ஜெனேவின் நாடகங்களின் உலகம் படிநிலை அமைப்பு சார்ந்தும், சடங்குகள் நிறைந்தும் இருக்கிறது. இந்த உலகம் எதிர்மாறாக்கப்பட்ட “சாதாரண” மதிப்பீடுகள் மற்றும் சடங்கு முறைகளின் மீது பெருமளவு சார்ந்துள்ளது. இந்த எதிர்மாறாக்கப்பட்ட மதிப்பீடுகள் ஜெனேயின் எல்லா நாடங்களுக்கும் மையமான விஷயம். சாவு ஒன்றினையும், பலியாள் ஒருவரையும் சம்மந்தப்படுத்தும் இந்த நாடகங்கள் “தீவினை”யின் வெற்றியைக் கொண்டாடுகின்றன. இந்தத் தீவினை, பூர்ஷ்வா சமூகங்களால் உயர்த்திப் பிடிக்கப்படும் மதிப்பீடுகளுக்கு மறுதலையானது. ஆட்கொள்ளும் நினைவுகள், பொய்மையான கற்பனைகள், மற்றும் தன்னிச்சையான மூலாதர விடாய்கள் ஆகியவற்றுடன், யதார்த்த உலகினை சவாலுக்கு இழுத்தபடி தம் சுய அடையாளத்தைத் தேடித்திரியும் கதாபாத்திரங்கள் இவ்வுலகில் நிறைந்துள்ளனர்.
ஜெனேவைப் பொறுத்தவரையில் நாடகங்கள் என்பவை யதார்த்த நிகழ்ச்சிகளைப் பிரதிநிதித்துவம் செய்யப்படுவதற்கல்ல. அவை பகற்கனவுகள். சிறைவாசி ஒருவனின் fantasy களை வாழ்க்கைப் போலாக்கும் ஒரு முறைமை. இதே காரணத்திற்காக ஜெனேவின் நாடகங்கள் நேரடித்தன்மை மிக்க நேச்சுரலிஸத்தை நிராகரிக்கின்றன. சற்றே தூக்கலான, வகைமைப்படுத்தப்பட்ட சிறைக்காவியங்களாகவும் இவற்றைப் பார்க்கலாம்.
Death Watchஜெனேவின் முதல் ஓரங்க நாடகம். இதை ஓரளவு அவரின் உரைநடை எழுத்துக்களின் நீட்சி எனக்கூற முடியும். இந்த நாடகத்தின் களமும் ஒரு சிறைதான். நான்கு குற்றவாளிகளைப் பற்றியது. மூன்று முக்கியப் பாத்திரங்களே நாடகத்தில் வருகிறார்கள். இவர்களால் வழிபடப்படும் இன்னொருவன் வெறுமனே உரையாடல்கள் மூலம் உயிர் பெருகிறான். 1949 ல் முதல் முதலாக Death Watch பாரிஸ் நகரில் மேடை யேற்றப்பட்டது. சிறிய, ஆனால் சக்தி வாய்ந்த இந்த நாடகம் ஜெனேவின் பிற்காலத்திய நாடகங்களுக்கான ஒரு சிறந்த முகவுரையாக அமைகிறது.
சிறைவாசிகளின் குறுகலான எல்லைகளில் இருந்து விடுதலையடைந்தது The Maids என்ற நாடகம். The Maidsல் முதலில் தோன்றும் வேலைக்காரியும், எஜமானியும் நிஜத்தில் வேலைக்காரிகளே என்பதை நாம் பிறகு தான் கண்டு கொள்கிறோம். நிஜமான எஜமானி வெளியில் சென்றவுடன் வேலைக்காரிகள் நாடகம் நடிக்கின்றனர். எஜமானியின் திமிர்த்தனமும், வேலைக்காரியின் அடிமைத்தனமும் இரு வேலைக்காரப் பெண்களால் நடிக்கப்படுகின்றன. சகோதரிகள் இருவரும் ஒருவர் மாற்றி ஒருவர் எஜமானியாகின்றனர். Claire என்ற பாத்திரமும், Solange என்ற பாத்திரமும் இந்த அடிமை விளையாட்டையும், இறுதியிலான ஒரு கலகத்தையும் கற்பனையாய் நடித்துப் பார்க்கின்றனர். அழகான, தங்களைவிட இளமையான எஜமானியின் மீதான காதல் வெறுப்பு உறவுகளும் நாடகத்தில் சிறப்பாக வெளிப்படுத்தப்படுகின்றன. அன்பு, அதீத வெறுப்பு, பாலுணர்வு சார்ந்த காதல் எல்லாமே சேர்ந்து இறுதியில் Claire இன் இறப்பில் முடிகிறது. எஜமானியின் வேடத்தில் நடித்தபடி, நிஜ எஜமானிக்குத் தயாரித்து வைத்திருந்த விஷத்தை அருந்தி இறந்து போகிறாள் Claire.
பாரிஸில் 1947 ஆம் ஆண்டு முன்னணி நடிகராயிருந்த Louis Jouvet இயக்குநராகப் பங்கேற்று The Maids நாடகத்தை மேடையேற்றினார். இந்த மேடையேற்றத்திற்குப் பிறகே ஜெனேவுக்கு “மரியாதைக்குரிய” உலகின் அறிந்தேற்பு கிடைத்தது. ஆனால் 1948 ஆம் ஆண்டு ஜெனேவுக்கு ஆயுள் தண்டனை நிச்சயம் கொடுக்கப்படலாம் என்ற நிலைமை இருந்தது. பிரதான இலக்கியவாதிகளான சார்த்தர், Jean Cocteau, பாப்லோ பிக்காஸோ போன்ற கலைஞர்கள் பிரான்ஸின் ஜனாதிபதிக்கு கையொப்பமிட்ட மனுக்களை அனுப்பினர். இதற்கு பிறகு ஜெனேவின் வாழ்க்கையில் சற்றே முன்னேற்றம் தெரிய ஆரம்பித்தது. ஃபிரான்ஸின் முன்னணிப் பதிப்பாளர் ஒருவர் ஜெனேயின் எழுத்துக்களை சிறந்த பதிப்பாக வெளியிட்டார். முதல் தொகுதி 1951 இல் வெளிவந்தது.
பொதுவாகவே ஜெனேவுக்கு நாடக உலகின் மீதும், நடிகர்கள், இயக்குநர்கள் மீதும் இருந்த வெறுப்பு The Balconyஎன்ற நாடகம் இங்கிலாந்தில் மேடையேற்றப்பட்ட பொழுது கலகபூர்வமாய்த் தெரியவந்தது. The Balconyமுதல் முறையாக 1957 ஆம் ஆண்டு லண்டனின் Arts Theatre Club இல் அதன் அங்கத்தினர்களுக்காக பிரத்யேகமாக மேடையேற்றப்பட்டது. Pater Zadek என்ற இளம் ஆங்கில இயக்குநர் இந்த முயற்சியை மேற்கொண்டார். ஆனால் நாடகம் நடைபெறும் பொழுதே அது நடத்தப்பட்ட விதம் குறித்து கலகம் செய்ததற்காக ஜெனே வெளியேற்றப் பட்டார். ஜெனே வாதிட்டார்: “என் நாடகம் உன்னதப் பரிமாணங்கள் கொண்ட ஒரு விபச்சார விடுதியில் அமைக்கப்பட்டிருந்தது. “பீட்டர் ஸாடெக் கேவலமான பரிமாணம் கொண்ட ஒரு விபச்சார விடுதியை மேடையில் நிறுத்தியிருக்கிறார்”. சில நாட்கள் கழித்து, லண்டனில் இருந்து வெளியான New Statesman பத்திரிகையில் (4 மே 1957) சிறந்த விவாதம் ஒன்றை முன் வைத்ததோடு மட்டுமின்றி Pater Zadek,, ஜெனேவின் மிகச் சரியான கனவாக இருந்த The Balconyநாடகத்தை நடிப்பின் வெளிப்பாடாய் மாற்றிய செயல்பாட்டில் சமரசம் நடந்துவிட்டது. இதை ஜெனேவால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை என்றார் Pater Zadek.. மேலும் மிக அழகிய திருஆலயத்தில் நடத்தப்பெறும் கூட்டுப் பிரார்த்தனையின் சிறப்பமைதியுடன் தன் நாடகம் நடத்தப்பட் டிருக்கவேண்டும் என்று ஜெனே அபிப்ராயப்பட்டார்.
பொய்மைகளின் மாளிகையான இர்மாவின் விபச்சார விடுதிக்கு வருகை தரும் மனிதர்கள் தங்களின் மிக அத்யந்த, ரகசிய பகல்கனவுகளில் திளைக்கலாம். ஒருவர் நீதிபதியாக மாறி தன்முன் நிற்கும் பெண் குற்றவாளிக்கு தண்டனை வழங்கலாம். தொழுநோயாளி ஒருவனை கன்னிமேரி நேரில் தோன்றி அற்புத குணமளிக்கலாம். இதற்கான உடைகளை, ஒப்பனைகளை விடுதியின் தலைவி இர்மா வைத்திருக்கிறாள். The Maids நாடகத்தைப் போலவே The Balconyயும் நாடகத்திற்குள் ஒரு நாடகம். The Balconyயின் சிறப்பு என்னவென்றால் அது ஃபான்டஸியின் உலகைப் பற்றிய ஒரு ஃபான்டஸியின் உலகம். கீழ்ப்படிதலுக்கும் மேலாதிக்கம் செலுத்துவதற்குமான பிரத்யேக் கருவியாக செக்ஸ் இயங்குவதை ஜெனே இதில் சித்தரிக்கிறார்.
நன்றி: http://meetchi.wordpress.com/