போலி கம்யூனிஸ்ட். அப்படியே தப்பித்தவறி பாலசிங்கம் உனக்கு இதையெல்லாம் சொல்ல வந்திருந்தாலும் நீ அதை செவிகொடுத்து கேட்டிருக்க மாட்டாய். காரணம், நீ முகஸ்துதியால் உருவானவன்.

பாசிஸ்டுகளிலேயே இரண்டுவகை உண்டு. ஒரு பிரிவினர் முகஸ்துதியால் சூழ்ந்திருப்பர். இன்னொரு பிரிவினர் முகஸ்துதியால் உருவாக்கப்படுவர். நீ இரண்டாவது வகையை சேர்ந்தவன்.

வரலாற்றில் தனிநபர்களின் பாத்திரம் குறித்த இயக்க இயல் கண்ணோட்டம் புரட்சியாளர்களுக்கு உண்டு. சரித்திரம் சில நாயகர்களை உருவாக்குவது போலவே, சரித்திரத்தின் போக்கை மாற்றும் பங்கும் இவர்களுக்கு உண்டு. இந்த விஷயம் உனக்கு பொருந்தாது.

காரணம், வசந்த் அண்ட் கோ விளம்பரத்தில் எல்லாம் கழிசடை வசந்தகுமார் சிரித்தபடி போஸ் கொடுப்பது போலவே, எல்லா புகைப்படத்துக்கும் நீ போஸ் கொடுக்கிறாய். இந்தியாவில் நீ இருந்த காலத்தில், தமிழகத்திலுள்ள அனைத்து பத்திரிகைகளிலும் உனது பேட்டிகளும், செய்திகளும் வந்தன. அந்த விஷயத்தில் பாலசிங்கம் ஒரு திறமையான பி.ஆர்.வோ.வாக செயல்பட்டான். கிட்டத்தட்ட ஜூனியர்விகடன், உனது பிரச்சார பீரங்கியாக இருந்தது. இதெல்லாம் உனக்கு கிடைத்த அங்கீகாரம் என நினைத்தாயா? அடப்பாவமேபிரபாகரா, இதற்கெல்லாம் ஆதாரமாக இந்திய உளவுத்துறை இருந்ததப்பா. அப்போது நீ, அவர்களது செல்லப் பிள்ளையல்லவா? அதனால் உன்னை சிங்காரித்து அலங்கரித்தார்கள். விதவிதமாக படம்பிடித்தார்கள். ஊடகங்கள் வழியாக உன்னை குஷிப்படுத்தினார்கள். இப்போது இந்திய உளவுத்துறைக்கு நீ வேண்டாதவனாகிவிட்டாய். எனவே தொடர்புசாதனங்களும் உனக்கு எதிராக இருக்கின்றன. இதை புரிந்து கொள்ளாமல் இப்போதும் நீ, இந்தியா ஏதாவது செய்யுமா என ஏக்கத்துடன் காத்திருக்கிறாய்.

ஒன்றை புரிந்து கொள் பிரபாகராஉண்மையான புரட்சியாளனும், போராளியும் ஒருபோதும் தன்னை முன்னிலைப்படுத்த மாட்டான். இயக்கத்தையே முன்னிருத்துவான். புரட்சியாளர்களின் அகராதியில் எப்போதுமே, ‘நான்கிடையாது. ‘நாங்கள்தான்.

உனது புகழ்பெற்ற வாசகங்கள் என்ன? யுத்த முனையில் எதுவும்எனதுஉத்தரவுபடியே நடக்கும். அவசர முடிவுகள் எடுக்க அங்கேயுள்ளஎனதுதளபதிகளுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் எல்லோரும்நான்எப்படி சிந்திப்பேனோ, அப்படி சிந்திக்க பயிற்சி அளிக்கப்பட்டவர்கள்…”

அடேங்கப்பா, ஒரு இயக்கத்தையே அடியாள் படையைப் போல் நடத்தும் வல்லமை பாசிஸ்டுகளுக்கு மட்டுமே கைவந்த கலை. அதனால்தான் அது, உனது கலையாகவும் இருக்கிறதா?

இலங்கையின் அதிபனாக இருக்கும் மகிந்த ராஜபக்சவுக்கும் உனக்கும் அடிப்படையில் பெரிய வேறுபாடுகள் இருப்பதாகத் தெரியவில்லை. ராஜபக்சே ஒரு சிங்கள பிரபாகரன் என்றால், நீயொரு தமிழ் ராஜபக்சே. ஒரே தளத்தில், ஒரே சிந்தனையில் உள்ள நீங்கள் இருவரும் (இரண்டு பாசிஸ்டுகளும்) மோதுவதால் ஒரு இனமே சீர்குலைந்து போயிருக்கிறது.

அடிக்கடி நீ சோசலிசம், மக்கள் ஜனநாயகம் என உச்சரித்து வார்த்தை விளையாட்டை நடத்தலாம். ஆனால், இட்லர் கூட தேசிய சோசலிசம், கட்டுப்பாடு, ஒழுங்கு, தேசிய அவமானத்துக்கு பழிவாங்குவது, தேசிய கெளரவத்தை நிலை நாட்டுவது என்ற பெயரில்தான் ஆட்சிக்கு வந்தான் இதை வரலாறு அறியும் 

மீண்டும் அழுத்தம்திருத்தமாக சொல்கிறேன். எந்தவொரு இராணுவ வெற்றியும் நிரந்தரமானதல்ல. இது உனக்கு மட்டுமல்ல, இலங்கை இராணுவத்துக்கும் பொருந்தும்.
என்றைக்குமே நீ, தமிழ் மக்கள் மத்தியில் உன் அரசியல் கொள்கையை முன்வைத்து ஆதரவு திரட்டியது கிடையாது. உனக்கு போட்டியான அமைப்புகள் புரிந்த மக்கள் விரோதச் செயற்பாடுகளை முன்நிறுத்தியே உனக்கான ஆதரவைத் திரட்டினாய். அதே போன்று இலங்கை இராணுவம் ஏற்படுத்துகின்ற அழிவுகளையும் இனஒடுக்கு முறையையும் பிரச்சாரப்படுத்தியே உனது இருப்பின் அவசியத்தை வலியுறுத்துகிறாய். இந்தப் போக்கினால்தான் இன்று தமிழ் இனத்துக்கு அழிவை தேடித் தந்திருக்கிறாய்.
இனியாவது புரட்சியாளனாக மலர முயற்சி செய். அதுதான் இதுவரை நீ செய்த படுகொலைக்கு பரிகாரமாக இருக்கும்
பெரும்பாலான தமிழக மக்கள், ஈழத்தமிழர்களுக்கு உணர்வுப்பூர்வமாகவும், உள்ளப்பூர்வமாகவும் ஆதரவு தருகிறார்கள்.   புரட்சிகர சக்தியாக மலர்ந்து இதை ஒன்று திரட்டு. மார்க்சிய – லெனினிய – மாசேதுங் பாதையே ஈழத்தமிழர்களுக்கு உண்மையான சுதந்திரத்தை பெற்றுத்தரும்.

– சூன்யம்

பின்குறிப்பு : 1982 நவம்பர் 27ல் தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் போராளி லெப்.சங்கர் உயிரிழந்ததன் ஞாபகமாக, ஆண்டுதோறும் உயிரிழந்த (விதைக்கப்பட்ட) விடுதலைப் புலிகள் அனைவரது தினமாக மாவீரர் தினம் நினைவு கூரப்படுகிறது. பிரபாகரனின் வருடாந்தஅறிக்கையும் ந்தத் தினத்தில் வெளியிடப்படுவதால் இந்நாள் விடுதலைப் புலிகளைப் பொறுத்த வரை மிக முக்கிய தினமாக அமைகிறது.

1982 ல் முதல் மாவீரன் உயிரிழந்த போதும், 1989 முதலேயே மாவீரர் தினம் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஒரு கலாச்சார வடிவமாக்கப்பட்டது. ஆனால், 1976ல் முன்வைக்கப்பட்ட தமிழீழப் பிரகடனத்துக்கும் பிரபாகரனின் மாவீரர் உரைக்கும் அடிப்படையில் எந்த வேறுபாடும் இருப்பதில்லை. தமிழ் ஊடகங்கள் குறிப்பிடும் அளவுக்கு மாவீரர் தின உரை முக்கியத்துவமானதாகவும் இருப்பதில்லை. அவ்வுரை பெரும்பாலும் கடந்த காலத்தின் தொகுப்பாகவே இருக்கிறது. இந்தத் தொகுப்பை பார்த்தாலே எந்தளவுக்கு சித்தாந்தம் இல்லாமல் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள் என்பது புரியும்.

நவம்பர் 1992: இந்த மிக முக்கியமான கடினமான நிலையில் நாங்கள் என்ன செய்ய முடியும்? எங்களுடைய மக்களையும் மண்ணையும் காப்பாற்றுவதற்கு போராடுவதைத் தவிர வேறுவழி உண்டா? எங்கள் சுதந்திரத்தை வெற்றி கொள்ள நாங்கள் போராட வேண்டும். பேரம் பேசுவதற்கு சுதந்திரம் விற்பனைப் பொருளல்ல. அது எமது உரிமை இரத்தம் சிந்தியே அதனை வெற்றி கொள்ள முடியும். எதுவும் யாரும் எங்களைத் தடுக்க முடியாது. நாங்கள் தொடர்ந்தும் உறுதியுடன் போராடுவோம்.
நவம்பர் 1993: சுதந்திர நாட்டை பெற்றுத்தர மக்களின் ஆணையைப் பெற்ற தமிழ் அரசியல் கட்சிகளும் அரசியல் சுதந்திரத்தைப் பெற்றுத் தருவதாக போராடிய ஆயுதக் குழுக்களும் தமது போராட்டத்தைக் கைவிட்டுள்ளன. மக்களுக்கு நம்பிக்கைத் துரோகம் இழைத்துள்ளன. எங்கள் இயக்கம் மட்டுமே கொள்கையில் தொடர்ந்தும் உறுதியாக உள்ளது. எமது போராட்டத்தின் உணர்வுபூர்வ மான நோக்கம் மட்டும் வெற்றியைப் பெற்றுத் தராது. எங்கள் தீர்மானத்தில் நாங்கள் பலமாக உறுதியாக இருக்க வேண்டும். போர்க் கலையில் திறமையானவர்களாக இருக்க வேண்டும்.
நவம்பர் 1994: தமிழ் மக்களுடைய தேசியப் பிரச்சனைக்கு சமாதானத் தீர்வைக் காணுவதற்கான அடிகளை எடுத்தால் நாங்கள் சந்திரிகா அரசுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம்.
நவம்பர் 1995: தமிழ் தேசத்திற்கான இராணுவ பலத்தை கட்டமைப்பது தவிர்க்க முடியாதது. இன்றைய வரலாற்றின் தேவையும் கூட. இளம் தலைமுறையினர் தாமதமின்றி எமது விடுதலை இயக்கத்தில் இணைய வேண்டுமென்று அழைப்பு விடுக்கிறேன். எவ்வளவு விரைவில் அவர்கள் வந்து இணைகிறார்களோ அவ்வளவு விரைவில் எங்கள் போராட்டத்தின் இலக்கை நாம் அடைய முடியும்.
நவம்பர் 1996: ஆக்கிரமிப்புப் படைகளை எமது மண்ணில் இருந்து வெளியெற்றும் வரை எங்கள் தேசம் விடுதலை அடையும் வரை தொடர்ந்தும் போராடுவோம்.
நவம்பர் 1997: இராணுவ வன்முறைப் பாதையைக் கைவிட்டு சிங்களம் தமிழ் மக்களுக்கு நீதி வழங்குமென நாம் எதிர்பார்க்கவில்லை. நாம் எமது விடுதலை இலட்சியத்தை அடைய தொடர்ந்து போராடுவோம்.
நவம்பர் 1998: தமிழீழத் தனியரசே தமிழ் மக்களின் இறுதியான தீர்வாக அமையுமென உறுதியாக நம்பி நாம் எமது லட்சியப் போரைத் தொடருவோம்.
நவம்பர் 1999: சுதந்திர தமிழீழ தனியரசே எமது தேசிய பிரச்சினைக்கு இறுதியான உறுதியான தீர்வு என்பதை எமது மக்கள் எப்பொழுதோ தீர்மானித்துவிட்டார்கள். எமது போராட்ட இலக்கு ஒளிமயமான எதிர்காலமாக எமது கண்களுக்குத் தெரிகிறது. நாம் நம்பிக்கையுடன் எமது இலட்சியப் பயணத்தைத் தொடர்வோம்.
நவம்பர் 2000: சமாதான பேச்சுக்கு உகந்ததாக சமாதான சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும். சிங்கள தேசம் இனவாதப் பிடியிலிருந்து விடுபடாமல் தமிழர்களுக்கு எதிரான அடக்கு முறையைதை; தொடருமானால் நாம் பிரிந்து சென்று தமிழீழத் தனியரசை அமைப்பதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை.
நவம்பர் 2001: பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதாயின் எமது இயக்கம் மீது விதிக்கப்பட்டு உள்ள தடை நீக்கப்பட வேண்டும். போர் நெருக்கடிகளும் பொருளாதாரத் தடைகளும் நீங்கிய இயல்பான இயல்பான அமைதியான சூழ்நிலையில் தான் பேச்சுக்கள் நடைபெற வேண்டும். தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு சமாதான வழிமூலம் தீர்வு காணப்பட்டால் தமிழர்களும் சிங்களவர்களும் ஏனைய சமூகத்தினரும் இந்த அழகிய தீவில், ஒத்திசைவாக, ஒன்றுகூடி வாழ முடியும். மறுத்தால் தமிழர்களாகிய நாம் பிரிந்து சென்று தமிழீழத் தனியரசை அமைப்பதைத் தவிர எமக்கு வேறு வழி எதுமில்லை.
நவம்பர் 2002: நம்பிக்கையூட்டும் நல்லெண்ண சூழ் நிலையில், அரசுபுலிகள் மத்தியிலான பேச்சுக்கள் முன்னேற்றம் அடைந்து செல்வது எமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. காலத்திற்கு ஏற்ப, வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்டத்தின் வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட லட்சியம் மாறப்போவதில்லை. சுமாதானச் பேச்சுக்களை பேரினவாத சக்திகள் குழப்பிவிட்டால், அது தமிழ் மக்களைத் தனியரசுப் பாதையில் இட்டுச் செல்லும்.
நவம்பர் 2003: சமரசத்திற்கும் சமாதான முன்னெடுப்பு களுக்கும் எம்மால் முடிந்தளவு நாம் முயற்சித்து வருகிறோம். சிங்கள இனவாத ஆளும் வர்க்கம் தொடர்ந்தும் எமது மக்களின் உரிமைகளை மறுத்து, சமரசத் தீர்வுகளை எதிர்த்து ஒடுக்கு முறையைத் தொடருமானால் தனியரசைக் கட்டி எழுப்புவதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை.
நவம்பர் 2004: நாம் முன் வைத்த இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத் திட்டத்தின் அடிப்படையில், நிபந்தனையற்ற முறையில், காலம் தாமதிக்காது பேச்சுக்களை ஆரம்பிக்குமாறு வேண்டுகோள்விடுகிறோம். எமது இந்த அவசர வேண்டுகோளை நிராகரித்து, காலத்தை இழுத்தடித்தால் நாம் எமது தேசத்தின் சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதைத் தவிர வேறுவழயில்லை.
நவம்பர் 2005: நியாயமான தீர்வுத் திட்டத்தை அரசாங்கம் முன் வைக்க வேண்டும். காலத்தை இழுத்தடிக்க முற்படுமானால் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை எமது தாயகத்தில் தன்னாட்சியை நிறுவும் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்.
நவம்பர் 2006: சிங்கள ஆட்சியாளர்கள் தமிழரின் தேசியப் பிரச்சினைக்குச் சமாதான வழியில் ஒரு நியாயமான தீர்வை ஒரு போதும் முன் வைக்கப்போவதில்லை என்பது இன்று வெட்ட வெளிச்சமாகி யிருக்கிறது. எனவே சுதந்திரத் தழிழீழத் தனியரசை நிறுவுவதென இன்றைய நாளில் நாம் தீர்க்கமாக முடிவு செய்திருக்கிறோம்.
நவம்பர் 2007: சிங்கள தேசத்தை நம்ப முடியாது என்பது உறுதியாகிவிட்டது. இனஅழிப்பைத் தொடரும் சிங்கள அரசிற்கு இராணுவப் பொருளாதார உதவிகள் வழங்குவதை அடியோடு நிறுத்தி, சர்வதேசச் சமூகம் எமது மக்களின் சுயநிர்ணய உரிமையையும் இறையாண்மையையும் ஏற்று அங்கீகரிக்க வேண்டும். நிறைந்துகிடக்கும் அனைத்து வளங்களையும் ஒன்றுதிரட்டி, எமது விடுதலைப் போராட்டத்திற்கு நீங்கள் தாருங்கள். நாம் எமது விடுதலைப் பாதையிலே தொடர்ந்து போராடுவோம்.
மாவீரர் தின உரைகளின் தொகுப்பு, இந்த இணையதளத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. நன்றி: த.ஜெயபாலன்  http://thesamnet.co.uk/?p=4866

சாரு மஜூம்தாரின் எட்டு ஆவணங்கள் (1965 – 67)

ஜனவரி 27, 2009

சாரு மஜூம்தார்இது ஒரு தனிப்பட்ட நபரின் பெயர் மட்டுமே அல்ல. இந்தப் பெயருக்கு பின்னால் பல விஷயங்கள் அடங்கியிருக்கின்றன. இந்தப் பெயர் உணர்த்தும் வரலாறும், எழுச்சியும் சாதாரணமானவை அல்ல. அதிகாரத்துக்கு எதிரான குரலாகவும், தன்மானம்சுயமரியாதைக்கு அர்த்தமாகவும், உரிமையை நிலைநாட்ட போராடும் உத்வேகத்தையும் அளிக்கும் வார்த்தையாக இந்தப் பெயர்தான் இருக்கிறது. சொல்லப்போனால் இந்தப் பெயருக்கு பின்னால்தான் இந்த நாட்டின் புரட்சியே அடங்கியிருக்கிறது.

நக்சல்பாரிஎன ஆளும்வர்க்கமும், பன்னாட்டு முதலாளிகளும் இன்று மட்டுமல்ல, இனி எத்தனை நூற்றாண்டுகளானாலும் பயத்துடன் உச்சரிக்கப் போகிறார்களேஅந்தநக்சல்பாரிஎன்ற சொல்லுக்கு பின்னால் நிற்கும், இருக்கும் மனிதர், இந்த சாரு மஜூம்தார்.

1968ம் ஆண்டு மேற்குவங்க மாநிலத்தில் ஆளும் ஐக்கிய முன்னணியின் கூட்டணி அரசில் கம்யூனிஸ்டுகளும் இடம் பெற்றிருந்த போது டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள நக்சல்பாரி என்னும் கிராமத்திலிருந்து ஒரு குரல் சீறி வெடித்தது. அந்தக் குரல் சாருமஜூம்தாருடையது. கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டாம் மட்ட தலைவராக இருந்த இவரது குரலை அவரது கட்சியே எதிர்பார்க்கவில்லை. பணக்காரர்களிடம் இருக்கும் நிலங்களைப் பிடுங்கி ஏழைகளுக்கு பங்கிட்டுக் கொடுக்க வேண்டும். விவாசாயிகளே நேரடி நடவடிக்கையில் ஈடு பட்டு தங்களின் நிலத்தை பணக்காரர்களிடம் இருந்து எடுத்துக் கொள்வார்கள்… என அதிரடியாக சாரு அறிவித்தார். அதனை தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் பிளவு ஏற்பட்டது.

சரி, அழித்தொழிப்பு நடவடிக்கையில் சாரு மஜூம்தார் ஏன் இறங்கினார்? இப்படியொரு முடிவுக்கு அவர் வர என்ன காரணம்?

1967 மார்ச் 2ம் தேதி. அதே நக்சல்பாரி கிராமம். அங்குதான் விமல் கேசன் என்ற ஆதிவாசி இளைஞர் வசித்து வந்தார். தனது நிலத்தை விமல் கேசன் உழுவதற்கு அந்தப்பிரதேச நீதித்துறை அனுமதி வழங்கியது. ஆனால், அந்தக்கிராம நிலச்சுவாந்தர்கள், நில உரிமையாளர்கள், விமல் கேசனை தனது நிலத்தில் உழுவதற்கும், உரிமை பாராட்டவும் அனுமதிக்காமல் அவரை அடித்துத் துன்புறுத்தினர்.

இதைப் பார்த்து ஆதிவாசிகளும் விவசாயிகளும் கொதித்து எழுந்தார்கள். ஏற்கனவே அங்கு புரட்சிகர நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த சாரு மஜும்தார், தீவிரமான ஒரு கிளர்ச்சிக்கு தயாரானார். அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்ட நக்சல்பாரி மக்கள் கிளர்ந்தெழுந்தனர். விமல் கேசனுடைய நிலத்தை மட்டுமல்ல, தாங்கள் பறிகொடுத்த அனைத்து நிலங்களையும் சாரு மஜும்தாரின் தலைமையில் நக்சல்பாரி மக்கள் மீட்டெடுத்தனர்.

கிளர்ச்சி 72 நாட்கள் தொடர்ந்தது. ஒரு சப் இன்ஸ்பெக்டர், ஒன்பது விவசாயிகள் அல்லது ஆதிவாசிகள் இந்தக் கிளர்ச்சியின் போது கொல்லப்பட்டனர். நக்சல்பாரி மக்களின் அந்தக் கிளர்ச்சியே பின்னாட்களில் நிலச்சுவாந்தர்களுக்கு எதிரான போராட்டங்களுக்கும் தத்துவங்களுக்கும் பெயராகவும் அமைந்தது.

இப்படித்தான்வசந்தத்தின் இடிமுழக்கம்தோன்றியது.

ரஷ்யப் புரட்சியாளர் லெனினின் பிறந்த நாளான ஏப்ரல் 22ம் தேதி கல்கத்தவில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் நீண்ட கால மக்கள் யுத்தத்தை பிரகடனப்படுத்தி மார்க்ஸ்சிஸ்ட்லெனினிஸ்ட் கட்சியை சாரு மஜூம்தார் தொடங்கி, இன்றுடன் 40 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டன.

அவரது தலைமையின் கீழ் தமிழகத்திலும் புரட்சிகர மா – லெ குழு தோன்றியது. இந்த இயக்கத்தின் வளர்ச்சியையும், தடங்களையும் அவ்வளவு சுலபத்தில் யாராலும் மறக்கவோ, மறைக்கவோ முடியாது.

சாருமஜூம்தார் தமிழகத்துக்கு 2வது முறையாக வந்து அழித்தொழிப்பு நடவடிக்கையில் துரிதம் தேவை என அறிவித்த பிறகு பரவலாக பலர் அழிதொழிக்கப்பட, கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராக இருந்த தோழர் அப்பு காவல்துறையினரால் வேட்டையாடப்பட்டார். நக்சல்பாரிகள் சந்தித்த முதல் இழப்பும் இட்டு நிரப்ப முடியாத பேரிழப்பும் அதுதான். தோழர் கோதண்டராமன் போன்ற பக்குவம் மிக்க தலைவர்கள், சாரு மஜூம்தாரின் சொல்லுக்கு கட்டுப்பட்டு தங்கள் வேலையை விட்டுவிட்டு கிராமங்களுக்கு சென்றார்கள்.

அதுவும் எப்படிப்பட்ட வேலை? தொழிற்சங்கத்தின் ஆணிவேராக அல்லவா தோழர் கோதண்டராமன் விளங்கினார்? தொழிற்சங்கத்தை கட்டுவது எளிதான விஷயமல்ல, என்பது அமைப்பை கட்டுபவர்களுக்கு தெரியும். அப்படி கட்டி எழுப்பிய சங்கத்தை அப்படியே போட்டுவிட்டு தலைமறைவு வாழ்க்கையை தேர்ந்தெடுத்தார். பின்னர், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அன்று மட்டும் அவர் அழித்தொழிப்பு செயலில் இறங்காமல், தன்னிடமிருந்த தொழிற்சங்கத்தை வைத்து புரட்சிகர நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தால்..? பரவசமான கனவுதான். ஆனால், நடக்காமலேயே போய்விட்டது. அவரால் கட்டப்பட்ட தொழிற்சங்க அமைப்பை அதன்பின், வலதுஇடது போலி கம்யூனிஸ்டுகள் கைப்பற்றி சின்னாபின்னமாக்கிவிட்டார்கள். சரி, அது முடிந்த கதை. தமிழக நக்சல் தடத்துக்கு வருவோம்.

தோழர் அப்புவை தொடர்ந்து சீராளன், பாலன், கோவிந்தன், கண்ணாமணி போன்றோர் அடுத்தடுத்து போலீஸ் மோதலில் பலியாகி விழுந்தார்கள். எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் காவல்துறை அதிகாரியான தேவாரம் தலைமையில் நக்சல்பாரிகள் நரவேட்டையாடப்பட்டார்கள். இதில் புரட்சியாளர்களைவிட, பல அப்பாவி பொதுமக்கள்தான் பலியானார்கள். பிடிபட்ட புரட்சியாளர்கள் காவல்நிலையத்தில் சந்தித்த கொடுமைகளை எழுத்தில் வடிக்க முடியாது. ரத்தத்தில் தோய்ந்த வரலாறு அது.

தமிழ் புதின உலகில், இந்தி எதிர்ப்பு வரலாற்றை போலவே இந்த நக்சல்பாரி எழுச்சியும் இரட்டடிப்பு செய்யப்பட்டிருக்கிறது. அதனால் என்ன, என்றுமே அழியாதபடி மக்களின் மனதில் தங்கிவிட்டது. இன்றும் தர்மபுரி, வடாற்காடு மாவட்ட கிராமங்களுக்கு சென்றால் வாய்மொழி கதைகளாக அவ்வளவு நிகழ்வுகளை கேட்டறியலாம்.

இப்படியான கொந்தளிப்பும், அடக்குமுறையும் ஆளும்வர்க்கத்தினரால் கட்டவிழ்க்கப்பட்ட சூழலில், நக்சல்பாரி இயக்கத்தைத் தொடங்கிய சாருமஜூம்தார், 1972ம் ஆண்டு காவல்துறை மோதலில் கொல்லப்பட்டார். அவருடன் நக்சல்பாரி இயக்கம் முடிவுக்கு வந்துவிட்டதாக ஆளும் வர்க்கம் ஆனந்தக் கூத்தாடியது. ஆனால், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு இதன் பிறகுதான் நடந்தது என்பது அப்போதும் சரி, இப்போதும் சரி அது அறியவில்லை. கிள்ளுக்கீரையாக நக்சல்பாரிகளை பிடுங்கிவிடலாம் என்பதே அவர்களது எண்ணமாக இருக்கிறது. ஆனால், பிடுங்கி எறியவும், வெட்டிப் போடவும் நக்சல்பாரிகள் ஒன்றும் கோழைகள் அல்லவே. அவர்கள் போராளிகள். இனி எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் சரி, சமூக மாறுதல் ஏற்படும் வரை, சோஷலிசம் உருவாகும் வரை இந்த நக்சல்பாரி விதை முளைத்து கிளை பரப்பிக் கொண்டேதான் இருக்கும்.

மார்க்ஸிய – லெனினிய கொள்கையே புரட்சிக்கான வழி. அதில் எப்போதுமே யாருக்குமே மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அதற்கான வழிமுறைகளில் மாற்றம் தேவை என்ற சுய பரிசீலனைக்கு, சாரு மஜூம்தாரின் மறைவுக்கு பிறகு, மா – லெ குழுக்கள் வந்தன. அதனால்தான் அவரது அழித்தொழிப்பு கொள்கைக்கும் கட்சியின் சித்தாந்தத்துக்கும் போர் தொடங்கியது.

‘நீங்கள் கிராமங்களுக்கு செல்கிறீர்கள். விவசாயக் கூலிகளோடு இணைந்து பணி செய்து ரகசியக் குழு அமைத்து விவசாயக் கூலிகளின் உதவியோடு பண்ணையாகளை கொல்கிறீர்கள். பின்னர் அந்த கூலி விவசாயிகளை கட்சியில் இணைந்து கொண்டு தலைமறைவாகி விடுகிறீர்கள். நீங்கள் எப்படி உங்கள் குடும்பங்களைத் துறந்து புரட்சிக்காக கிராமங்களுக்கு வந்தீர்களோ, அப்படியே அந்த விவாசயக்கூலிகளும் குடும்பங்களை நிராதரவாக விட்டு விட்டு உங்களுடன் வந்து விடுகிறார்கள். முன்னணி தோழர்கள் கொல்லப்படுகிறார்கள். இது புரட்சிக்கு ஏற்பட்ட மிக மோசமான பின்னடைவு. ஆயுதங்களிலிருந்து அதிகாரம்தான் பிறக்கிறது, சித்தாந்தமல்ல. மக்களை திரட்டி அவர்களின் ஒத்துழைப்போடு நடத்தப்படுவதுதான் புதிய ஜனநாயக் புரட்சியாக இருக்கும்…’

என நக்சல்பாரி அமைப்பின் அனுபவங்களோடு எஸ்..சி என்றழைக்கப்படும் மார்க்ஸியலெனினிய சித்தாந்த அடிப்படையிலான மாநில அமைப்புக் கமிட்டியை நிறுவினார்கள். ஆயுதங்களை சுமந்து திரியும் சாகசவாதங்களை நம்பாமல் இவர்கள் கிராமங்களுக்குப் போய் மக்களை புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணி திரட்ட ஆரம்பித்தார்கள். அணி திரட்டியும் வருகிறார்கள். மகஇக இந்த வழிமுறையுடன்தான் (நான் அப்படித்தான் நம்புகிறேன் – சூன்யம்) வீறுநடை போடுகிறது.

என்றாலும் தோழர் சாரு மஜூம்தார் என்றுமே மரியாதைக்கு உரியவர். அப்படிப்பட்டவரின் புகழ்பெற்ற எட்டு ஆவணங்களை ‘மனிதன்’ பதிப்பகம் தமிழில் கொண்டு வந்திருக்கிறது.

இந்த ஆவணங்கள் இன்றும் பொருந்தக் கூடியதா என்ற கேள்வி எழுவது இயல்பானதுதான். ஆனால், என்றைக்குமே ஒரு வரலாற்று கட்டத்தில் முன்வைக்கப்படும் ஆவணங்கள் எல்லாக் காலத்துக்கும் எப்போதும் பொருந்தும் என்று யாராலும் கூற முடியாது. இதை நினைவில் கொள்வது நல்லது. இன்று புரட்சிகர அணிகளில் பல பரிணாம வளர்ச்சிகள் ஏற்பட்டுள்ளன. ஆயினும் ந்த ஆவணங்களிலுள்ள சில விஷயங்கள் இன்றும் பொருந்தும் என்றே தோன்றுகிறது.

உதாரணாமாக, இந்தியா ஒரு அரைக்காலனியஅரை நிலவுடமை நாடு என்ற வரையறுப்பும், இதுபோன்ற நாடுகளில் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் தொழிலாளர்கள் விவசாயிகள் கூட்டை அடிப்படையாகக் கொண்ட மக்கள் ஜனநாயகப் புரட்சியே சாத்தியம் என்ற துணிபும், அது நீண்ட கால மக்கள் யுத்தப் பாதையின் மூலம் நிறைவேற்றப்படும் என்ற வழிகாட்டலும் இன்றைக்கும் பொருந்தக் கூடியதே.

அதேபோல் இந்திய அரசமைப்பு மேலும் மேலும் பாசிசமயமாக்கப்பட்டு வரும் சூழலில், சமுதாய மாற்றத்துக்கு தலைமை தாங்க வேண்டிய கட்சி ரகசியமாக செயல்படுவது இன்றியமையாததாகும். அந்தவகையில் ரகசிய கட்சியின் அவசியத்தை வலியுறுத்திய சாரு மஜூம்தாரின் கருத்து இன்றைக்கும் பொருந்தும் அல்லவா?

நக்சல்பாரிகள் தங்களை தாங்களே சுய பரிசோதனை செய்து கொள்ளவும், வரலாற்றிலிருந்து கற்றுக் கொள்ளவும் இந்த ஆவணங்கள் பயன்படும்.

‘வரலாற்று முக்கியத்துவமிக்க எட்டு ஆவணங்கள் (1965 – 67)’, சாரு மஜூம்தார், மனிதன் பதிப்பகம், வரகூர், அண்ணாமலைநகர், சிதம்பரம் – 608002.பக்கம்: 96, விலை: ரூ: 50,

முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு: ஒரு பார்வை

ஜனவரி 27, 2009

முதலில் எனது வக்கிர புத்தியை செருப்பால் அடிக்க வேண்டும். ஜனவரி 25ம் தேதி புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி நடத்தும்முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடுக்கு சென்று வரலாம் என புறப்பட்டதில் எந்தவிதமான பிழையும் இல்லை. நிறைந்த அமாவாசை. அதுவும் தை அமாவாசை. எனவே மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ ஆகியோருக்கு எள்ளுத்தண்ணி ஊற்றி தர்ப்பணம் செய்துவிட்டு மாநாட்டை ஆரம்பிப்பார்கள் போலிருக்கிறது என நக்கலுடன் சென்றேன் பாருங்கள்அதற்கு சரியான செருப்படியை தோழர்கள் கொடுத்தார்கள்.

இரண்டாவது பத்தியிலேயே குறிப்பிட்டு விடுகிறேன். மக்கள் கலை இலக்கிய கழகம், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணிஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட்லெனினிஸ்ட்) மாநில அமைப்புக் கமிட்டிஎன எந்த அமைப்பை சேர்ந்தவனும் அல்ல நான். ‘இணையத்தில் வினவு தோழர்கள் மாநாட்டை பற்றி அதிகமாக சொல்கிறார்களேஎன்னதான் செய்கிறார்கள் என்று பார்ப்போம்…’ என வேடிக்கை பார்ப்பதற்காகத்தான் சென்றேன்.

சென்னை அம்பத்தூரில் மாநாடு. எஸ்டேட் பேருந்து நிலையத்திலிருந்தே புஜதொமுயை சேர்ந்த ஷேர் ஆட்டோ தோழர்கள், அமைப்பின் கொடி பறக்கும் ஆட்டோக்களுடன் வருபவர்களை வரவேற்றார்கள். இதே நிலமைதான் அம்பத்தூர் ரயில்வே ஸ்டேஷன் அருகிலும். இடம் கண்டுபிடிக்க யாரும் சிரமப்படக் கூடாது என்பதில் தோழர்கள் கவனமாக இருந்தார்கள். சாலைகள் முழுக்க அமைப்பின் சிவப்பு நிற கொடிகள் பறந்தன. எஸ்.வி. நகர் அம்பேத்கர் சிலைக்கு அருகிலுள்ள தேனீர் கடை ஊழியர்கள் உட்பட யாரை விசாரித்தாலும் மாநாடு நடைபெறும் இடத்தை துல்லியமாக குறிப்பிட்டு வழிநடத்தினார்கள்.

தோழர் சந்திப்பு வந்திருந்தால் வயிறு எரிந்திருப்பார். இதுவரை தனது பதிவுகளில் மகஇக, எஸ்ஓசி குறித்து, தான், எழுதிய விஷயங்கள் எந்தளவுக்கு புரட்டல் நிரம்பியது என்பதை நினைத்து குற்ற உணர்வால் குறுகியிருப்பார். அந்தளவுக்கு எஸ்.வி.நகர், அம்பேத்கர் கால்பந்து மைதானமே சிவப்பால் குளித்துக் கொண்டிருந்தது.

இந்தளவுக்கு கூட்டம் வரும் என எதிர்பார்க்காததால் பிரமிப்பு ஏற்பட்டது உண்மை. மாநாட்டு திடலே நிரம்பி வழிந்தது என்றால் அது மிகையில்லை. தமிழகத்தின் மூலை, முடுக்கிலிருந்தெல்லாம் தோழர்கள் கூட்டம் கூட்டமாக வந்திருந்தார்கள்.

பல தோழர்கள் சிவப்பு நிற சட்டையை அணிந்திருந்தார்கள். பெரும்பாலானவர்கள் குடும்பத்துடன், மனைவி குழந்தைகளுடன் வந்திருந்தார்கள். ஒருவரது முகத்தில் கூட சோர்வோ, கடனே என மாநாட்டுக்கு வந்திருக்கும் பாவனைகளோ தெரியவில்லை. அனைவரது கண்களிலும் உறுதி. முக்கியமாக தோழர்களின் மனைவிமார்களை சொல்ல வேண்டும். கணவருக்காக வந்தது போல் தெரியவில்லை. விருப்பத்துடன், மாநாட்டின் தன்மையை உணர்ந்து, நம் குடும்ப விழா என்ற எண்ணத்துடன் கலந்து கொண்டவர்களை போலவே தெரிந்தார்கள். ஒருவரது கால் விரல்களிலும் மெட்டியில்லை. கழுத்தில் நகையில்லை. வீட்டிலிருந்தே தோழர்கள் தங்கள் அமைப்பை கட்டுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ளவும், உணரவும் இந்த மாநாடு உதவியது.

மாநாட்டில் உரையாற்றிய தோழர்களின் உரைகளை வினவு தோழர்கள் தங்கள் தளத்தில் வெளியிடுவார்கள் என நம்புவதால் அதற்குள் இந்தப் பதிவு நுழையவில்லை. பதிலாக மனதில் பட்ட சில விஷயங்களை குறிப்பிடலாம் என நினைக்கிறேன்.

சொன்னபடி குறித்த நேரத்தில் மாநாட்டு பந்தலுக்கு வெளியே கொடியேற்றத்துடன் முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டை தொடங்கினார்கள். புஜதொமுயின் தலைவரான தோழர் முகுந்தன் கொடியேற்றினார். அதன் பின் செங்கொடிக்கு வணக்கம் செலுத்தியவர்கள் அமைப்பு சார்ந்த தோழர்கள் மட்டுமல்ல. அவர்கள் குடும்பமும்தான். அதுவும் 4, 5, வயதுக்கு உட்பட்ட குழந்தைகள்கூட கை விரல்களை மடக்கி வணக்கம் செலுத்தியதை குறிப்பிட்டேயாக வேண்டும்.

குறித்த நேரத்தில் மாநாட்டை தொடங்கியவர்கள், குறித்த நேரத்தில் மாநாட்டை முடிக்க முயன்றார்கள். மாநாடு முடிந்ததும், ‘மாநாட்டு பந்தலில் இருந்த பிளாஸ்டிக் நாற்காலிகளை ஒன்றின் மீது ஒன்றாக போட்டுவிட்டு செல்லுங்கள்அது எங்களுக்கு உதவியாக இருக்கும் என புஜதொமு தலைவர் தோழர் முகுந்தன் அறிவித்தார். அதற்கு நல்ல ரெஸ்பான்ஸ். என்னருகில் அமர்ந்திருந்த 60 வயதை கடந்த ஒரு அம்மா, தன்னால் முடிந்தளவுக்கு நாற்காலிகளை ஒன்றிணைத்தார். 

மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் 80% பேர் 20 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள். இதே வயதுள்ள பெண் தோழர்களும் கலந்து கொண்டார்கள். ஆனால், யாருமே யாரிடத்திலுமே கேலி, கிண்டல், ஈவ் டீசிங் மாதிரியான நடவடிக்கைகளில் இறங்கவில்லை.

ஆண்களுக்காக தனியாக கழிவறை அமைக்கப்பட்டிருந்தது. அந்த இடத்திலேயே ஆண் தோழர்கள் சிறுநீர் கழித்தார்கள்.

தட்டுப்பாடின்றி நல்ல குடிநீர் கிடைத்தது.

மதியம் 5 ரூபாய் விலையில் உணவை வழங்கினார்கள். முன்னணி தோழர்களில் ஆரம்பித்து என்னைப் போல பார்வையாளராக சென்றவர்கள் வரை அனைவரும் வரிசையில் நின்றே உணவை பெற்றுக் கொண்டார்கள்.

கூட்டத்தை அமைப்பு தோழர்கள் ஒழுங்குப் படுத்தினார்கள்.

குடித்துவிட்டு யாரும் மாநாட்டு பந்தலுக்கு வரவில்லை. (முக்கியமாக பியர்). சிகரெட் பிடிப்பவர்களின் எண்ணிக்கையும் குறைவாகவே இருந்தது.

மாநாட்டு திடலில் யாரும் குப்பை போடவில்லை. அதற்கென அமைக்கப்பட்ட தொட்டியிலேயே பயன்படுத்திய பொருட்களை போட்டார்கள்.

பாப்கார்ன், சமோசா, முறுக்கு, ஸ்நாக்ஸ் மாதிரியான அயிட்டங்கள் மாநாட்டு பந்தலில் விற்கப்படவும் இல்லை. வெளியிலிருந்து அவற்றை வாங்கி வந்து தோழர்கள் மாநாடு நடைபெறும்போது கொறிக்கவும் இல்லை. கைக் குழந்தையுடன் கலந்து கொண்ட தோழர்களின் குடும்பத்தினருக்கு, அறிமுகமில்லாத தோழர்கள் கூட பிஸ்கட் வாங்கி வந்து குழந்தைகளிடம் கொடுத்ததை கண்ணுக்கு நேராக பார்க்க முடிந்தது.

மாநாட்டு திடலிலேயே, பந்தலை ஒட்டிகீழைக்காற்று‘, ‘புதிய ஜனநாயகம்‘, ‘புதிய கலாச்சாரம்‘, ‘புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணிசார்ப்பில் புத்தகக் கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. இது இயல்பானதுதான். எதிர்பார்த்ததுதான். தங்கள் அமைப்பு சார்பில் நடக்கும் மாநாட்டில், அமைப்பின் புத்தகங்களை தானே விற்பார்கள்? என்று நினைத்தால் உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். இவர்கள் அமைப்பை சாராத, இவர்கள் மீது கடுமையான விமர்சனங்களை வைக்கும் மாற்று இயக்க தோழர்களும் தங்கள் வெளியீடுகளை விற்றுக் கொண்டிருந்தார்கள். எந்த தோழர்களும் அவர்களை தடுக்கவும் இல்லை. வெளியேற்றவும் இல்லை. சொல்லப் போனால் உணவு, தேனீர், குடிநீர் போன்றவற்றை அவர்களுடன் இணைந்தே சாப்பிட்டார்கள்.  

புதிய ஜனநாயகம்இதழில் இதுவரை ஈழம் தொடர்பாக வெளிவந்த கட்டுரைகள் அனைத்தையும் ஜெராக்ஸ் எடுத்து, ஸ்பைரல் பைண்டிங் செய்து விற்றார்கள். அதேபோல்தான்தேசியம்தொடர்பாக வந்த கட்டுரைகளும். இதில் குறிப்பிட வேண்டிய விஷயம், இதே திடலில்தான்தனித்தமிழ்ஆதரவு தோழர்களும் தங்கள் நூல்களை விற்றார்கள் என்பதுதான். ஜனநாயகம்!

மாநாட்டில் புஜதொமு தலைவர் தோழர் முகுந்தன், புஜதொமு செயலாளார் தோழர் சுப. தங்கராசு, புஜதொமு பொருளாளர் தோழர் விஜயகுமார், மகஇக தோழர் துரை சண்முகம், கர்நாடக உயர்நீதி மன்ற வழக்குரைஞர் தோழர் பாலன் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள். இதில் தோழர் பாலன் தொழிலாளர்களுக்குள்ள சட்டங்களை குறித்து விளக்கினார். அவைகளை முதலாளிகள் எந்தளவுக்கு மீறுகிறார்கள், இருக்கும் சட்டங்களும் எப்படி நிரந்தர தொழிலாளர்களுக்கே சாதகமாக இல்லை என்பதை விளக்கினார். ஒவ்வொருவரும் பேசி முடித்ததும் மைய கலைக்குழுவினர் பாட்டு பாடினார்கள். மாலையில் அம்பத்தூர் ஓடி பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள மார்கெட் பகுதியில் பொது கூட்டம் நடைபெற்றது. மகஇக பொது செயலாளர் தோழர் மருதையன் சிற்றப்புரை ஆற்றினார். வழக்கம் போல் அவரது உரை அழுத்தமாக இருந்தது. குறிப்பிட்ட நேரத்துக்கு பிறகு யார் பேசினாலும் துண்டு சீட்டைக் கொடுத்து பேச்சை முடிக்க சொன்னார்கள். இந்த விதியிலிருந்து தோழர் மருதையனும் தப்பவில்லை.

ஒப்பந்த தொழிலாளர்களாக இருக்கும் பலர், வேன்களில் வந்தார்கள்.

மாநாட்டுக்கான மொத்த செலவும் அமைப்பை சேர்ந்தவர்களுடையது. பல மாதங்களாக பேருந்து, தொழிற்சாலை, தொழிற்பேட்டைகளில் பிரச்சாரம் செய்து, உண்டியல் குலுக்கி முதலாளிகளுக்கு எதிராக தங்கள் வலிமையை காட்டியிருக்கிறார்கள்.

சங்கம் அமைக்க தாங்கள் பட்ட சிரமங்களை, அனுபவங்களை பல தோழர்கள் மாநாட்டில் பகிர்ந்து கொண்டார்கள். குறிப்பாக ஒரிஸாவிலிருந்து பிழைப்பைத் தேடி தமிழகத்துக்கு வந்த தொழிலாளர்கள் தாங்கள் அனுபவித்த, அனுபவிக்கும் துயரங்களையும், புஜதொமு அமைத்த பின் தாங்கள் எப்படி தன்மானத்துடன் வாழ்கிறோம் என்பதையும் விளக்கினார்கள்.

கள்ளச் சாராய வியாபாரியாக இருந்து, இப்போது கல்வி வள்ளலாக இருக்கும் ஜேப்பியாரின் கல்லூரிகளில் சங்கம் அமைக்க தாங்கள் முயன்றதை குறித்து தோழர்கள் சொன்னார்கள். சங்கம் அமைப்பதற்கு முன் ஜேப்பியார் தங்களுக்கு கொடுத்த மரியாதையையும், சங்கம் அமைத்த பின், அதே ஜேப்பியாரே தங்களுக்கு தரும் மரியாதை குறித்தும் தோழர்கள் பகிர்ந்து கொண்டபோது, மனதில் பூரிப்பு எழுந்தது உண்மை.

டிசம்பர் 31ம் தேதியுடன் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் பணிபுரியும் பல தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இருக்கும் தொழிற்சங்கங்கள் எதுவும் அவர்களை காப்பாற்றவில்லை. இந்தத் தகவலை பலரும் உணர்ச்சியுடன் குறிப்பிட்டார்கள்.

மாநாட்டு பந்தலுக்கு வெளியே காவல்துறையினர், ‘எதையோஎதிர்பார்த்து பாதுகாப்புக்காக நின்றார்கள். ஆனால், எதுவும் நடக்கவில்லை.

ஒரு பதிவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருகிறீர்களா என்று கேட்டேன். ‘ஐயோ, வந்தா போலீஸ் பிடிச்சுக்குமேஎன்றார். எப்படியெல்லாம் பயம் விதைக்கப்பட்டிருக்கிறது!

பதிவுலகை சேர்ந்த ஜ்யோராம் சுந்தர், பைத்தியக்காரனுடன் (தோழர் ஏகலைவனை சந்தித்து பேசினீர்களா பைத்தியக்காரன்?) மாநாட்டுக்கும், பொது கூட்டத்துக்கும் வந்திருந்தார். தோழர் வே. மதிமாறன் அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருந்தார். மற்ற பதிவுலக நண்பர்களை எனக்கு தெரியாததால், யார் வந்தார்கள் என்று உறுதியாக சொல்லமுடியவில்லை.

பொதுவாக மகஇக அமைப்பினர் மீது ஒரு குற்றச்சாட்டு உண்டு. கேள்வி கேட்பவர்களை இவர்களுக்கு பிடிக்காது. க்ளீன் ஸ்லேட்டாக இருப்பவர்கள்தான், இவர்களுக்கு தேவைஎன மாற்று அமைப்பினர் அவ்வப்போது இவர்கள் மீது விமர்சனம் வைப்பார்கள். அது எந்தளவுக்கு புரட்டு என்பது இந்த மாநாட்டில் தெரிந்தது. அப்படி மாற்று அமைப்பினர் சொல்வது உண்மையாகவே இருந்தாலும் அதில் தவறும் இல்லை. க்ளீன் ஸ்லேட்டில்தானே அழுத்தமாக எழுத முடியும்?

ஒரு அமைப்பை கட்டுவது என்பது எவ்வளவு கடினமான வேலை என்பது அமைப்பு சார்ந்தவர்களுக்கு நன்றாகவே தெரியும். அப்படி பார்க்கும்போது, இந்த முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு உண்மையிலேயே புஜதொமுக்கு மாபெரும் வெற்றிதான்.

தொடர்ந்து மகஇக, பெண்கள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பாகவும் மாநாடுகளை நடத்த வேண்டும். அமைப்பு பணி, நெருக்கடிகள் காரணமாக தோழர்களால் கலை இலக்கிய அமைப்பில் அதிகமாக கவனம் செலுத்த முடியவில்லை. இனி சிறிது சிறிதாக கலை இலக்கிய அமைப்பையும் அவர்கள் வளர்க்க வேண்டும். செய்வார்கள் என்று நம்புகிறேன்.

பின்குறிப்பு: பதிவை எழுதி முடித்ததும் வழக்கம்போல் படித்துப் பார்த்தேன். மகஇக வுக்கு ஜால்ரா தட்டுவது போல் தெரிந்தது. பதிவை வாசிக்கும் உங்களுக்கும் அப்படியே தோன்றினால்,

நல்லது. அதுகுறித்து எனக்கு வெட்கமேதும் இல்லை.

2 தலையணைகளும்… இந்தப் புத்தக கண்காட்சியும்!

ஜனவரி 24, 2009

அட, என்று புருவத்தை உயர்த்த வைத்தது இந்தப் புத்தக கண்காட்சி. காரணம் இரு வெங்கடேசன்களும், அவர்களது வெங்கடேச புராணங்களும்.

பொருளாதார நெருக்கடி, ஈழத்தமிழர்கள் படுகொலை, ஓபாமா, ஐடி ஊழியர்களின் எதிர்காலம், ‘சத்யமேவ சுருட்டல், பிரபாகரன், விடுதலைப்புலிகள், தடைசெய்யப்பட்ட நூல்களுக்கு தடை (குறிப்பாக கிழக்குக்கு தடா, பொடா!), வில்லு, படிக்காதவன், சன், கலைஞர், திருமங்கலம் சுபமங்கலம், அஞ்சா நெஞ்சன், அஞ்சிய அண்ணன், தென்மண்டல ஒருங்கிணைப்பாளர், தென்னாட்டுடைய சிவனே போற்றி, 10 சாரு, 7 எஸ்.ரா, 3 ஜெமோ, 27 ரூபா ஜீரோ டிகிரிஇன்னபிற, இன்னபிற மனச்சாய்வுகளுக்கு இடையில் இரு புதினங்கள் தமிழ் இலக்கிய வரலாற்றின் போக்கை பறைசாற்றும் விதமாக வெளிவந்திருக்கின்றன.

இரண்டுமே 900 பக்கங்களுக்கு மேற்பட்டவை. இரண்டின் விலைகளும் 500 ரூபாய்க்கு மேல். இரண்டையும் எழுதியவர்கள் வெங்கடேசன்(கள்)தான். என்ன இனிஷியல் மட்டும் வேறு வேறு. ஒருவர்காவல் கோட்டம்நாவலை எழுதிய சு. வெங்கடேசன். மற்றவர்தாண்டவராயன் கதைபுதினத்தை எழுதிய பா. வெங்கடேசன்.

 

எப்படி ஆரம்பித்தது என்ற ரிஷிமூலத்துக்குள் நுழைந்தால்கலை கலைக்காகவே‘, ‘கலை மக்களுக்காகவேஎன்ற இரு வேறு தத்துவ போக்கை தொடலாம். அந்த இரு புள்ளிகளின் வழியே பயணத்தை மேற்கொண்டவர்களின் சமீபத்திய எச்சங்களாக இவர்கள் இருவரையும் காண முடிகிறது. யதார்த்தவாத எழுத்துக்கள் புனைவுகள், யதார்த்தவாத புதினங்கள் மொழி விளையாட்டுக்கள் என அவரவர் போக்கில் அவரவர்கள் கற்று, தேர்ந்து, மையமாக, மையமற்ற வார்த்தைக் கூட்டங்களை வந்தடைந்த ஒரு போக்கை இந்த இரு தலையணைகளும் உணர்த்துகின்றன.

ஒவ்வொரு ஆண்டுமே இப்படியான இருவகைப்பட்ட புதினங்களும் வெளியாகின்றன என்றாலும் இந்த ஆண்டு குறியீட்டு தளத்தில் முக்கியத்துவம் பெறுவதற்கு காரணம், இந்த இரு நாவலாசிரியர்களின் பெயர்களும் வெங்கடேசனாக அமைந்தது மட்டுமே ல்ல.

உதாரணமாக யதார்த்தவாத புதினமானகாவல் கோட்டத்தைஎடுத்துக் கொள்வோம். இதன் வெளியீட்டாளர், ‘தமிழினிவசந்தகுமார். தீவிர இலக்கிய புத்தகங்களை வெளியிட்டு வருபவர். ஜெயமோகன், நாஞ்சில்நாடன், சு. வேணுகோபால், சூத்ரதாரி என்கிற கோபாலகிருஷ்ணன் போன்றோரின் ஹோல்சேல் டீலர். இவர்கள் அனைவருமே யதார்த்தவாத எழுத்தாளர்கள்தான் என்றாலும் யாருமே மார்க்ஸிய அமைப்பு சார்ந்தவர்கள் அல்ல. .நா.சு., . பிச்சமூர்த்தி வம்சாவளியினர். ஆனால், காவல் கோட்டம்சு. வெங்கடேசன், அப்படியானவர் அல்ல. மார்க்ஸிய இலக்கிய அமைப்பான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநில துணைப் பொது செயலாளர். செம்மலர் வகையறா. சொல்லப்போனால் சென்ற சட்டமன்ற தேர்தலில் இந்த சுனா வெனா மார்க்ஸிய கம்யூனிஸ்ட் அணி சார்பாக போட்டியிட்டு தோல்வியடைந்தவர். இவர்களுக்கும் .நா.சு வகையறாக்களுக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம்தான். ஆனால், இந்தஇலக்கியவிஷயத்தில் ஒன்றாக இணைந்திருக்கிறார்கள்! ஒருவகையில் மாயாவாத எழுத்துக்களுக்கு எதிரான கூட்டணி என்றும் இதை புரிந்து கொள்ளலாம்.

அடுத்துதாண்டவராயன் கதையை எழுதியிருக்கும் பா. வெங்கடேசன். இவரும் அபிவாதையே சொல்லும்போது .நா.சு, . பிச்சமூர்த்தி என்றுதான் ஆரம்பிப்பார்! என்றாலும் அதிலிருந்து கிளை பிரிந்த பிரமிள், நகுலன் குழுவை சார்ந்தவர். இவரது புதினத்தை வெளியிட்டிருப்பவர் ஆழிபப்ளிஷர்ஸ். நாகார்ஜுனன் தனது வலையில் எழுதிவரும் கட்டுரைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளை இரு தொகுதிகளாக இந்த ஆண்டு கொண்டு வந்திருப்பவர்களும் இவர்கள்தான். அதே நாகார்ஜுனன் மொழிபெயர்த்த ஆர்த்தர் ரைம்போ கவிதைகளை தொகுப்பாக வெளியிட்டிருப்பவர்களும் இவர்கள்தான். கோணங்கியின்பாழிநாவலை இரண்டாம் பதிப்பாக இறக்கியிருப்பவர்களும் இதேஆழிதான். ஆனால், இலக்கிய வெளியீட்டாளராக மட்டுமே தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளஆழிவிரும்பவில்லை என்பது அவர்கள் இதே ஆண்டு கொண்டு வந்திருக்கும் மற்ற புத்தகங்களிலிருந்து தெரிகிறது. அதாவதுமையமற்றவெளியீட்டாளர்! இத்தனைக்கும் இந்த பானா வெனா வாழ்வது ஓசூரில். நிரந்தரமற்ற தொழிலாளர்களும், தொழிற்சாலைகளும் நிறைந்த பூமி. தொழிற்சங்கங்கள் ஆட்சி செய்யும் நிலம். எந்த திசையில் பொருளாதார நெருக்கடி எழுந்தாலும் அதன் வீரியத்தை உடனுக்குடன் அனுபவிக்கும் ஷேத்திரம். மார்க்ஸியலெனினிய குழுக்களின் தர்மஸ்தலா இந்தப் பகுதிதான். இந்த அமைப்பில் வாழும் பா. வெங்கடேசனிடமிருந்து மாயாவாத எழுத்து பூத்திருக்கிறது!

இப்படியான சூழலில் இந்த இரு புதினங்களையும் வாங்கினேன். இன்னும் முழுமையாக வாசிக்கவில்லை. அதற்கு முன்பாக வலையுலக நண்பர்களுக்கு ஒரு அறிமுகமாக இந்த இரண்டு புதினங்களை குறித்தும் சொல்லலாம் என்று தோன்றியது. முதலில்,

காவல் கோட்டம்சு. வெங்கடேசன்

நாவலின் பின் அட்டையில் இப்படி குறிப்பிடப்பட்டுள்ளது:

ஆறு நூற்றாண்டு கால மதுரையின் வரலாற்றைப் (1310 – 1910) பின்னணியாகக் கொண்ட நாவல் இது. அரசியல், சமூகவியல், இன வரைவியல், கண்ணோட்டங்களுடன் அந்த வரலாற்றின் திருப்புமுனைகளையும் தீவிரமான தருணங்களையும் திரும்பிப் பார்க்கிறது. தமிழ் வாசகர்கள் அறிந்திராத வரலாறு இது.புதிய உத்திகள், தேர்ந்த சொற்கள், வளமான மொழிநடை, கூர்மையான உரையாடல்கள், கனக்கும் மெளனங்கள், உள்ளுறை அர்த்தங்கள்வாசகனின் கற்பனைக்கு இடம் விட்டுத் தாண்டிச் செல்வதாகவே இந்நாவலின் பெரும்பகுதி இருக்கிறது. தமிழ்ப் புனைக்கதையின் கலாபூர்வமான வெற்றிகளில் இது மற்றுமோர் சாதனை.ஆசிரியர் குறிப்பில் உள்ள விவரங்களின் சில பகுதிகள்:

கள்ள நாட்டின் வேர்கள் எல்லாம் பாளையப்பட்டுகளின் வரலாற்றோடு பின்னிப் பிணைந்தே இம்மண்ணில் இறங்கியுள்ளன.மாடுகளை வணங்கி மேய்த்து திரிந்த கூட்டமும், அணைத்து அடக்கி வீர விளையாட்டாக்கிய கூட்டமும் பண்பாட்டில் எதிரெதிர் முனைகளில் நின்றாலும், ஒரே நிலத்தில் வாழ நேர்ந்தபோது, முரண்களை சமன்செய்தே வந்திருக்கின்றன.

ஜல்லிக்கட்டுதமிழரின் பண்பாட்டுக்கூறாகப் பாரம்பரியமாக இன்றும் தொடர்கிறது. இடையில் வந்ததொட்டி குடுப்புதொடர் வரலாற்றுக் காலத்தில் தொலைந்து போனது….லாடக்கட்டைகளுக்கு இடையில் சித்துக்கல் வரிவோடிக் கிடந்த வீட்டின் அலமாரியில் கட்டுக்கட்டாய் இருந்த பேப்பர்களை எல்லாம் அள்ளிப் போட்டுத் தேடினோம். பள்ளிக்கூடத்துக்குப் பிள்ளைகளை அனுப்பாத அனுப்பாத கள்ளநாடு அப்பன்களை போலிஸ் ஸ்டேஷன் படுக்கையில் வைக்கச் சொல்லி உபாத்தியாயினி இன்ஸ்பெக்டருக்கு எழுதிய ரிப்போர்ட் ஒன்று கிடைத்தது. 10.10.1920 என்று தேதியிடப்பட்டிருந்த அந்த மக்கிய தாளின் வழியேதான் என் பயணம் துவங்கியது. ஏறக்குறைய பத்தாண்டுகள் முடிந்துவிட்டன.கீழக்குயில்குடி பற்றி வரலாற்று ஆய்வு நூல் ஒன்று எழுதும் முயற்சியில் ஈடுபட்டிருந்ததால் அதன் சாயலில் ஒரு கிராமத்தை உருவாக்க நினைத்தேன். அமண மலையின் தென்மேற்கே இடத்தை தேர்வு செய்த மறுகணமே கள்ளநாடு முழுவதும் நான் பார்த்த, கேட்ட கதைமாந்தர்கள் அனைவரும் அங்குவந்து சேர்ந்தனர். மரம் வெட்டி, மொட்டு தோண்டி, நிலவாகை சமப்படுத்தி, வீடு போட்டு ஓலை வேய்ந்து முடிந்ததும், பெரியாம்பளைகள் மந்தையில் வந்து உட்கார்ந்து கதை சொல்லத் துவங்கினர். கதை களை கட்டியது….மிஷனரிகளின் ஆவணங்கள், அரசின் ஆவணக் காப்பகங்களில் உள்ள தரவுகள், எழுதப்பட்ட வரலாற்று நூல்களில் கிடைக்கும் தகவல்கள், ஊர்கள்தோறும் மக்களின் நினைவுகளில் கொட்டிக்கிடக்கும் செய்திகள் என எல்லாவற்றையும் தேடி அலைந்தேன்இதன் முதல் பாகத்தில் வரும் அனைத்து மாந்தர்களும், நிகழ்வுகளும் உண்மையே. கன்னிவாடிப் பாளையம் மூக்குப்பறி மைசூர் போருக்கு 16000 வராகன் கொடுத்தது முதல் ருஸ்தம் கானுக்கு காதுவலி என்பதுவரை உண்மையான வரலாற்று தரவுகளால் ஆனது….19

ஆம் நூற்றாண்டில் மதுரையிலிருந்து மதராஸ் வர மாட்டு வண்டிப் பயணத்திற்கான செலவுத்தொகை என்ன? என்பதில் தொடங்கி, கள்ளநாட்டில் நடைமுறையில் இருந்த, குற்றங்களுக்கான தண்டனைச் சட்டம் என்ன என்பது வரைகங்காதேவியின்மதுரா விஜயத்தில்உள்ள பாண்டியனுடைய வாளின் பெயர் என்ன என்பதிலிருந்து களவின்போது தும்மல் வராமல் இருக்க கைமருந்து என்ன என்பது வரைஅத்தனையும் சேகரிக்க, உறுதிப்படுத்த நட்பும் தோழமையும் கொண்ட பெரும்வட்டம் என்னைச் சுற்றி செயல்பட்டது  

சு. வெங்கடேசனுக்கு வயது 38. ‘கலாச்சாரத்தின் அரசியல்‘, ‘ஆட்சித் தமிழ்: ஒரு வரலாற்றுப் பார்வைஆகிய இரு ஆய்வு நூல்களையும், ஆறு சிறு நூல்களையும் எழுதியுள்ளார். நான்கு கவிதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநில துணை பொதுச் செயலாளர்.(‘

காவல் கோட்டம்‘, சு. வெங்கடேசன், தமிழினி வெளியீடு, 67, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, பக்கம்: 1048, விலை: ரூ: 590, )

தாண்டவராயன் கதை: சொல்லப்படாத கதைகளின் கதை முப்பத்தெட்டு சர்க்கங்களில்பா. வெங்கடேசன்

பின் அட்டை இப்படி சொல்கிறது: தன் மனைவியின் கண்நோய்க்கான மருந்தைத் தேடி அதற்காகத்தான் செல்கிறோம் என்பதைத் தெரிந்து கொள்ளாமலேயே கதைகளின் நிலத்திற்குப் பயணமாகிறான் ட்ரிஸ்ட்ராம். எழுதப்பட்ட வரிகளின் நடுவிலிருந்து மூதாதையர்களின் ஆவிகளை புலப்படுத்தத் தெரிந்த டப்ளின் நகர நூலகர், கூடுவிட்டு கூடு பாயும் வித்தை கற்ற சுல்தானிய ஒற்றன், இறந்தவர்களின் உடலருந்து உருவங்களை மாயமாய் மறையச் செய்யும் களிம்பு தயாரிக்கும் இருநூறு வயது பூசாரி, இவர்களோடு அன்புசெய்வதைத் தவிர வேறெந்த வித்தைகளையும் கற்று வைத்திராத ஒரு சேரிப் பெண் ஆகியோர் அவனுக்கு உதவுகிறார்கள்.மூன்றாவது அட்டையிலுள்ள குறிப்புகள்: உரையாடல்களுக்கடியில் இன்னொரு உரையாடல் ரகசியமாக எப்போதும் வெளிப்பார்வைக்கு தெரியாதவண்ணம் பதுங்கிக் கொண்டிருக்கும். ஒரு சம்பாஷணை. ஒரு கதை, ஒரு சம்பவத்தை ஆயிரம் பேர் ஆயிரம்விதமாக அர்த்தப்படுத்திக் கொள்ளக்கூடும். அந்த ஆயிரம் அர்த்தங்களும் தனித்தனியே முழு உண்மைகளாக இருக்கவும் கூடும். உண்மையென்பது பார்ப்பவர்களின், கேட்பவர்களின், படிப்பவர்களின் கால, இட, மனவோட்டங்களைப் பொறுத்து மாறிக்கொண்டேயிருக்கிறது. புரிந்து கொள்ளவோ, நம்பவோ முடியாத வினோதங்களும் மாயங்களும் தர்க்கத்தின் குறுக்கீடற்று சகஜமாக நடக்கும் ஒரு கதைக்கு தர்க்க வழிகளுக்குட்பட்ட மற்றொரு விளக்கமும் உண்டு. ஊர் எல்லையில் முதற்பழம் கனியும் மரம், ரகசியமாக வளார்ந்த காடு இருப்பதாக சொல்லும் கதைகளும் உங்கள் சரித்திரத்தைப் பற்றி உள்ளூர் கிழவன் சொன்னது போலவே அந்த காட்டிற்குள் நுழைந்தவர்கள் இந்த உலகிற்குள் திரும்ப முடியாது. சொல்வதை கேட்டுக் கொண்டிருப்பவனைப் பொறுத்துதான் கற்பனையோ நிஜமோ சொல்வதற்குள் நுழைகிறது.புதினத்தை புரட்டியதுமே இப்படி வருகிறது:

இந்தக் கதையின் குறுநாவல் வடிவத்தை அது பிரசுரத்திற்குப் போவதற்கு முன் நிராகரித்ததன் மூலம் இது இப்படியொரு புதினமாக மாறுவதற்குக் கவிஞர் பிரம்மராஜன் காரணமாயிருந்தார்…. பூர்த்தியடைந்த கதையை முழுக்கப் படித்தும், பேசியும், பின் இதன் வெளியீட்டு சாத்தியங்களுக்காகவும், வடிவாக்கத்திற்காகவும் என்னுடனேயே உண்டு உறங்கி அலைந்து திரிந்தும், தன்னூலைப்போல் இந்நூல் வெளிவருவதில் நண்பர் கோணங்கி காட்டிய உற்சாகம் மற்றும் அக்கறையின் மீதான வியப்பிலிருந்தும் சந்தோஷத்திலிருந்தும் நான் இன்னும் மீள முடியாமலிருக்கிறேன்மதுரையில் பிறந்த பா. வெங்கடேசன் இப்போது ஓசூரிலுள்ள தனியார் நிறுவன் ஒன்றில் நிதிப் பிரிவில் பணிபுரிந்து வருகிறார். இன்னும் சில வீடுகள், எட்டிப் பார்க்கும் கடவுள் ஆகிய இரண்டு கவிதைத் தொகுதிகளையும், ‘ஒரிஜினல் நியூஸ் ரீல் சிறுகதைகள்என்கிற ஒரு சிறுகதை தொகுப்பையும், ‘ராஜன் மகள்என்கிற சிறுநாவல்கள் தொகுப்பையும் வெளியிட்டிருக்கிறார்.(‘

தாண்டவராயன் கதை‘, பா. வெங்கடேசன், ஆழி பப்ளிஷர்ஸ், 12, முதல் பிரதான சாலை, யுனைட்டட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை 24, மின்னஞ்சல்: aazhieditor@gmail.com பக்கம்: 952, விலை: ரூ: 575)

இணையத்தில் பிரம்மராஜனின் ‘மீட்சி’

ஜனவரி 23, 2009

ஆமாம். அதே பிரம்மராஜன்தான். அதேமீட்சிசிற்றிதழ்தான். 80களில் புனைவு ஆர்வலர்களுக்கும், படைப்பாளிகளுக்கும் உத்வேகம் கொடுத்த அதே இலக்கிய சிற்றிதழ் இப்போது இணையத்தில் வர ஆரம்பித்திருக்கிறது.

சிறுபத்திரிகை கவிஞராக மட்டுமே அறியப்பட்ட பிரம்மராஜனுக்கு சூன்யத்தில்பெரிதாக அறிமுகம் தேவையில்லை. ஆனால், அவரை கவிஞராக மட்டுமே அடையாளப்படுத்தும் சூழல்தான் வருத்தத்தை அளிக்கிறது. உலகிலுள்ள பல மாற்று எழுத்தாளர்களை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியவர் இவர்தான். ஆங்கில பேராசிரியராக இருக்கும் இவரால்தான் கால்வினோ, போர்ஹே, பிரைமோ லெவி, யசுவானி கவபட்டா, மார்க்யூஸ் போன்ற எழுத்தாளர்களை தமிழ் வாசகனால் அறிந்து கொள்ள முடிந்தது. இவரது வழிகாட்டுதலுடன் கவிஞரும் (ரிஷி) மொழிபெயர்ப்பாளருமான லதா ராமகிருஷ்ணன் நிறைய மொழிபெயர்ப்புகளை செய்திருக்கிறார். அவை தொகுப்பாகவும் வந்துள்ளன.

தற்சமயம்நான்காம்பாதைஎன்ற சிற்றிதழை நடத்தி வரும் பிரம்மராஜன், மார்க்யூஸின் புகழ்பெற்ற நாவலானஒரு நூற்றாண்டு தனிமையை தமிழில் துல்லியமாக மொழிபெயர்த்து வருவதாக கேள்விப்பட்டேன். அந்த நாவலின் பிரசுர வருகைக்காக காத்திருப்பதை தவிர இப்போதைக்கு வேறு வழியில்லை.

கவிஞர் ஆத்மாநாம் நடத்தியசிற்றிதழ் மூலமாக தமிழ் சூழலுக்கு வந்த பிரம்மராஜன் (தகவல் பிழையாகவும் இருக்கலாம்), அதன் பின்மீட்சிஎன்ற சிற்றிதழை 80களில் நடத்தினார். நாகார்ஜுனன், சாரு நிவேதிதா, சுகுமாரன், கோணங்கி, ஸில்வியா (எம்.டி. முத்துகுமாரசாமி), நஞ்சுண்டன், சத்யன்எனமீட்சிமூலமாக தமிழுக்கு கிடைத்த எழுத்தாளர்களை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். ‘படிகள்மூலமாக அரசியல், அமைப்பியல் சார்ந்த கட்டுரைகளை நாகார்ஜுனன் எழுதினாலும், மொழி பெயர்ப்பு கவிதைகளை அவர் அதிகமும் செய்ததுமீட்சியில்தான்.

மீட்சிமூலமாக பல கவிஞர்களின் குறிப்பிடத்தகுந்த பல தொகுப்புகள் வந்திருக்கின்றன. அதில்உலக கவிதைகள்முக்கியமானது. அந்த தொகுப்பை சென்ற ஆண்டுஉயிர்மை பதிப்பகம்மறுபிரசுரம் செய்திருக்கிறது. இந்திய அளவிலான கவிதை செமினார்களில்மீட்சிகவிஞர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள்  

மொழியின் சாத்தியபாட்டை, அதன் விளையாட்டை, அபத்தத்தை கவிதைக்குள்ளும், புனைவுக்குள்ளும் கொண்டு வர முடியும், கொண்டு வர வேண்டும் என சொல்லாமல் சொன்ன, சொல்லி அடித்தமீட்சிசார்பாக, கவிஞர் கலாப்ரியாவுடன் இணைந்து அப்போது குற்றாலத்தில் ஆண்டுதோறும் நடந்தகவிதைப் பட்டறைதமிழ் சூழலுக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அந்தப் பட்டறையில் கலந்துக் கொள்ளாத எழுத்தாளர்களே இல்லை என்று சொல்லலாம். இன்று பிரபலமாக இருக்கும் பலரும் அப்போது பட்டறையில் பட்டை தீட்டப்பட்டவர்கள்தான் (கொஞ்சம் அதிகமாக இருந்தாலும் இந்த வார்த்தையை சரியென்றே நினைக்கிறேன்). மணிக்கொடி‘, ‘எழுத்து‘… என நீண்ண்ண்ட வரலாற்றை கொண்ட சிறுபத்திரிகை உலகில்மீட்சிக்கும் தனி இடம் உண்டு. அது அழுத்தமாக பதித்த தடத்தில்தான் இப்போதுள்ள வாசகர்களும், எழுத்தாளர்களும் நடந்து கொண்டிருக்கிறார்கள். பின் அமைப்பியல், பின் நவீனத்துவம் சார்ந்த படைப்புகளை ஒரு சூறாவளியாக தமிழ்ச் சூழலுக்கு கொண்டு வந்தமீட்சிஒரு கட்டத்தில் தனது ஓட்டத்தை நிறுத்திக் கொண்டது.

அன்று அச்சில் வந்த மீட்சிஇதழ்களை இன்று தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும். இந்த சூழலில்தான் இணையத்தில்மீட்சிவர ஆரம்பித்திருகிறது. சிறுபத்திரிகை என்ற வடிவமே துடைத்து எறியப்பட்ட நிலையில், இந்தஇணைய மீட்சியை ஆதரிக்க வேண்டிய கடமை இலக்கிய ஆர்வலர்களுக்கு இருப்பதாக கருதுகிறேன். அதனால்தான் இந்த பதிவு.

படத்துடன் உலக கவிஞர்களின் அறிமுகம், அவர்களது கவிதைகள், முக்கியமான படைப்பாளிகள், போர்ஹேவின் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளின் தமிழாக்கம், இசை குறித்த விமர்சனம், கட்டுரை, நேர்காணல்என புதையலே இதற்குள் புதைந்திருக்கிறது. ஆர்வமுள்ளவர்கள் இந்த தளத்துக்கு செல்லலாம்.

தளத்தின் முகப்பிலேயே அனைத்தும் இருக்காது. தளத்தின் கீழே செல்லுங்கள். மாத வாரியாக, உதாரணமாக 2009 ஜனவரி, 2008 டிசம்பர்என தொகுப்பு இருக்கும். அதை க்ளிக் செய்யுங்கள். உலக இலக்கியத்தை நீங்கள் பார்க்கலாம், படிக்கலாம், அசை போடலாம்.

எனது பதிவிலுள்ள ழீன் ஜெனே கீழ்மையின் அழகியல் (4 பகுதிகள்), இளையராஜாவின் இசைக் குழப்பங்கள், கதை சொல்ல மறுக்கும் புனைவுகளும் கோணங்கியின் பாழி நாவலும் ஆகிய கட்டுரைகளை இந்த தளத்திலிருந்துதான் மீள் பதிவு செய்திருக்கிறேன்

மீட்சியின் இணைய தள முகவரி: http://meetchi.wordpress.com/

சாரு நிவேதிதா: நம்பர் ஒன் எழுத்துல திருடன்?

ஜனவரி 22, 2009

இணையத்தில் வளைய வரும் நண்பர்கள் இந்தத் தலைப்பை பார்த்து அதிர்ச்சியடையக் கூடும். அல்லது எதிர்மறையாக தலைப்பை வைத்து இந்தப் பதிவு புகழ் அடைய நினைப்பதாக கருதவும் கூடும். அப்படியெல்லாம் எதுவுமில்லை. இது அக்மார்க் உண்மை. தகவல் பிழைகளுடன் தப்பும் தவறுமாக சாருவுக்குபத்தி(?)’ எழுத வருமே தவிர புதினத்துக்கும் அவருக்கும் 7 கடல், 7 மலை தூரம்.

உதாரணத்துக்கு அவரது சிறுகதை தொகுப்பை எடுத்துக் கொள்வோம். இந்த 2009ம் ஆண்டின் மிகச் சிறந்த நகைச்சுவை எதுவென்றால், அது சாரு நிவேதிதாவின்முழு(?)’ சிறுகதைகள் அடங்கிய தொகுப்பானமதுமிதா சொன்ன பாம்புக் கதைகள்தொகுப்புதான் (உயிர்மை வெளியீடு). ‘சாரு நிவேதிதா எழுதியசிறுகதைகளின் முழு தொகுதி இது என தொகுப்பின் பின் அட்டை சொல்கிறது. உண்மையிலேயே சாருவின் முழு சிறுகதைகளும் அடங்கிய தொகுப்பா இது?

சத்தியமாக இல்லை. அந்த தொகுப்பில்குறிப்பிட்டு சொல்லும்படியாக இருகதைகள் மிஸ்ஸிங். ஒன்றுஇந்தியா டுடேஇதழில் வெளியாகி இலக்கிய சிந்தனைபரிசு பெற்றது. இன்னொன்றுகுமுதம்குறுநாவல் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட குறுநாவல். இத்தனைக்கும் இந்த இரண்டும் 70களிலோ அல்லது 80களிலோ பிரசுரமாகவில்லை. ‘புகழ்ஏணியில் அவர் ஏற ஆரம்பித்த 90களில் பிரசுரமானது. அந்த இரண்டையும் அவர் ஏன் தன் தொகுப்பில் சேர்க்கவில்லை? அங்குதான் இருக்கிறது விஷயமே.

சஃபர்என்னும் அந்தச் சிறுகதைஇந்தியா டுடேவில் வெளியாகி அந்த மாதத்தின் சிறந்த சிறுகதையாக இரா. முருகனால் தேர்ந்தெடுக்கப்பட்டு, 1995ம் ஆண்டு வெளியான இலக்கிய சிந்தனைகள் தொகுதியிலும் இடம்பெற்றது. பரவலாக சிலாகிக்கப்பட்ட அந்த சிறுகதையை சாரு இந்தமுழுதொகுப்பில் சேர்க்கவில்லை. ஏன்?அதேபோல்குமுதம்இதழில்தஸ்தகீர் நெய்தல் நிலக் குறிப்புகள்‘. இதற்கு பின்னால்குசு‘ (நன்றி: சாரு) விட்டு சிரிக்கும் அளவுக்கு சில விஷயங்கள் இருக்கின்றன. ‘குமுதம்இதழில் முதலில் சாரு நிவேதிதா எழுதியகொடிக் கப்பல்குறுநாவல் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானது. ஆனால், பிரசுரமானபோதுதஸ்தகீர்நெய்தல் நிலக் குறிப்புகள்வந்தது! இதற்கும் பலத்த பாராட்டு. வரவேற்பு. ஆனால், அந்தோ பரிதாபம். இதுவும் சாருவின் முழு தொகுப்பில் இடம் பெறவில்லை. என்ன காரணம்? மறந்துவிட்டாரா? அல்லது பிரசுரமான இதழ்கள் தொலைந்து போயிற்றா? அப்படியேகாணாமல்போனாலும் சம்மந்தப்பட்ட இதழ்களை தொடர்பு கொண்டு குறைந்தபட்சம் அந்த குறிப்பிட்ட இதழ்களின் நகல்களையாவது வாங்கியிருக்கலாமே? 15 ஆண்டுகளுக்குள் பிரசுரமானவைதானே அவைகள்?

ஆனால், அப்படி எதுவும் சாரு செய்திருக்கமாட்டார். தன் பெயரில் பிரசுரமான அவை இரண்டையும் ஒரு போதும் இனி அது, தான் எழுதியதுதான் என சொல்லவேமாட்டார். காரணம், அந்த இரண்டு கதைகளும் எழுத்தாளர் ஆபிதீனால் எழுதப்பட்டவை. அந்த விவரங்கள் வெளிச்சத்துக்கு வந்ததும் சம்மந்தப்பட்டவர்களின் கை கால்களில் விழுந்து தன்புகழைகாப்பாற்றிக் கொண்டார். அப்படியானால் மற்றவை எல்லாம் சாரு எழுதியதுதானேஎன அவசரப்படாதீர்கள். ஆபிதீன் துணிந்து முறையிட்டதால் அவை இரண்டும் வெளிச்சத்துக்கு வந்தது. மற்றவர்கள் மவுனமாக இருப்பதால், இன்று வரை அவை சாரு எழுதியதாகவேகருதப்பட்டு வருகின்றன.

ஏதோ போகிற போக்கில் சாருவின் மீது சேற்றை வீசுவதாக நினைக்காதீர்கள். சிறு பத்திரிகை அன்பர்கள் அனைவருக்கும் இந்தவிஷயம்தெரியும். ஆபிதீன் நாகூரை சேர்ந்த எழுத்தாளர். சாருவின் நண்பர். அதாவது நண்பராக இருந்தவர். பல ஆண்டுகளாக துபாயில் வாழ்ந்து வருகிறார். அவர் சாருவுக்கு நட்பின் அடிப்படையில் எழுதிய கடிதங்களும், அதில் இருந்த விவரணைகளையும், ரத்தம் கக்கக் கக்க உத்வேகத்துடன் எழுதிய படைப்புகளையும் சாருவிடம் கொடுத்திருந்தார். அதைதான் சாரு தன் பெயரில் பயன்படுத்திக் கொண்டார்‘.

இதற்கான ஆதாரங்கள் அனைத்தும் ஆபிதீன் எழுதிய சிறுகதை தொகுப்பானஇடம்‘ (ஸ்நேகா வெளியீடு, 348, டி. டி. கே. சாலை, இராயப்பேட்டை, சென்னை 14, ஜூலை 2003ல் வெளிவந்தது) தொகுப்பில் பக்கம்: 177 முதல் 200 வரை வெளியாகியிருக்கும் கடிதங்களை பாருங்கள். இப்போது இந்தப் புத்தகம் அச்சிலோ, விற்பனையிலோ இல்லை. ‘மொத்தமாக யாரோ வாங்கி விட்டதாககாற்றில் ஒரு செய்தி கரைந்துவிட்டது..! நண்பர்களிடம் இருந்தால் அவசியம் வாங்கி படியுங்கள். சாருவின் திருட்டுத்தனம் தெளிவாக தெரியும். அவரதுஎல்லாபுதினங்களுமே எந்தளவுக்கு களவாடப்பட்டவை என்பதை உணரலாம்.

அப்படியும் இல்லாவிட்டால் இணையத்தில் இப்போதும் எழுதிவரும் நாகூர் ருமி, ஆபிதீன் (அதே அதே ஆபிதீன்தான்) ஆகியோருக்கு இ மெயில் அனுப்பி விசாரித்துப் பாருங்கள். உண்மை புரியும்.

ஆபிதீன் யார் என்றே தனக்கு தெரியாது என சாரு ஒருவேளை புளுகக் கூடும். பொய் சொல்வதும் சாரு பேசுவதும் எழுதுவதும் ஒன்றுதான் என்னும்போது இப்படியானகருத்தைஅவசியம் எதிர்பார்க்கலாம். ஆனால், ‘கவனமாகசாரு தனதுமுழுசிறுகதைகள் அடங்கிய தொகுப்பாக தொகுத்திருக்கும்மதுமிதா சொன்ன பாம்புக் கதைகள்தொகுப்பிலேயே ஆபிதீன் குறித்த குறிப்புகளும், விவரங்களும் இருக்கின்றன. அதுபோக சாருவின் முதல் நாவலானஅதாவது அவரது பெயரில் வெளிவந்த – ‘எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும்நாவலின் முதல் பதிப்பை பாருங்கள். அட்டையிலுள்ள அந்த எழுத்துக்களை எழுதியது ஆபிதீன்தான். மட்டுமல்ல, அதில் முன்னுரையாக பிரேமின் முக்கியமான கட்டுரை வெளியாகியிருக்கும். நாகார்ஜுனனும், ஜமாலனும் அந்த கட்டுரையை முன்வைத்துதான் நாவலை விமர்சனம் செய்திருப்பார்கள். அந்த கட்டுரையும் சரி, ஆபிதீன் எழுதிய எழுத்தும் சரி, அதன் பின் வந்த எந்த பதிப்பிலும் இல்லை!

இதோஇடம்சிறுகதை தொகுப்பின் பின் இணைப்பாக பிரசுரமாகியிருக்கும் சில கடிதங்கள்

சாரு நிவேதிதாவின் முதல் மனைவியான விசாலாட்சியின் (சம்யுக்தா, அமரந்தா என்ற பெயர்களில் குறிப்பிடும்படியான மொழிபெயர்ப்புகளை சிறு பத்திரிகைகளில் செய்து வருபவர்) 1. 10. 2002 தேதியிட்ட கடிதம்  

டியர் மிஸ்டர் ரஃபி (நாகூர் ருமி)

சாரு நிவேதிதா ஆபிதீனிடமிருந்து மட்டும் திருடவில்லை. என் மகள் எழுதியதிலிருந்தும் திருடியுள்ளார். ஆமாம், அவள் தனது பள்ளி தாளாளரின் மோசமான நடவடிகையைப் பற்றி ஒரு கடிதம் போல் எழுதியிருந்தாள். அதிலிருந்து அவர் திருடி அதை ஒரு கதையாக்கிவிட்டார். அவருடையதிருவிளையாடல்கள்பற்றி குறிப்பில் இதையும் நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம். எந்த அளவுகு சாரு நிவேதிதா கீழே இறங்குவார் என்பதை இது விளக்கப் போதுமானதாக இருக்கும் என நினைக்கிறேன்.

(இந்தக் கடிதத்தை விசாலாட்சி எனக்கு ஆங்கிலத்தில் எழுதியிருந்தார். சாரு நிவேதிதாவைஅவர்என்று குறிப்பிட்டாரா அல்லதுஅவன்என்று குறிப்பிட்டாரா என்று தெரிந்து கொள்ள முடியவில்லை: நாகூர் ருமி) 

 

‘இடம்’ பக்கம் : 180

காலச்சுவடுஇதழில் பிரேம் ரமேஷ் எழுதிய கடிதம்

இப்போதுகாலச்சுவடில்இந்த வம்பு. அடிதடியில் அவர் (சாரு நிவேதிதா) இறங்கியதற்கு காரணம் ஆபிதீன். ஆபிதீன் என்பவரை சிறு பத்திரிகை எழுத்தாளர்கள் அறிவார்கள். ‘யாத்ராவில் கவிதைகள் எழுதியிருக்கிறார். அவருடைய மூன்று நாவல்கள் 1. பழைய வீடு, 2. அறிந்தவர்களைக் குறித்து அறியாதவர்களுக்கு, 3. மூலம். இந்தப் படைப்புகள் இப்போது சாரு நிவேதிதாவிடம் உள்ளன. அவற்றை முறையேநதியின் சரிதம்‘, ‘108 கதைகளும் 108 கனவுகளும்‘, ‘Skiing and Buddhism’ என்று தலைப்புகளை மாற்றி தனது பெயரில் வெளியிட முயற்சிப்பதை பிரேம் ரமேஷ் (ஆகிய நாங்கள்) எதிர்த்ததால் எங்கள் மீது கோபம் கொண்டு இப்படி சாணி வாரி வீசுகிறார்.

சாரு நிவேதிதாவின் முதல் நாவலானஎக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும்என்ற படைப்பு பிரேம் எழுதித் தர அதை தன் பெயரில் சாரு நிவேதிதா போட்டுக் கொண்டார். அதே போல்ஸீரோ டிகிரிநாவல் ரமேஷ் எழுதித் தந்தது. அதையும் தன் பெயரில் போட்டுக் கொண்டார். மேற்குறித்த இரு நாவல்களிலும் தமது குடும்பம் மற்றும் மனைவிமார்களைப் பற்றிய குறிப்புகள் தவிர மற்றவை அனைத்தும் பிரேம் ரமேஷ் உடைய எழுத்துக்களாகும். இதை எம்.டி. முத்துக் குமாரசாமி, ராஜன் குறை, தீ. கண்ணான், ரஃபி (நாகூர் ருமி), கெளதம சித்தார்த்தன் போன்றவர்கள் அறிவார்கள்.  

பிரேம் ரமேஷ் (காலச்சுவடு 29, ஏப்ரல் ஜூன் 2000)

இடம்பக்கம் : 198
சாரு நிவேதிதாவின் 14. 6. 1987 கடிதத்தின் பகுதி  

உங்கள் நாவல் அறிந்தவர்களைக் குறித்து அறியாதவர்களுக்கு  தயார். பணமிருந்தால் வெளியிடலாம். உங்கள் நாவல்பழய வீடுவை ஜெராக்ஸ் காபி எடுத்து வைத்திருக்கிறேன். என் அலுவலகத்தில் ஜெராக்ஸ் மெஷின் இருப்பதால் எடுக்க முடிந்தது. என் லார்ஜ் செய்து பெரிய சைஸ் தாளில் எடுத்திருக்கிறேன்.

அன்புடன்

ரவி 

‘இடம்பக்கம் : 182

சாரு நிவேதிதாவுக்கு ஆபீதீனின் முதல் கடிதம் 

துபாய் 10.15 20. 5. 1995

 

அஸ்ஸலாமு அலைக்கும் ரவி மரைக்கார்..!

ஆபீதீன். சென்ற மாதம் 13ம் தேதி என் சீதேவி வாப்பா மெளத்தானார்கள். இம்மாதம் மெளாத்தாக நீங்கள். என்ன ஆயிற்று உங்களுக்கு? எதேச்சையாக சென்ற வார குமுதத்தை ஓசியில் பார்க்க நேர்ந்தபோது பரிசு பெறாதஆனால், பிரசுரிப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டசிறுகதைகளுள் சாரு நிவேதிதாவின்கொடிக் கப்பலும்ஒன்று என்று பார்த்து சற்றே முகம் சுளித்தேன். பத்து வருடங்களுக்கு முன்பு எழுதி உங்களுக்கு கொடுத்த எத்தனையோ குப்பைகளுள் அது ஒன்று என்று நினைவிற்கு வந்தாலும் அந்தத் தலைப்புநாகூராள் மட்டுமே உபயோகப்படுத்த முடிகிற அந்தத் தலைப்புஎன்னைக் கவர்ந்த ஒன்று. ஊரின் சாபக்கேடானசஃபர்ஐச் சொல்ல, அவ்வப் போது அங்கங்கே கிறுக்கி வைத்தவற்றை ஒன்றாகக் கூட்டி வரும் ஒன்றிற்கு (என்ன அது?) பெயராக வைக்கலாம் பின்னால் ஏதாவது (என்ன அது?) பண்ண என்று ஒரு ஆசை இருந்தது. என்னைக் கேட்காமலேயே அந்தப் பெயரை நீங்கள் எடுத்துக் கொண்டதில் வந்த அந்த முகச் சுளிப்பு, நட்சத்திர எழுத்தாளரான உங்கள் ஆக்கத்தில் அந்தப் பெயர் இன்னும் ஆழமான எழுத்திற்கு வித்திட்டிருக்கக் கூடும் என்ற நினைப்பில் தணிந்தது. அது அப்படியே இருந்திருக்கலாம். நேற்று ஒருவன் இந்தியா டுடேவைக் கொண்டு வந்து ஓசியில்  அவன் யாரிடம் ஓசி வாங்கினானோ? படிக்கக் கொடுத்தான். சந்திரிகா மாமியை ரசித்துக் கொண்டே உள்ளே போனால், அங்கேயும் தலைவர் ரவி மரைக்கார். அட, அண்ணன் இப்ப ரொம்ப பிரபலம்தான் போலும் என்றசஃபர்ஐ வாசித்தால்.

அப்படியென்றால் கொடிக் கப்பலும் தலைப்பு மட்டுமல்லாமல் உள்ளே உள்ளதும் வார்த்தைக்கு வார்த்தை என் கிறுக்கலா? சஃபரில் நீங்கள் அநேகமாக மாற்றியிருக்கிற ஒரு வார்த்தைஅம்மாவாகத்தான் இருக்கும் என்று ஒரு யூகம். வாப்பா இருக்கிற ஊர்லஉம்மாதான் வருவாஹா நானா! அது போகட்டும். உங்கள் பெயரில் அதை வெளியிட என்ன காரணம் இருக்கக் கூடும்? உங்களிடம் சொல்ல பிரச்னைகள் ஏதுமில்லையா? இல்லாவிட்டால் புதிதாக அதை நீங்களே உருவாக்கும் ரகம் என்பதால்சரக்குபற்றி சந்தேகமில்லை! உங்களின் உதவியால்யாத்ராவிலும், கணையாழியிலும் வெளியான கதை, குறுநாவல்களைப் பாராட்டிய நாலைந்து பேரைத் தவிர, நல்ல எழுத்தை பார்க்காதவர்களாய் நான் நினைக்குமளவு என் எழுத்தின் மேல் எனக்கு மதிப்பு. அந்த மதிப்போடு, என் கடிதங்கள் உட்படபழய வீடுநாவலையும் சேர்த்து புத்தகமாய் போடுவது பற்றி நீங்கள் என்னிடம் பேசும்போது, எழுதும்போது, ‘போய் குப்பையில் கொட்டுங்கள்என்று கடுப்படித்திருக்கிறேன். அதனால்தான் இப்படி கொட்டியிருக்கிறீர்களோ? அல்லது மறந்து போய் நீங்கள் எழுதிய கதையை கொடுப்பதற்கு பதிலாக அதை நகலெடுத்து கொடுத்துவிட்டீர்களா? அப்படியானால் முன்பு வந்த சாரு நிவேதிதாவின் எழுத்துக்கள் யார் மறந்து போய் உங்களிடம் கொடுத்து வைத்தவை? பணக் கஷ்டமா? ஏற்கனவே வெளியான கதையை ஆதவன், ஆனந்த விகடனுக்குக் கொடுத்து வாங்கிக் கொண்டதைநாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்புஎன்று நக்கல் பண்ணிய நீங்கள் அதற்கும் செய்திருக்கமாட்டீர்கள். வெளிநாடு சுற்றிப் பார்க்க காசில்லாத ஒரு முறை? ஊஹூம். அட, புரிந்துவிட்டது. எழுத்தின் வித வித வடிவங்களை வளர்ச்சியைப் பற்றி மூச்சு முட்ட என்னிடம் பேசி கவலைப்பட்ட நீங்கள், நான் இப்போது வெறும் விலும், லும் மட்டுமே நிற்பதில் கவலை கொண்டு அடுத்த நூற்றாண்டை ஆளப்போகும் எழுத்தின் நவீன வடிவத்தை இனம் காட்டியிருக்கிறீர்கள். வாழ்க அத்வைத எழுத்து. ரொம்ப நன்றி அண்ணே. உங்கள் நட்பு ஒரு பாக்கியம்தான்.

தமாஷ் இருக்கட்டும், துபாயின்காக்காக்கள் பற்றி இப்போது ரொம்ப சுறுசுறுப்பாக ஒரு வருடமாய் எழுதி வரும் ஒரு குறுநாவலில் (சரியாக இதுவரை பனிரெண்டு பக்கம்) மற்றம் என்று எது வந்தாலும் அது நல்லதல்ல; இப்போது இருக்கிற அமைப்பே நல்லது என்று நினைக்கிற ஒரு காக்காவிற்கு உதாரணமாக அந்தசுன்னத்சிரிப்பைத்தான் எழுதியிருக்கிறேன். உங்களின் தேவையில்லாத இஸ்லாமிய வேடத்தில் வந்த கதையைப் படித்துவிட்டு என்னை திருடனாக்குவார்கள் படித்தவர்கள். ஏன், இந்தப் புதுக் குப்பையை படித்தால் நீங்களே சொல்லக் கூடும். தேவையா இது? முதல் வேலையாக உங்களிடம் உள்ள என் எழுத்துக்கள் தாங்கிய பாவங்களைச் செய்த தாள்களைக் கொளுத்துங்கள். ஒரு நட்பை விட எந்த எழுத்தும் உயர்ந்ததல்ல.

என் மேல் தூய்மையான அன்பு காட்டிய ஒரு சிலரில் நீங்களும் ஒருவர். இப்படி ஒருசஃபர்செய்ய நியாயமான காரணம் இருக்கக் கூடும் (நீங்கள் சுன்னத் செய்திருப்பதால் அல்ல) என்று இன்னும் நம்புகிறேன். இலக்கிய மயிரையெல்லாம் கத்தரித்துவிட்டு சுத்தமாக ஒரு பக்கத்திற்குள் உங்கள் பதிலை எழுதுங்கள்.ரெண்டு பேரும் ஒண்ணுதானே ஆபீதீன்‘ என்று குப்பியடிக்காமல்!

ரேஷ்மாவிற்கு முத்தங்களுடன்,

ஆபீதீன்.

குறிப்பு: குமுதத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டதாய் விளம்பரம் செய்யப்பட்டகொடிக்கப்பல்வராமல், அடுத்த வாரம்தஸ்தகீர் நெய்தல் நிலக் குறிப்புகள்வந்தது. அதுவும் ஆபிதீனுடையது! ‘பழய வீடுநாவலில் வரும் ஒரு பகுதி.

இடம்பக்கம்: 188.

ழீன் ஜெனே-கீழ்மையின் அழகியல் – 4 / பிரம்மராஜன்

ஜனவரி 21, 2009

1957இல் ஜெனே எழுதிய The Blacks நாடகத்தை 1959ஆம் ஆண்டு தர்ஞ்ங்ழ் இப்ண்ய் என்ற இயக்குநர் மேடையேற்றினார். இதில் பங்கு பெற்ற எல்லா நடிகர்களும் நீக்ரோக்கள் என்ற செய்தி கவனத்திற்குரியது. நிறைய பார்வையாளர்களை இந்த நாடகம் குழப்பிய போதிலும், விமர்சகர்களால் புரிந்து கொள்ள இயலாமல் போனாலும், சிறந்த முறையில் நடிக்கப்பட்டு பல மாதங்கள் வெற்றிகரமாய் நடந்தது. இதில் நீக்ரோக்கள், சமூகத்திலிருந்து விலக்கப்பட்ட அனைத்து சாராருக்குமான படிமமாக இருக்கின்றனர். மற்ற நாடகப்பாத்திரங்களைப் போலவே இவர்களிலும் தண்டனைக் குற்றவாளிகள், சிறைவாசிகள் ஆகியோரைப் பார்க்க முடியும். குற்ற உணர்வையும், பழி தீர்த்தலையும் குறித்த கனவுகளைப் பற்றிய கனவுகளை இவர்கள் காண்பவர்களாகின்றனர். Village மற்றும் virtue ஆகிய இரு பாத்திரங்கள் மாத்திரமே ஜெனேவின் இருண்ட நாடக உலகில் தனித் தன்மை கொண்டவர்கள். தம் விஷச் சூழலில் இருந்து தப்பித்து வெளியேறி, பகற்கனவுகளைத் தாண்டி, உண்மையான மானிட உறவுகளைக் காதல் மூலமாக சிருஷ்டிக்கின்றனர். கவித்துவம் மிகுந்த மொழியை The Blacksநாடகத்தில் ஜெனே கையாள்கிறார்.

1961 ஆம் ஆண்டு உருவான The Screens, அல்ஜீரியப் போர் மீதான ஜெனெவின் கடும் விமர்சனமாக அமைகிறது. இந்த நாடகத்தில் சில அம்சங்களைப் பார்த்தபின் ஜெனே அபத்த நாடக அரங்கினை விட்டு விட்டு அரசியல் யதார்த்த நாடகத்திற்கு மாறி விட்டாரோ என்ற சந்தேகம் எழுவது இயல்பு. The Blacksஇல் சொல்லப்பட்ட விஷயங்களுக்கும், The Screens நாடகத்தில் விவாதத்திற்கு உள்ளாகும் விஷயங்களுக்கும் சில பொதுத்தன்மைகள் காணப்படுகின்றன. நான்கு அடுக்குகளில் அமைந்த திறந்தவெளி அரங்கில் The Screens நடத்தப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட பாத்திரங்கள் இடம் பெறும் இந்த நாடகத்தை நிர்வாகம் செய்வது சுலபமாக இருக்கவில்லை. 1964 இல் Screens நாடகத்திற்காக தயார்ப்படுத்த வேண்டுமென்ற பிரதான நோக்கத்துடன் தொடங்கப்பட்ட Peter Brook இன் Theature of Cruelty, ஜெனேவின் நாடகத்தில் முதல் 12 காட்சிகளை மட்டுமே நிகழ்த்த முடிந்தது.

பொதுவாகச் சொல்வதானால் ஜெனேவின் எதிர்ப்புகளும், கலகமும் சடங்கியல்பானவை. இந்த சடங்கு என்பது இச்சை பூர்த்திக்கானது (Wish-fulfilment). எனவே மனோவியல் உண்மைகளைக் கொண்டதாக இருக்கின்றன. ஜெனேவின் படைப்புகள், நாடகத்திற்கு எழுத வந்த போது தன் நாவல்களில் விஷச் சூழல்கள் போலச் சுற்றிச் சூழ்ந்த பகற்கனவுகளில் இருந்து அவரால் வெளிவர முடிந்தது. இவை சமூகத்தினால் சிக்கி வைக்கப்பட்ட தனிமனிதர்களைப் பற்றிப் பேசுகின்றன. இவர்கள் தமக்கான அர்த்தங்களை சடங்குகள் மற்றும் புராணிகம் வழியாகக் கண்டுபிடிக்க முயன்று தோல்வியடைகின்றனர் The Balconyயில் வரும் புரட்சிக்காரர்களைப் போலவே.

ஜெனேயின் அரசியல் முக்கியத்துவத்தை Philp Thodyமட்டுமே சுட்டிகாட்டியிருக்கிறார். இறுதி இரண்டு நாடகங்களும் இனப் பிரச்னையையும், பிரான்சுக்கு எதிரான அல்ஜீரியாவின் துன்பப் போராட்டங்களையும் காட்டுகின்றன. அரசியல் ரீதியான பார்வையிலும் தோல்விக் கண்ணோட்டமே ஜெனேவுக்கு இருந்தாலும் ஒரு சமுதாயம் எங்ஙனம் தன்னை உருவாக்கிக் கொள்கிறது என்பதை நம்மால் கவனிக்க முடியும். மனித அனுபவங்களின் முக்கியத்துவத்தையும் ஜெனே மறுப்பதில்லை. மாறாக அவற்றுக்குப் புதிய பரிமாணங்களில் அர்த்தங்களைத் தரத் தேடுகிறார். ஆசாரமற்ற உலகு யதேச்சையானது. அர்த்தம் விளங்க சாத்தியம் தராத உலகம் ஆழம் காண முடியாததாய் இருக்கிறது.ஆனால் இவ்விரு உலகங்களும் இணையும் இடம் கவிதை பிறக்குமிடம். ஜெனேவின் ஒரு போக்கு வெளிப்புறத்திலிருந்த தினசரி வாழ்வினைப் பார்க்கிறது. இன்னொரு போக்கு முழுமையான பொய்த் தோற்றத்தை சிருஷ்டிக்க யத்தனிக்கிறது. இவ்விரு போக்குகளின் மோதலில் அனாசார உலகின் (Profane) தொடர்பு அறுந்து போய்விடுகிறது.
ஆரம்ப நாடகங்கள் இரண்டும் அவற்றின் கச்சிதத் தன்மை மூலம் சார்த்தரின் Huis clos நினைவூட்டுகின்றன. பின் கட்ட நாடகங்கள் உத்திமுறை காரணமாகவும், திறந்த வெளியை நோக்கிச் செல்வதாலும், Committedஆக இருப்பதாலும் பெர்டோல்ட் பிரெக்ட் தன்மையான காவியங்களைப் போலிருக்கின்றன. தன்னை மீறியே ஜெனே ஒரு Committed கவிஞராக இருக்கிறார். காரணம் ஜெனேவின் படைப்புச் செயலுக்கும், பார்வையாளர்களின் செயல்பாடுகளுக்கும் முரண்கள் இருக்கின்றன. ஜெனே தனது நாயகர்களை அவர்களின் சமூகப் பொருந்து சூழல்களில் இருந்து பிரித்து எடுத்து Negative heroகளாகக் காண்பித்தாலும், பார்வையாளர்கள், இந்த நாயகர்கள் எந்தச் சமூகச் சூழலில் இருந்து வந்தனரோ அங்கே அவர்களைப் பொருத்தி, Positive hero க்களாக விளக்கிக் கொள்கின்றனர். ஜெனேவின் இரட்டைநிலை இது தான்: சோஷலிஸ்ட் நாடக அரங்கினைச் சிருஷ்டிக்க மறுப்பதன் மூலம் negative revolt ஒன்றை உருவாக்குகிறார். இந்த negative revoltசமுக பூர்வமாகவே விளக்கம் பெற முடியும். இன்றைய பார்வையிலிருந்து பார்க்கும் போது கடைசி மூன்று நாடகங்களும் Antonin Artaud இன் Theatre of Cruelty பற்றிய கோட்பாடுகளை ஏற்று, ப்ரெக்டின் Theatre of Provocation ஸ்வீகரித்துக் கொண்டு, கவனம் சிதைக்கும் Theatre of Hatred ஆக மாறுகின்றன.

நன்றி: http://meetchi.wordpress.com/

ழீன் ஜெனே-கீழ்மையின் அழகியல் – 3 / பிரம்மராஜன்

ஜனவரி 21, 2009

ஜெனேவின் நாடகங்களின் உலகம் படிநிலை அமைப்பு சார்ந்தும், சடங்குகள் நிறைந்தும் இருக்கிறது. இந்த உலகம் எதிர்மாறாக்கப்பட்டசாதாரண” மதிப்பீடுகள் மற்றும் சடங்கு முறைகளின் மீது பெருமளவு சார்ந்துள்ளது. இந்த எதிர்மாறாக்கப்பட்ட மதிப்பீடுகள் ஜெனேயின் எல்லா நாடங்களுக்கும் மையமான விஷயம். சாவு ஒன்றினையும், பலியாள் ஒருவரையும் சம்மந்தப்படுத்தும் இந்த நாடகங்கள்தீவினை”யின் வெற்றியைக் கொண்டாடுகின்றன. இந்தத் தீவினை, பூர்ஷ்வா சமூகங்களால் உயர்த்திப் பிடிக்கப்படும் மதிப்பீடுகளுக்கு மறுதலையானது. ஆட்கொள்ளும் நினைவுகள், பொய்மையான கற்பனைகள், மற்றும் தன்னிச்சையான மூலாதர விடாய்கள் ஆகியவற்றுடன், யதார்த்த உலகினை சவாலுக்கு இழுத்தபடி தம் சுய அடையாளத்தைத் தேடித்திரியும் கதாபாத்திரங்கள் இவ்வுலகில் நிறைந்துள்ளனர்.

ஜெனேவைப் பொறுத்தவரையில் நாடகங்கள் என்பவை யதார்த்த நிகழ்ச்சிகளைப் பிரதிநிதித்துவம் செய்யப்படுவதற்கல்ல. அவை பகற்கனவுகள். சிறைவாசி ஒருவனின் fantasy களை வாழ்க்கைப் போலாக்கும் ஒரு முறைமை. இதே காரணத்திற்காக ஜெனேவின் நாடகங்கள் நேரடித்தன்மை மிக்க நேச்சுரலிஸத்தை நிராகரிக்கின்றன. சற்றே தூக்கலான, வகைமைப்படுத்தப்பட்ட சிறைக்காவியங்களாகவும் இவற்றைப் பார்க்கலாம்.

Death Watchஜெனேவின் முதல் ஓரங்க நாடகம். இதை ஓரளவு அவரின் உரைநடை எழுத்துக்களின் நீட்சி எனக்கூற முடியும். இந்த நாடகத்தின் களமும் ஒரு சிறைதான். நான்கு குற்றவாளிகளைப் பற்றியது. மூன்று முக்கியப் பாத்திரங்களே நாடகத்தில் வருகிறார்கள். இவர்களால் வழிபடப்படும் இன்னொருவன் வெறுமனே உரையாடல்கள் மூலம் உயிர் பெருகிறான். 1949 ல் முதல் முதலாக Death Watch பாரிஸ் நகரில் மேடை யேற்றப்பட்டது. சிறிய, ஆனால் சக்தி வாய்ந்த இந்த நாடகம் ஜெனேவின் பிற்காலத்திய நாடகங்களுக்கான ஒரு சிறந்த முகவுரையாக அமைகிறது.

சிறைவாசிகளின் குறுகலான எல்லைகளில் இருந்து விடுதலையடைந்தது The Maids என்ற நாடகம். The Maidsல் முதலில் தோன்றும் வேலைக்காரியும், எஜமானியும் நிஜத்தில் வேலைக்காரிகளே என்பதை நாம் பிறகு தான் கண்டு கொள்கிறோம். நிஜமான எஜமானி வெளியில் சென்றவுடன் வேலைக்காரிகள் நாடகம் நடிக்கின்றனர். எஜமானியின் திமிர்த்தனமும், வேலைக்காரியின் அடிமைத்தனமும் இரு வேலைக்காரப் பெண்களால் நடிக்கப்படுகின்றன. சகோதரிகள் இருவரும் ஒருவர் மாற்றி ஒருவர் எஜமானியாகின்றனர். Claire என்ற பாத்திரமும், Solange என்ற பாத்திரமும் இந்த அடிமை விளையாட்டையும், இறுதியிலான ஒரு கலகத்தையும் கற்பனையாய் நடித்துப் பார்க்கின்றனர். அழகான, தங்களைவிட இளமையான எஜமானியின் மீதான காதல் வெறுப்பு உறவுகளும் நாடகத்தில் சிறப்பாக வெளிப்படுத்தப்படுகின்றன. அன்பு, அதீத வெறுப்பு, பாலுணர்வு சார்ந்த காதல் எல்லாமே சேர்ந்து இறுதியில் Claire இன் இறப்பில் முடிகிறது. எஜமானியின் வேடத்தில் நடித்தபடி, நிஜ எஜமானிக்குத் தயாரித்து வைத்திருந்த விஷத்தை அருந்தி இறந்து போகிறாள் Claire.

பாரிஸில் 1947 ஆம் ஆண்டு முன்னணி நடிகராயிருந்த Louis Jouvet இயக்குநராகப் பங்கேற்று The Maids நாடகத்தை மேடையேற்றினார். இந்த மேடையேற்றத்திற்குப் பிறகே ஜெனேவுக்குமரியாதைக்குரிய” உலகின் அறிந்தேற்பு கிடைத்தது. ஆனால் 1948 ஆம் ஆண்டு ஜெனேவுக்கு ஆயுள் தண்டனை நிச்சயம் கொடுக்கப்படலாம் என்ற நிலைமை இருந்தது. பிரதான இலக்கியவாதிகளான சார்த்தர், Jean Cocteau, பாப்லோ பிக்காஸோ போன்ற கலைஞர்கள் பிரான்ஸின் ஜனாதிபதிக்கு கையொப்பமிட்ட மனுக்களை அனுப்பினர். இதற்கு பிறகு ஜெனேவின் வாழ்க்கையில் சற்றே முன்னேற்றம் தெரிய ஆரம்பித்தது. ஃபிரான்ஸின் முன்னணிப் பதிப்பாளர் ஒருவர் ஜெனேயின் எழுத்துக்களை சிறந்த பதிப்பாக வெளியிட்டார். முதல் தொகுதி 1951 இல் வெளிவந்தது.

பொதுவாகவே ஜெனேவுக்கு நாடக உலகின் மீதும், நடிகர்கள், இயக்குநர்கள் மீதும் இருந்த வெறுப்பு The Balconyஎன்ற நாடகம் இங்கிலாந்தில் மேடையேற்றப்பட்ட பொழுது கலகபூர்வமாய்த் தெரியவந்தது. The Balconyமுதல் முறையாக 1957 ஆம் ஆண்டு லண்டனின் Arts Theatre Club இல் அதன் அங்கத்தினர்களுக்காக பிரத்யேகமாக மேடையேற்றப்பட்டது. Pater Zadek என்ற இளம் ஆங்கில இயக்குநர் இந்த முயற்சியை மேற்கொண்டார். ஆனால் நாடகம் நடைபெறும் பொழுதே அது நடத்தப்பட்ட விதம் குறித்து கலகம் செய்ததற்காக ஜெனே வெளியேற்றப் பட்டார். ஜெனே வாதிட்டார்: “என் நாடகம் உன்னதப் பரிமாணங்கள் கொண்ட ஒரு விபச்சார விடுதியில் அமைக்கப்பட்டிருந்தது. “பீட்டர் ஸாடெக் கேவலமான பரிமாணம் கொண்ட ஒரு விபச்சார விடுதியை மேடையில் நிறுத்தியிருக்கிறார்”. சில நாட்கள் கழித்து, லண்டனில் இருந்து வெளியான New Statesman பத்திரிகையில் (4 மே 1957) சிறந்த விவாதம் ஒன்றை முன் வைத்ததோடு மட்டுமின்றி Pater Zadek,, ஜெனேவின் மிகச் சரியான கனவாக இருந்த The Balconyநாடகத்தை நடிப்பின் வெளிப்பாடாய் மாற்றிய செயல்பாட்டில் சமரசம் நடந்துவிட்டது. இதை ஜெனேவால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை என்றார் Pater Zadek.. மேலும் மிக அழகிய திருஆலயத்தில் நடத்தப்பெறும் கூட்டுப் பிரார்த்தனையின் சிறப்பமைதியுடன் தன் நாடகம் நடத்தப்பட் டிருக்கவேண்டும் என்று ஜெனே அபிப்ராயப்பட்டார்.

பொய்மைகளின் மாளிகையான இர்மாவின் விபச்சார விடுதிக்கு வருகை தரும் மனிதர்கள் தங்களின் மிக அத்யந்த, ரகசிய பகல்கனவுகளில் திளைக்கலாம். ஒருவர் நீதிபதியாக மாறி தன்முன் நிற்கும் பெண் குற்றவாளிக்கு தண்டனை வழங்கலாம். தொழுநோயாளி ஒருவனை கன்னிமேரி நேரில் தோன்றி அற்புத குணமளிக்கலாம். இதற்கான உடைகளை, ஒப்பனைகளை விடுதியின் தலைவி இர்மா வைத்திருக்கிறாள். The Maids நாடகத்தைப் போலவே The Balconyயும் நாடகத்திற்குள் ஒரு நாடகம். The Balconyயின் சிறப்பு என்னவென்றால் அது ஃபான்டஸியின் உலகைப் பற்றிய ஒரு ஃபான்டஸியின் உலகம். கீழ்ப்படிதலுக்கும் மேலாதிக்கம் செலுத்துவதற்குமான பிரத்யேக் கருவியாக செக்ஸ் இயங்குவதை ஜெனே இதில் சித்தரிக்கிறார்.

நன்றி: http://meetchi.wordpress.com/