இளையராஜாவின் இசைக்குழப்பங்கள் – ராஜலஷ்மி

ஜனவரி 9, 2009

பிரம்மராஜனின் மீட்சி- 28 இதழில் வெளிவந்த இந்த கட்டுரையை உரிய அனுமதியில்லாமல் இங்கே மீள் பதிவு செய்கிறேன் – சூன்யம். நன்றி : http://meetchi.wordpress.com/ 

How to Name it

Long play 33 1/3 R.P.M. Stereo

Echo Records 1986

*இந்த இசைத்தட்டு விமர்சனம் மீட்சி-28 (ஜனவரி-மார்ச் 198 8) இதழில் வெளிவந்தது.
அப்பொழுது கேஸட்டுகள் அவ்வளவாய் புழக்கத்தில் இல்லை.

இளையராஜா சமீபகாலத்தில் எல்லோராலும் நிறைய பேசப்படுகிறார். தமிழ் சினிமா இசையில் இதுவரை யாரும் செய்திராத பலவிஷயங்களை அவர் செய்திருக்கிறார். நாட்டுப்பாடல் களிலிருந்தும், மேற்கத்திய சாஸ்திரீய சங்கீதத்திலிருந்தும் அவர் கடன் வாங்கி இருந்தாலும், சினிமா இசையை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்ற பெருமை அவரையே சேரும். கர்நாடக சங்கீதத்தை பாமரர்களுக்கும் எட்டும்படியாக செய்திருப்பதும் மேற்கத்திய இசையைக் கேட்கவேண்டும் என்ற ஆவலை பல இளைஞர்கள் மனதில் விழைத்திருப்பதும் அவருடைய இசையமைப்புதான். சினிமாவுக்கென இல்லாமல் அவர் இசை அமைத்துள்ள சாஹித்யங்கள் How to Name it என்ற இசைத்தட்டாக வெளியிடப்பட்டுள்ளன. அடுத்ததாக Nothing but Wind என்று இன்னொரு இசைத்தட்டு வரப்போகிறதென அறிவித்து ஆறுமாதங்களுக்கு மேலாகிறது. இன்னும் வரக் காணவில்லை.

இது 1986இல் வெளிவந்த இளையராஜாவின் How to Name It இசைத்தட்டுக்கு மிகத் தாமதமாக வரும் மதிப்புரை. இந்த இசைத்தட்டில் எந்த அளவுக்கு ஒரு முதிர்ந்த இசையமைப்பாளராக இளையராஜா வெளிப்பட்டிருக்கிறார் என்ற கேள்வியுடன், அவரும் அவருக்கு பின் அட்டைக் குறிப்பு (Sleeve Notes) எழுதியவரும் வைக்கும் மிக உயரமான கற்பிதங்களில் எந்த அளவு வரை அவர் சாதனை செய்திருக்கிறார், என்ற கேள்வியையும் எழுப்புவதே இக்கட்டுரையின் நோக்கம்.

How to Name It இல் உள்ள ஒன்பது சாஹித்யங்களும் (Compositions) சாஸ்திரீய கர்நாடக ராகங்களை சாஸ்திரீய மேற்கத்திய இசை வடிவங்களில் வெளிப்படுத்துகின்றன. கேட்கும் போது நமக்கு ஏற்படும் முதல் உணர்வு இதை முன்னமே இளையராஜவின் சினிமாப் பாடல்களில் கேட்டிருக்கிறோம் என்பதுதான். அத்தனை ராகங்களிலும் அவர் குறைந்தது நான்கு அல்லது ஐந்து பாடல்களாவது இசையமைத்திருக்கிறார். பெரும்பகுதி மிகவும் நிதானமான வேகத்தில் ஒன்றுக்கொன்று அதிக மன நிலை (mood) வேறுபாடின்றி அமைக்கப்பட்டிருப்பதால் ஒரு புதுமையான விஷயத்தைக் கேட்கும் உணர்வு ஏற்படுவதில்லை. இது மிகவும் தன் வயப்பட்ட கருத்தாகவும் இருக்கலாம். ஆனால் மேற்கத்திய சாஸ்திரீய இசையைக் கேட்கும் உணர்வு நமக்குக் குறைவாகவே ஏற்படுகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

முதல் சாஹித்யம் How to Name itதான் இந்த இசைத் தட்டில் உள்ளவற்றிலேயே நன்கு அமைக்கப்பட்டிருக்கிறது. ஷண்முகப்ரியா, சிம்மேந்திர மத்யம ராகங்களைக் கொண்டு அமைக்கப் பட்டுள்ள இந்த இசைத்துண்டு (Piece of Music) எப்படிச் சொல்வது என்ற உணர்வை நமக்குள் ஏற்படுத்துவதால் வெற்றியடைகிறது.

அடுத்துவரும் (Mad Mod Fugue) இரண்டு வயலின்களுக்கிடையிலான கேள்வி பதில் ஒரு நல்ல முயற்சி. ஆனால் நமக்குள் ஒரு பதிவை ஏற்படுத்துவதற்குள் முடிந்து போய்விடுகிறது இந்த மிகவும் சிறிய துண்டு.

மூன்றாவதான You cannot be Free கல்யாணி ராகத்தில் அமைக்கப்பட்டிருப்பதாக பின் அட்டைக் குறிப்பு கூறுகிறது ‘துளசி தளமுலசே’ என்ற தியாகராஜ கீர்த்தனை மாயாமாளவ கௌள ராகம்; தவறு யாரால் ஏற்பட்டது என்று தெரியவில்லை. நமக்குச் சொல்ல முடியாத ஏமாற்றத்தை தருகிறது இந்தத் துண்டு.

Study For Violin மறுபடியும் ஷண்முகப்பிரியாவை மேற்கத்திய பாணியில் தருகிறது. மற்றபடி இசையின் ஓட்டத்தில் எந்தப் புதுமையும் இல்லை.

It is Fixed பியானோவில் பந்துவராளியுடன் தொடங்குகிறது. ஆரம்பத்தில் ஏற்படும் நம்பிக்கை, பின்பகுதியில் drums ஐச் சேர்ப்பதால் குறைந்து போய் ஒரு தீவிரமற்ற மனோநிலைக்குத் தள்ளி விடுகிறது.

Chamber Welcomes Thiagaraja முழுக்க முழுக்க கல்யாணி ராகத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. பின் அட்டையில் மற்றவற்றிற்கு எழுதியது போல இதன் ராகம் குறிப்பிடப்படவில்லை. குறிப்பிட்டுள்ள உள் ஊடுருவும் பக்தி உணர்வோ நமக்கு ஏற்படுவதில்லை.

I met Bach in My House “ஒரு வைரத்தின் இதயத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது”, என்று குறிப்பு கூறுகிறது. அதில் பயன்படுத்தப்பட்டுள்ள இரண்டு ஆண் குரல்களுக்கு எந்தவொரு அதிக பட்ச வேலையும் இல்லாதவாறு பார்த்துக் கொள்கிறார் இளையராஜா. அதற்கு அடுத்ததான … and we had a talk ம் ஒரு இந்திப் பாடலை நினைவு படுத்துவதுடன் நின்று போய் விடுகிறது. Do Anything திடீரென்று நடுவில் ஒரு ஷெனாய் புகுந்து அதுவரை நமக்கு ஏற்படுகிற மனப்பதிவுகளையும் ஒன்றுமில்லாமல் அடித்துவிடுகிறது. அந்த சாஹித்யத்தில் ஒரு பேரமைதி சூழ்ந்து உன்னதத்தின் ஒளி வீசுவதாக அட்டையில் கூறுகிறார்கள். இந்த சாஹித்யங்களுக்கான தலைப்புகள் பெரும்பாலும் பொருந்தாமல் போய்விட்டதாகத் தான் படுகிறது. இத்தலைப்புகளும் குறிப்புகளும் இல்லாமல் இருந்திருந்தால் இசை ஏற்படுத்தும் உணர்வுகளாவது கேட்பவனுக்கு மிச்சம் ஆகியிருக்கும்.

இளையராஜா Frontline குக் கொடுத்த பேட்டியில் இருந்து சில இடங்களை நினைவு கூற வேண்டிய அவசியம் இப்போது ஏற்படுகிறது. மியூசிக் அகாதமி வித்வான்கள் தியாகராஜரின் பதினைந்து கீர்த்தனைகளை மனப்பாடம் செய்துவிட்டு அதையே திரும்பத் திரும்பப் பாடுகிறார்கள் என்றும், அவர்களின் குரல்களில் ரீங்கரிக்கும் அகங்காரத்தைத் தான் கேட்டிருப்பதாகவும் இளையராஜா கூறுகிறார். ஏன் நீங்கள் அதிகம் பேட்டிகள் தருவதில்லை என்ற கேள்விக்கு, விமர்சகர்கள் எல்லோரும் தங்களுக்கு எல்லாம் தெரிந்ததான நினைப்புடன் பேசுபவர்கள். அவர்களுடைய கருத்துக்களை என் வாயால் வரவழைக்கப் பிரயத்தனப்படுபவர்கள், அவர்களுக்கு நான் ஏன் அந்த வாய்ப்பைத் தர வேண்டும் என்று கேட்கிறார். ஓரளவுக்கு அவருடைய கருத்து சரி. எல்லாம் தெரிந்து யாரும் இருக்க முடியாது. ஆனால் கேட்பவனின் இசை உள்ளுணர்வை (Listener’s Sensitivity to Music) மறுப்பது எந்த வகையில் நியாயம்?

“இசையில் Value Judgements க்கு இடம் இல்லை. ஒரு இசை வடிவம் இன்னொன்றை விட உயர்ந்தது என்பது போலான கருத்துக்களைக் கூற யாருக்கும் உரிமையில்லை,” என்கிறார். கர்நாடக சங்கீதம், லைட்மியூசிக்கைவிட உயர்ந்தது என்று கூறும் பலருக்கு, லைட் மியூசிக்கே தெரியாது என்கிறார். அது இவருக்கு எப்படித் தெரியும்? மேலும் இசை என்பது வெறுமனே ஸ்வரங்களை மாற்றி மாற்றிப் போடும் ஏமாற்று வேலை தான், என்று கூறுவதெல்லாம் Value Judgement இல்லாமல் வேறு என்னவாம்?

மிகவும் சுயமான இசை அமைப்பாளர் என்று கருதிக் கொள்ளும் இளையராஜா (வித்வான்கள் பாடியதையே பாடுபவர்கள்!) நிறைய மேற்கத்திய சாஸ்திரீய சங்கீதகர்த்தாக்களின் இசையைக் காப்பி அடிக்கிறார். Dvorak என்ற ஸெக் Composer ன் Symphony No. 9 in E minor ஐக் கேட்டால் ‘சிட்டுக் குருவி… … வெட்கப்படுது’ என்ற பாடல் எவ்வளவு அப்பட்டமான காப்பி என்று தெரிவரும். ஒரு சாஹித்யத்தை எடுத்து விளக்கம் தருதல் வேறு. அப்படியே காப்பி அடிப்பது வேறு. தான் இன்னதை எடுத்தாண்டிருப்பதாக எங்கும் ஒப்புதல் கூட செய்வது இல்லை. இது நமக்குத் தெரியாத வரையில் மட்டுமே அவர் இசை அமைப்பை வியக்க முடியும்.

நாயின் குரைப்பிலும், கதவோசையிலும் இசையைப் பார்க்க முடியும் என்கிறார். இது போன்ற ஒரு பார்வை வரவேற்கப்பட வேண்டியது தான். ஆனால் நமக்குப் புதிது ஒன்றும் இல்லை. தி. ஜானகிராமன் பல வருடங்கள் முன்பே ‘மோக முள்’ளில் எழுதியதுதான். அடுத்த வரியிலேயே ஊளையிடும் நாய்களுக்கும், வித்துவான்களுக்கும் வித்யாசமில்லை என்று அவர் கூறும் போது அவருடைய நோக்கங்களின் உன்னதம் பற்றிய கேள்வி எழுகிறது.

“நான் ஒரு சங்கீதக்காரனில்லை. ஒரு வித்வானுக்கு அவனுடைய ராகம் ஒரு தடை; தாளம் ஒரு தடை; அவனுடைய இசைப் பயிற்சி ஒரு தடை; இசை பற்றிய அவனுடைய கருத்துக்களே ஒரு தடை. நான் சங்கீதக்காரனில்லாததால் என்னைக்குறுக்கக் கூடிய எல்லைகள் எதுவும் இல்லை. என் மனதுக்குத் தோன்றுவதைச் செய்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை; உதாரணத்திற்கு நான் ஆரோகணத்தில் மட்டுமே ஒரு பாடலை இசை அமைத்திருக்கிறேன். ஆனால் சங்கீத வித்வான்கள் எல்லோரும் ஒரு கீர்த்தனை என்பது ஆரோகணத்தையும் அவரோகணத்தையும் உள்ளடக்கி இருக்க வேண்டும் என்று நம்பி வந்திருக்கிறார்கள்,” என்று பேட்டியில் கூறுகிறார். (அடிக்கோடு என்னுடையது).

ஆரோகணம்: ஸரிகமபதநிஸ் ராகம்: கல்யாணி

அவரோகணம் : ஸ்நிதபமகரிஸ தாளம்: ஆதி

→ →

மா பா தா, நி ஸ் ô ; ; ; / நீ ஸ் ô ஸ் ô, ஸ் ô நி ஸ் ô ரீ ; //

க லை வா ணி யே / உ னைத் தா னே அழைத் தேன் //

மா பா பா,பா,பா,மா பாதா / ஸாரீகா, ம மாபாதா, நி //

உ யிர்த் தீ யை வ ளர்த்தேன் / வ ர வேண்டும் வரம் வேண்டும் //

இதில் கமகங்கள் காட்டப்படவில்லை. ஒரு தோராயமான ஸ்வரபடுத்துதல் தான் இது. இளையராஜா மிகவும் பெருமையாக தான் ஆரோகணத்தில் மட்டுமே அமைத்திருப்பதாகக் கூறிக் கொள்ளும் பாடல்.

முதல் விஷயம்-வித்வான்களின் நம்பிக்கை பொய்க்கவில்லை.

ஆரோகணத்தில் மட்டுமே பாடுவதானால் பாடல் பின்வருமாறு செல்ல வேண்டும்.

. . . . . . .. .. .. .. .. .. ..

ஸ ரி க ம ப த நி ஸரிகம பதநி ஸ் ரி க ம ப த நி ஸ ரி க ப த நி ஸ

. . . . . . .

அது சாத்தியமில்லை என்பது எல்லோரும் அறிந்ததே. ஒரு வார்த்தை முடிந்து அடுத்த வார்த்தை தொடங்கும்போது ஆரம்பத்தில் உள்ள ஸ்வரம் முதல் வார்த்தையின் முடிவிலுள்ள ஸ்வரத்துக்கு சற்றே கீழே உள்ள ஸ்வரமாகவோ அல்லது நான்கைந்து ஸ்வரங்கள் கீழாகவோ இருக்கிறது. அதனால் ‘ஸ்’ லிருந்து ‘நி’ யைத் தொட்டுத்தான் அல்லது ‘ப’ விலிருத்து ‘ம’ வைத்தொட்டுத்தான் சங்கதிகள் செல்கின்றன. இந்த இடங்களைப் பாடலிலும் அவரோகணத்திலும் அம்புக்குறியிட்டு காட்டியிருக்கிறேன். இரண்டாவது-இந்தப் பாடலில் இது சுலபமானதற்குக் காரணம் ஆரோகணமும் அவரோகணமும் அதே ஸ்வரங்களை உள்ளடக்கியவை. ஆரோகணத்தில் வேறு ஸ்வரங்களையும் அவரோகணத்தில் வேறு ஸ்வரங்களையும் ஒரு ராகம் கொண்டிருக்கும்போது இந்த மாதிரியான பரிசோதனை(!)கள் சாத்தியமில்லை. ஒரு பரிசோதனை என்பது நம்மை அடுத்தக் கட்டத்திற்கு அழைத்து செல்லாததால் இது பரிசோதனையே இல்லை. எல்லா வித்வான்களும் கல்பனாஸ்வரம் பாடும்போது இது போன்ற ஸ்வர அமைப்புகளைக் காலம் காலமாக உபயோகித்து வந்திருக்கிறார்கள். எந்த வித்வான்களை இவர் காரணமில்லாமல் கரிக்கிறாரோ, அவர்களிடமிருந்து ஒரு விஷயத்தை வாங்கி, தானாகவே ஒரு எல்லையை வகுத்துக்கொண்டு ஆரோகணத்தில் மட்டுமே இருக்க வேண்டும் என்று ஒரு ‘எல்லை கடந்த’ (அவருடைய வார்த்தைதான்) பரிசோதனை செய்துவிட்டார் இளையராஜா.

இசை கேட்கும் எல்லோருக்கும் எல்லாம் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. எல்லோருக்கும் அவரவர்களுக்கான எல்லைகள் இருக்கின்றன. தன்னை எல்லை கடந்தவனாக நினைத்துக் கொள்வது ஒரு சரியான நினைப்பாக முடியாது. சினிமாவுக்கு இசையமைப்பதில் இருக்கின்ற பல எல்லைகள் ஒரு வித்வானுக்குக் கிடையாது. வித்வான்களில் குரல்களில் (ஒரு சிலருடையதைத் தவிர) இளையராஜா அளவுக்கு அகங்காரம் தொனிக்கிறதா என்று நம்மை நாமே கேட்டுக் கொள்வோம்.

ஒரு நோக்கில் இளையராஜாவின் முயற்சிகளுக்கான மரியாதையையும், உரிய இடத்தையும் அளிக்க நாம் கடமைப்பட்டுள்ளோம். ஆனால் இது போன்ற முயற்சியிலேயே இதுதான் வெற்றிகரமான முதல் முயற்சி என்று கூறிக்கொள்வது அதிகபட்சம். இளையராஜாவுக்கு முன்பே யஹுதி மெனுஹினின் ‘அர்ஜுன்’ என்ற ஸாஹித்யம் (Composition) மேற்கத்திய ஸாஸ்திரீய இசையிலிருந்து இழை பிறழாமல் நம் ராகங்களை வெளிப்படுத்தி இருக்கிறது. பண்டிட் ரவி ஷங்கரின் முதல் Concerto வை Andreprevin Conduct செய்ததும், இரண்டாவது Concertoவை Zubin Mehta Conduct செய்ததும் L.ஷங்கரும் Maclaughlinம் செய்துள்ள Jazz முயற்சிகளும் கண்டிப்பாக நாம் இங்கு குறிப்பிட வேண்டியவை. என்ன உணர்வை அவை ஏற்படுத்துகின்றன என்று அட்டைக் குறிப்புகள் வரையறுப்பதில்லை.

ஒரு அற்புதமான விஷயத்தைச் சொல்லி அதைச் சாதாரண உதாரணங்களால் விளக்குவது, ஒரு சுயமான வீச்சை அடுத்து ஒரு தவிர்க்க முடியாத கீழிறங்கல் (Bathos) இதுதான் இளையராஜாவின் இசையமைப்பின் சாராம்சம். சுயமான வீச்சு அங்கங்கு தென்படுவதை மறுக்க முடியாததால்தான் இம்மதிப்புரை.

குறிப்புகள்:

1. இதில் எடுத்துக் காட்டியுள்ள இளையராஜாவின் கூற்றுகள் Frontline Aug 22-Sept 4, 1987 இதழில் வெளிவந்த பேட்டியில் இருந்து மொழி பெயர்க்கப்பட்டவை.

2. Concerto for Sitar and Orchestra-Ravi Shankar

Andre Previn

London Symphony Orchestra

Long play 33 1/3 RPM Stereo

EMI 1971 ASD 2752

3. Ragamala (Garland of Ragas)

Sitar Concerto No.2-Ravi Shankar

Zubin Mehta

London Philormonic Orchestra

Long play 33 1/3 RPM Stereo

EMI 1982 ASD 4314

பின்னூட்டமொன்றை இடுக