Archive for the 'புத்தக அறிமுகம்' Category

2 தலையணைகளும்… இந்தப் புத்தக கண்காட்சியும்!

ஜனவரி 24, 2009

அட, என்று புருவத்தை உயர்த்த வைத்தது இந்தப் புத்தக கண்காட்சி. காரணம் இரு வெங்கடேசன்களும், அவர்களது வெங்கடேச புராணங்களும்.

பொருளாதார நெருக்கடி, ஈழத்தமிழர்கள் படுகொலை, ஓபாமா, ஐடி ஊழியர்களின் எதிர்காலம், ‘சத்யமேவ சுருட்டல், பிரபாகரன், விடுதலைப்புலிகள், தடைசெய்யப்பட்ட நூல்களுக்கு தடை (குறிப்பாக கிழக்குக்கு தடா, பொடா!), வில்லு, படிக்காதவன், சன், கலைஞர், திருமங்கலம் சுபமங்கலம், அஞ்சா நெஞ்சன், அஞ்சிய அண்ணன், தென்மண்டல ஒருங்கிணைப்பாளர், தென்னாட்டுடைய சிவனே போற்றி, 10 சாரு, 7 எஸ்.ரா, 3 ஜெமோ, 27 ரூபா ஜீரோ டிகிரிஇன்னபிற, இன்னபிற மனச்சாய்வுகளுக்கு இடையில் இரு புதினங்கள் தமிழ் இலக்கிய வரலாற்றின் போக்கை பறைசாற்றும் விதமாக வெளிவந்திருக்கின்றன.

இரண்டுமே 900 பக்கங்களுக்கு மேற்பட்டவை. இரண்டின் விலைகளும் 500 ரூபாய்க்கு மேல். இரண்டையும் எழுதியவர்கள் வெங்கடேசன்(கள்)தான். என்ன இனிஷியல் மட்டும் வேறு வேறு. ஒருவர்காவல் கோட்டம்நாவலை எழுதிய சு. வெங்கடேசன். மற்றவர்தாண்டவராயன் கதைபுதினத்தை எழுதிய பா. வெங்கடேசன்.

 

எப்படி ஆரம்பித்தது என்ற ரிஷிமூலத்துக்குள் நுழைந்தால்கலை கலைக்காகவே‘, ‘கலை மக்களுக்காகவேஎன்ற இரு வேறு தத்துவ போக்கை தொடலாம். அந்த இரு புள்ளிகளின் வழியே பயணத்தை மேற்கொண்டவர்களின் சமீபத்திய எச்சங்களாக இவர்கள் இருவரையும் காண முடிகிறது. யதார்த்தவாத எழுத்துக்கள் புனைவுகள், யதார்த்தவாத புதினங்கள் மொழி விளையாட்டுக்கள் என அவரவர் போக்கில் அவரவர்கள் கற்று, தேர்ந்து, மையமாக, மையமற்ற வார்த்தைக் கூட்டங்களை வந்தடைந்த ஒரு போக்கை இந்த இரு தலையணைகளும் உணர்த்துகின்றன.

ஒவ்வொரு ஆண்டுமே இப்படியான இருவகைப்பட்ட புதினங்களும் வெளியாகின்றன என்றாலும் இந்த ஆண்டு குறியீட்டு தளத்தில் முக்கியத்துவம் பெறுவதற்கு காரணம், இந்த இரு நாவலாசிரியர்களின் பெயர்களும் வெங்கடேசனாக அமைந்தது மட்டுமே ல்ல.

உதாரணமாக யதார்த்தவாத புதினமானகாவல் கோட்டத்தைஎடுத்துக் கொள்வோம். இதன் வெளியீட்டாளர், ‘தமிழினிவசந்தகுமார். தீவிர இலக்கிய புத்தகங்களை வெளியிட்டு வருபவர். ஜெயமோகன், நாஞ்சில்நாடன், சு. வேணுகோபால், சூத்ரதாரி என்கிற கோபாலகிருஷ்ணன் போன்றோரின் ஹோல்சேல் டீலர். இவர்கள் அனைவருமே யதார்த்தவாத எழுத்தாளர்கள்தான் என்றாலும் யாருமே மார்க்ஸிய அமைப்பு சார்ந்தவர்கள் அல்ல. .நா.சு., . பிச்சமூர்த்தி வம்சாவளியினர். ஆனால், காவல் கோட்டம்சு. வெங்கடேசன், அப்படியானவர் அல்ல. மார்க்ஸிய இலக்கிய அமைப்பான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநில துணைப் பொது செயலாளர். செம்மலர் வகையறா. சொல்லப்போனால் சென்ற சட்டமன்ற தேர்தலில் இந்த சுனா வெனா மார்க்ஸிய கம்யூனிஸ்ட் அணி சார்பாக போட்டியிட்டு தோல்வியடைந்தவர். இவர்களுக்கும் .நா.சு வகையறாக்களுக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம்தான். ஆனால், இந்தஇலக்கியவிஷயத்தில் ஒன்றாக இணைந்திருக்கிறார்கள்! ஒருவகையில் மாயாவாத எழுத்துக்களுக்கு எதிரான கூட்டணி என்றும் இதை புரிந்து கொள்ளலாம்.

அடுத்துதாண்டவராயன் கதையை எழுதியிருக்கும் பா. வெங்கடேசன். இவரும் அபிவாதையே சொல்லும்போது .நா.சு, . பிச்சமூர்த்தி என்றுதான் ஆரம்பிப்பார்! என்றாலும் அதிலிருந்து கிளை பிரிந்த பிரமிள், நகுலன் குழுவை சார்ந்தவர். இவரது புதினத்தை வெளியிட்டிருப்பவர் ஆழிபப்ளிஷர்ஸ். நாகார்ஜுனன் தனது வலையில் எழுதிவரும் கட்டுரைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளை இரு தொகுதிகளாக இந்த ஆண்டு கொண்டு வந்திருப்பவர்களும் இவர்கள்தான். அதே நாகார்ஜுனன் மொழிபெயர்த்த ஆர்த்தர் ரைம்போ கவிதைகளை தொகுப்பாக வெளியிட்டிருப்பவர்களும் இவர்கள்தான். கோணங்கியின்பாழிநாவலை இரண்டாம் பதிப்பாக இறக்கியிருப்பவர்களும் இதேஆழிதான். ஆனால், இலக்கிய வெளியீட்டாளராக மட்டுமே தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளஆழிவிரும்பவில்லை என்பது அவர்கள் இதே ஆண்டு கொண்டு வந்திருக்கும் மற்ற புத்தகங்களிலிருந்து தெரிகிறது. அதாவதுமையமற்றவெளியீட்டாளர்! இத்தனைக்கும் இந்த பானா வெனா வாழ்வது ஓசூரில். நிரந்தரமற்ற தொழிலாளர்களும், தொழிற்சாலைகளும் நிறைந்த பூமி. தொழிற்சங்கங்கள் ஆட்சி செய்யும் நிலம். எந்த திசையில் பொருளாதார நெருக்கடி எழுந்தாலும் அதன் வீரியத்தை உடனுக்குடன் அனுபவிக்கும் ஷேத்திரம். மார்க்ஸியலெனினிய குழுக்களின் தர்மஸ்தலா இந்தப் பகுதிதான். இந்த அமைப்பில் வாழும் பா. வெங்கடேசனிடமிருந்து மாயாவாத எழுத்து பூத்திருக்கிறது!

இப்படியான சூழலில் இந்த இரு புதினங்களையும் வாங்கினேன். இன்னும் முழுமையாக வாசிக்கவில்லை. அதற்கு முன்பாக வலையுலக நண்பர்களுக்கு ஒரு அறிமுகமாக இந்த இரண்டு புதினங்களை குறித்தும் சொல்லலாம் என்று தோன்றியது. முதலில்,

காவல் கோட்டம்சு. வெங்கடேசன்

நாவலின் பின் அட்டையில் இப்படி குறிப்பிடப்பட்டுள்ளது:

ஆறு நூற்றாண்டு கால மதுரையின் வரலாற்றைப் (1310 – 1910) பின்னணியாகக் கொண்ட நாவல் இது. அரசியல், சமூகவியல், இன வரைவியல், கண்ணோட்டங்களுடன் அந்த வரலாற்றின் திருப்புமுனைகளையும் தீவிரமான தருணங்களையும் திரும்பிப் பார்க்கிறது. தமிழ் வாசகர்கள் அறிந்திராத வரலாறு இது.புதிய உத்திகள், தேர்ந்த சொற்கள், வளமான மொழிநடை, கூர்மையான உரையாடல்கள், கனக்கும் மெளனங்கள், உள்ளுறை அர்த்தங்கள்வாசகனின் கற்பனைக்கு இடம் விட்டுத் தாண்டிச் செல்வதாகவே இந்நாவலின் பெரும்பகுதி இருக்கிறது. தமிழ்ப் புனைக்கதையின் கலாபூர்வமான வெற்றிகளில் இது மற்றுமோர் சாதனை.ஆசிரியர் குறிப்பில் உள்ள விவரங்களின் சில பகுதிகள்:

கள்ள நாட்டின் வேர்கள் எல்லாம் பாளையப்பட்டுகளின் வரலாற்றோடு பின்னிப் பிணைந்தே இம்மண்ணில் இறங்கியுள்ளன.மாடுகளை வணங்கி மேய்த்து திரிந்த கூட்டமும், அணைத்து அடக்கி வீர விளையாட்டாக்கிய கூட்டமும் பண்பாட்டில் எதிரெதிர் முனைகளில் நின்றாலும், ஒரே நிலத்தில் வாழ நேர்ந்தபோது, முரண்களை சமன்செய்தே வந்திருக்கின்றன.

ஜல்லிக்கட்டுதமிழரின் பண்பாட்டுக்கூறாகப் பாரம்பரியமாக இன்றும் தொடர்கிறது. இடையில் வந்ததொட்டி குடுப்புதொடர் வரலாற்றுக் காலத்தில் தொலைந்து போனது….லாடக்கட்டைகளுக்கு இடையில் சித்துக்கல் வரிவோடிக் கிடந்த வீட்டின் அலமாரியில் கட்டுக்கட்டாய் இருந்த பேப்பர்களை எல்லாம் அள்ளிப் போட்டுத் தேடினோம். பள்ளிக்கூடத்துக்குப் பிள்ளைகளை அனுப்பாத அனுப்பாத கள்ளநாடு அப்பன்களை போலிஸ் ஸ்டேஷன் படுக்கையில் வைக்கச் சொல்லி உபாத்தியாயினி இன்ஸ்பெக்டருக்கு எழுதிய ரிப்போர்ட் ஒன்று கிடைத்தது. 10.10.1920 என்று தேதியிடப்பட்டிருந்த அந்த மக்கிய தாளின் வழியேதான் என் பயணம் துவங்கியது. ஏறக்குறைய பத்தாண்டுகள் முடிந்துவிட்டன.கீழக்குயில்குடி பற்றி வரலாற்று ஆய்வு நூல் ஒன்று எழுதும் முயற்சியில் ஈடுபட்டிருந்ததால் அதன் சாயலில் ஒரு கிராமத்தை உருவாக்க நினைத்தேன். அமண மலையின் தென்மேற்கே இடத்தை தேர்வு செய்த மறுகணமே கள்ளநாடு முழுவதும் நான் பார்த்த, கேட்ட கதைமாந்தர்கள் அனைவரும் அங்குவந்து சேர்ந்தனர். மரம் வெட்டி, மொட்டு தோண்டி, நிலவாகை சமப்படுத்தி, வீடு போட்டு ஓலை வேய்ந்து முடிந்ததும், பெரியாம்பளைகள் மந்தையில் வந்து உட்கார்ந்து கதை சொல்லத் துவங்கினர். கதை களை கட்டியது….மிஷனரிகளின் ஆவணங்கள், அரசின் ஆவணக் காப்பகங்களில் உள்ள தரவுகள், எழுதப்பட்ட வரலாற்று நூல்களில் கிடைக்கும் தகவல்கள், ஊர்கள்தோறும் மக்களின் நினைவுகளில் கொட்டிக்கிடக்கும் செய்திகள் என எல்லாவற்றையும் தேடி அலைந்தேன்இதன் முதல் பாகத்தில் வரும் அனைத்து மாந்தர்களும், நிகழ்வுகளும் உண்மையே. கன்னிவாடிப் பாளையம் மூக்குப்பறி மைசூர் போருக்கு 16000 வராகன் கொடுத்தது முதல் ருஸ்தம் கானுக்கு காதுவலி என்பதுவரை உண்மையான வரலாற்று தரவுகளால் ஆனது….19

ஆம் நூற்றாண்டில் மதுரையிலிருந்து மதராஸ் வர மாட்டு வண்டிப் பயணத்திற்கான செலவுத்தொகை என்ன? என்பதில் தொடங்கி, கள்ளநாட்டில் நடைமுறையில் இருந்த, குற்றங்களுக்கான தண்டனைச் சட்டம் என்ன என்பது வரைகங்காதேவியின்மதுரா விஜயத்தில்உள்ள பாண்டியனுடைய வாளின் பெயர் என்ன என்பதிலிருந்து களவின்போது தும்மல் வராமல் இருக்க கைமருந்து என்ன என்பது வரைஅத்தனையும் சேகரிக்க, உறுதிப்படுத்த நட்பும் தோழமையும் கொண்ட பெரும்வட்டம் என்னைச் சுற்றி செயல்பட்டது  

சு. வெங்கடேசனுக்கு வயது 38. ‘கலாச்சாரத்தின் அரசியல்‘, ‘ஆட்சித் தமிழ்: ஒரு வரலாற்றுப் பார்வைஆகிய இரு ஆய்வு நூல்களையும், ஆறு சிறு நூல்களையும் எழுதியுள்ளார். நான்கு கவிதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநில துணை பொதுச் செயலாளர்.(‘

காவல் கோட்டம்‘, சு. வெங்கடேசன், தமிழினி வெளியீடு, 67, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, பக்கம்: 1048, விலை: ரூ: 590, )

தாண்டவராயன் கதை: சொல்லப்படாத கதைகளின் கதை முப்பத்தெட்டு சர்க்கங்களில்பா. வெங்கடேசன்

பின் அட்டை இப்படி சொல்கிறது: தன் மனைவியின் கண்நோய்க்கான மருந்தைத் தேடி அதற்காகத்தான் செல்கிறோம் என்பதைத் தெரிந்து கொள்ளாமலேயே கதைகளின் நிலத்திற்குப் பயணமாகிறான் ட்ரிஸ்ட்ராம். எழுதப்பட்ட வரிகளின் நடுவிலிருந்து மூதாதையர்களின் ஆவிகளை புலப்படுத்தத் தெரிந்த டப்ளின் நகர நூலகர், கூடுவிட்டு கூடு பாயும் வித்தை கற்ற சுல்தானிய ஒற்றன், இறந்தவர்களின் உடலருந்து உருவங்களை மாயமாய் மறையச் செய்யும் களிம்பு தயாரிக்கும் இருநூறு வயது பூசாரி, இவர்களோடு அன்புசெய்வதைத் தவிர வேறெந்த வித்தைகளையும் கற்று வைத்திராத ஒரு சேரிப் பெண் ஆகியோர் அவனுக்கு உதவுகிறார்கள்.மூன்றாவது அட்டையிலுள்ள குறிப்புகள்: உரையாடல்களுக்கடியில் இன்னொரு உரையாடல் ரகசியமாக எப்போதும் வெளிப்பார்வைக்கு தெரியாதவண்ணம் பதுங்கிக் கொண்டிருக்கும். ஒரு சம்பாஷணை. ஒரு கதை, ஒரு சம்பவத்தை ஆயிரம் பேர் ஆயிரம்விதமாக அர்த்தப்படுத்திக் கொள்ளக்கூடும். அந்த ஆயிரம் அர்த்தங்களும் தனித்தனியே முழு உண்மைகளாக இருக்கவும் கூடும். உண்மையென்பது பார்ப்பவர்களின், கேட்பவர்களின், படிப்பவர்களின் கால, இட, மனவோட்டங்களைப் பொறுத்து மாறிக்கொண்டேயிருக்கிறது. புரிந்து கொள்ளவோ, நம்பவோ முடியாத வினோதங்களும் மாயங்களும் தர்க்கத்தின் குறுக்கீடற்று சகஜமாக நடக்கும் ஒரு கதைக்கு தர்க்க வழிகளுக்குட்பட்ட மற்றொரு விளக்கமும் உண்டு. ஊர் எல்லையில் முதற்பழம் கனியும் மரம், ரகசியமாக வளார்ந்த காடு இருப்பதாக சொல்லும் கதைகளும் உங்கள் சரித்திரத்தைப் பற்றி உள்ளூர் கிழவன் சொன்னது போலவே அந்த காட்டிற்குள் நுழைந்தவர்கள் இந்த உலகிற்குள் திரும்ப முடியாது. சொல்வதை கேட்டுக் கொண்டிருப்பவனைப் பொறுத்துதான் கற்பனையோ நிஜமோ சொல்வதற்குள் நுழைகிறது.புதினத்தை புரட்டியதுமே இப்படி வருகிறது:

இந்தக் கதையின் குறுநாவல் வடிவத்தை அது பிரசுரத்திற்குப் போவதற்கு முன் நிராகரித்ததன் மூலம் இது இப்படியொரு புதினமாக மாறுவதற்குக் கவிஞர் பிரம்மராஜன் காரணமாயிருந்தார்…. பூர்த்தியடைந்த கதையை முழுக்கப் படித்தும், பேசியும், பின் இதன் வெளியீட்டு சாத்தியங்களுக்காகவும், வடிவாக்கத்திற்காகவும் என்னுடனேயே உண்டு உறங்கி அலைந்து திரிந்தும், தன்னூலைப்போல் இந்நூல் வெளிவருவதில் நண்பர் கோணங்கி காட்டிய உற்சாகம் மற்றும் அக்கறையின் மீதான வியப்பிலிருந்தும் சந்தோஷத்திலிருந்தும் நான் இன்னும் மீள முடியாமலிருக்கிறேன்மதுரையில் பிறந்த பா. வெங்கடேசன் இப்போது ஓசூரிலுள்ள தனியார் நிறுவன் ஒன்றில் நிதிப் பிரிவில் பணிபுரிந்து வருகிறார். இன்னும் சில வீடுகள், எட்டிப் பார்க்கும் கடவுள் ஆகிய இரண்டு கவிதைத் தொகுதிகளையும், ‘ஒரிஜினல் நியூஸ் ரீல் சிறுகதைகள்என்கிற ஒரு சிறுகதை தொகுப்பையும், ‘ராஜன் மகள்என்கிற சிறுநாவல்கள் தொகுப்பையும் வெளியிட்டிருக்கிறார்.(‘

தாண்டவராயன் கதை‘, பா. வெங்கடேசன், ஆழி பப்ளிஷர்ஸ், 12, முதல் பிரதான சாலை, யுனைட்டட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை 24, மின்னஞ்சல்: aazhieditor@gmail.com பக்கம்: 952, விலை: ரூ: 575)