Archive for the 'ஈழம்' Category

ஈழம்: நிலமா? மக்களா?

பிப்ரவரி 5, 2009

உயிருடன் இருக்கும் உடல்கள்

இருந்தும் இல்லாமல் இருக்கும், அரை சடலங்கள்

இல்லாமலும் இருக்கும் அரை உடல்கள்

உயிரற்ற சடலங்கள்

இதுதான், இது மட்டுமேதான் இன்றைய ஈழம்.

இன்று உடல்களுக்கு எந்த மதிப்பும், மரியாதையும் இல்லை. சில உடல்களுக்காக பல உடல்கள் அடக்கப்படுவதும், அழிக்கப்படுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்ட நியதிகளாகிவிட்டன. இந்த அழிப்பு வேலையில் மதங்களும், ஆதிக்கங்களும் கை கோர்த்து ரத்தவெறிப் பிடித்து அலைகின்றன.

பல உடல்களின் ஆற்றல்உழைப்பு பிழிந்தெடுக்கப்பட்டு, சில உடல்களின் இன்பத்துக்கான பொருளாக மாறும்போது மதங்களும், மூலதனமும் ரத்தக் காட்டேரிகளாக பல்லிளிக்கின்றன.

முன்பு காலனியாதிக்கத்தின் மூலம் மனித உடலின் ஆற்றலை சுரண்டிய ஏகாதிபத்தியம், இன்று உள்நாட்டுப் போர்களை உருவாக்குவதன் மூலம் உடல்களை குறைக்கின்றன. காரணம், இப்போது இயற்கை வளங்களும், நிலப்பரப்புகளும் தேவைப்படும் அளவுக்கு உடல்கள் தேவைப்படுவதில்லை.

இந்த கொடூரமான முதலாளித்துவஏகாதிபத்திய சூழலில்தான் இந்தக் கேள்வி,

ஈழம்: நிலமா? மக்களா?

புலம் பெயர்ந்த, புலம் பெயராத அனைத்து ஈழ மக்களும் இந்த வினாவைத்தான் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

பிரபாகரனும், ‘இந்தக் கேள்விக்கு எப்படி விடையளிக்க வேண்டும்?’ என்று ஈழத்தமிழர்களின் சடலங்களை கையில் ஏந்தியபடி அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும், இந்தியாவையும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

அவரால் சுயமாக செயல்பட முடியாது. அமெரிக்கஇந்திய கைப்பாவையாக மாறி மாறி இருந்தே பிரபாகரனுக்கு பழகிவிட்டது. அதனால்தான் ஏகாதிபத்தியம் போலவே அவருக்கும் மனிதர்கள் கண்களுக்கு தெரியவில்லை. அனைவரும் உடல்களாக, சடலங்களாகவே காட்சியளிக்கிறார்கள்.

புரட்சிகர நடவடிக்கைகளோ, மார்க்சியலெனினிய சித்தாந்த அறிவோ அவருக்கு இருந்திருந்தால் இப்படி உடல்களை, சடலங்களை ஏந்தியபடி நின்றுக் கொண்டிருக்க மாட்டார். மக்களை ஒன்றுதிரட்டி மூன்றாம் உலக நாடுகளிலுள்ள புரட்சிகர அமைப்புகளின் துணையுடன் ஒட்டுமொத்த ஏகாதிபத்தியத்தையும் எதிர்த்து நின்றிருப்பார். ஆனால்

பிரபாகரனும் கேட்கத்தான் செய்கிறார், ஈழம்: நிலமா? மக்களா?

ஆனால், எத்தனை ஈழத்தமிழர்களின் சடலங்கள், உடல்கள் விழுந்தாலும், இந்தக் கேள்விக்கு அமெரிக்காவோ, இந்தியாவோ பதில் சொல்லாது. இதை பிரபாகரன் உணர்ந்தாராஉணரும்படி அருகில் இருப்பவர்கள் சொன்னார்களா, சொல்வார்களா என்று தெரியவில்லை. அப்படியே சொன்னாலும் சர்வாதிகாரத்துடன் இருக்கும் பிரபாகரன் அதை கேட்பாரா என்பதும் சந்தேகம்தான்.

நடந்து கொண்டிருப்பது சிங்களதமிழர் இடையிலான யுத்தம் அல்ல. தெற்காசிய வல்லரசாக நினைக்கும் இந்தியாவுக்கும், ஈழத்தின் சர்வாதிகார அமைப்பாக இருக்கும் புலிகளுக்குமான போர் இது.

நடுவில் உதிர்ந்துக் கொண்டிருக்கின்றன ஈழத் தமிழர்களின் உடல்கள்

தெற்காசிய வல்லரசாக மாறத் துடிக்கும் இந்தியாவுக்கு, ஈழ நிலப்பரப்பு, தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வர வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வை இருக்கிறது.

அதற்கு ஈழத் தமிழர்களின் உடல்கள் தடைகளாக இருக்கின்றன

இலங்கை கடற்படைக்குள் பாகிஸ்தான், சீனா போன்ற இந்திய அண்டை நாடுகளின் உளவுப் பிரிவினர் ஊடுருவியிருக்கிறார்கள் என்று இந்தியா நியாயம் சொல்லக் கூடும். அதற்கு வலு சேர்ப்பது போல் பாகிஸ்தான் உளவுத்துறைத் தலைவரான பஷீர்வாலி முகமது இலங்கைக்கான தூதுவராக நியமிக்கப்பட்டார். கொழும்புதூத்துக்குடிகன்னியாகுமரி என முக்கோண கடல் பகுதியை அமைக்கப் போவது இந்தியாவா, பாகிஸ்தானா, சீனாவா என்பதுதான் இப்போது தெற்காசிய ஆளும் வர்க்கங்களின் முன்னால் உள்ள கேள்வி.

இதற்கு மீனவர்களின் உடல்கள் தடையாக இருக்கின்றன

உண்மையில் இந்திய ஆளும் வர்க்கம் இப்போது பயப்படுவது பாகிஸ்தானை பார்த்து அல்ல. சீனாவை பார்த்து. காரணம், இந்தியாவை சுற்றியுள்ள எல்லா அண்டை நாடுகளிலும் சீனா வலுவாக கால்பதித்திருக்கிறது. பர்மாவிலும், பாகிஸ்தானிலும் கடற்படைத்தளமாக பயன்படுத்த வாய்ப்புள்ள துறைமுகங்கள் இன்று சீனாவின் வசம் இருக்கிறது. இதேபோல் இலங்கையிலும் அது மாதிரியான துறைமுகத்தை கட்ட சீனா முயற்சித்து வருகிறது.

இந்த இடத்தில் இந்துமகாக் கடலில் சீனா வலுவாக காலூன்றி இருப்பதை நினைவில் கொள்வது இந்திய ஆளும் வர்க்கத்தை புரிந்து கொள்ள வழிவகுக்கும். இதுதவிர, எண்ணெய் ஆய்வு என்ற பெயரில் சேது சமுத்திர பகுதியிலும் காலூன்ற சீனா முயற்சிக்கிறது. இதற்கு இலங்கை அரசும் ஆதரவு தெரிவித்திருக்கிறது. இதெல்லாம் இந்திய ஆளும் வர்க்கத்தின் பக்கம் இருக்கும்நியாயங்கள்!’

இந்த நியாயத்துக்காக, அநியாயமாக ஈழத்தமிழர்கள் சடலங்களாகிக் கொண்டிருக்கிறார்கள்

ஆனால், சீனா இப்படி இந்தியாவை சுற்றி வளைத்திருப்பதுப் போல், தைவான், கொரியா, வியட்நாம் போன்ற சீனாவை சுற்றியுள்ள அண்டை நாடுகளிலோ, பசிபிக் கடல் பகுதியிலோ இந்தியாவுக்கு ஒரு தளமும் இல்லை. இனிமேல் அப்படி ஒரு தளம் அமைப்பதற்கான வாய்ப்பும் குறைவு 

அதனால்தான் ஈழ நிலப்பரப்பில் வளர்ந்திருக்கும் உடல்கள் வெட்டப்படுகின்றன…  

சீனாவின் ஆதிக்கத்தை  இந்திய ஆளும் வர்க்கம் மட்டுமல்ல, அமெரிக்க ஏகாதிபத்தியமும் கவலையுடன் பார்க்கிறது. சீனாவும் தெற்காசிய வல்லரசாக மாறக் கூடாது. இந்தியாவும் வரக் கூடாது. தான் மட்டுமே என்றும் நாட்டாமையாக இருக்க வேண்டும் என அமெரிக்க ஏகாதிபத்தியம் திட்டம் போடுகிறது. அதற்கேற்ப்ப காய் நகர்த்தியும் வருகிறது.

இப்படியிருக்கையில் எதிரிக்கு எதிரி நண்பன் என்பதான ராஜதந்திரத்தைமனதில் கொண்டு பிரபாகரன் நகர்ந்தால், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உதவியை நாடினால், அது ஈழத்தை விலை போட்டு விற்பதாகவே அமையும்.

காரணம், மூன்றாம் உலகத்தின் உடல் அழிப்பு இயந்திரமாக இருப்பதே அமெரிக்க ஏகாதிபத்தியம்தான்  

கெரில்லா பயிற்சிகளில் விடுதலைப் புலிகள் கைதேர்ந்தவர்கள் என்பதும் அதற்கு பல்லாயிரம் போராளிகள் அவசியமில்லை, விரல்விட்டு எண்ணக் கூடியவர்களே போதுமானது என்பதையும் பிரபாகரனைவிட, அமெரிக்கா நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறது.
அதுமட்டுமல்ல, இப்போது நடைபெற்று வரும் யுத்தத்தில் கொல்லப்பட்ட போராளிகளில் பெருமளவினர் புதிதாக விரும்பியோ விரும்பாமலோ விடுதலைப் புலிகளில் இணைக்கப்பட்டவர்கள் என்றும் முறையான பயிற்சி பெற்ற புலிகளின் பலமான பிரிவினரிடையே பாரிய இழப்புகள் பெருமளவில் ஏற்படவில்லை என்றும் ராஜ பக் ஷேவை விட அமெரிக்காவுக்கு நன்றாகவே தெரியும்.
அதனால்தான் அழகான திட்டத்தை அமெரிக்க வகுத்து காய் நகர்த்திக் கொண்டிருக்கிறது.
ஹமாஸ் ஹிஸ்புல்லா போன்ற அமைப்புகளால் இஸ்ரேலை எதிர்கொள்ள முடியவில்லை. தலிபானால் அமெரிக்க மற்றும் நேசநாட்டு படைகளை எதிர்கொள்ள முடியவில்லை. அதேசமயம் இஸ்ரேலாலும் அமெரிக்காவாலும் யுத்தத்தை வெல்லவும் முடியவில்லை. ந்த அமைப்பை அப்படியே ஈழத்தில் பொருத்தி வைப்பதே அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் திட்டம்.
இன்னுமொரு ஆப்கானிஸ்தானையும், இன்னுமொரு ஈராக்கையும் இலங்கையில் உருவாக்குவதே ஏகாதிபத்தியத்தின் லட்சியம்.
 
அப்போதுதான் உடல்களின் எண்ணிக்கை குறையும். பரந்த நிலப்பரப்பும், கனிமஎண்ணெய் வளங்களும் கிடைக்கும்.
அதனால் உயிர்கள் சடலங்களாகுவது குறித்து எந்த ஆளும் வர்க்கத்துக்கும் கவலையில்லை.
கவலைப்படும் வர்க்கங்கள் பிரபாகரனுக்கு அவசியமும் இல்லை.
நசுங்கிக் கொண்டிருக்கின்றன ஈழத் தமிழர்களின் சடலங்கள்
ஆமாம், ஈழம்: நிலமா? மக்களா?

இதற்குதானே ஆசைப்பட்டாய் பிரபாகரா…

ஜனவரி 29, 2009

கேள்வி: தமிழீயத்திற்கானதாக என்ன அரசியல் அமைப்பை நீங்கள் கருதுகிறீர்கள்?

பிரபாகரன்: அது தமிழீழத்தின் ஒரு சோசலிச அரசாக இருக்கும். மேலும் மக்களால் ஆதரிக்கப்படும் ஒரு தனி அரசியல் கட்சி மட்டும் அங்கிருக்கும். நான் பலகட்சி ஜனநாயகத்துக்கு எதிரானவன். அந்த ஒரு கட்சி ஆட்சி மூலமாகத்தான் ஈழத்தை துரிதமாக நாங்கள் முன்னேற்ற முடியும். ஒரு சோசலிச அமைப்பில் மக்களுடைய தேவைகள் மிக முக்கியமானவை.

கேள்வி: நாடாளுமன்ற ஜனநாயகத்தை வைத்திருப்பீர்களா?

பிரபாகரன்: இல்லை. மக்கள் தேர்ந்தெடுக்கும் ஒரே கட்சி மட்டும் உள்ள யுகோஸ்லாவியாவில் உள்ளதைப் போன்றதொரு பாணியிலான மக்கள் ஜனநாயகமாக இருக்கும்.

கேள்வி: டெலோ மீது ஒரு யுத்தத்தை நீங்கள் தொடுப்பதற்கான காரணங்கள் என்ன? தீவிரவாதிகளிடையேயான ஒற்றுமையின்மை உங்கள் இயக்கத்தை பலவீனப்படுத்தும் என்று நீங்கள் கருதவில்லையா?

பிரபாகரன்: எங்கள் போராட்டத்தில் ஒரு ஒருமைப்பட்ட அணுகுமுறையை நாங்கள் மேற்கொள்ள வேண்டும். எங்களுக்குள் நிலவும் எந்த ஒற்றுமையின்மையும் தமிழ் இயக்கம் முழுவதையும் பலவீனப்படுத்தும். எனது கருத்தின்படி போராட்டத்துக்கு தலைமையேற்க ஒரேயொரு தீவிரவாத குழு மட்டுமே இருக்கவேண்டும். மேலும் சிரீலங்கா இராணுவ தாக்குதல்கள் பலவற்றை எங்கள் புலிகள் மட்டுமே முறியடிக்க முடிந்தது. ஒரு ஒருமைப்பட்ட தனி இயக்கத்தோடு போரிடுவது சிரீலங்கா இராணுவத்துக்கு ஆபத்தானதாக இருக்கும். இப்போது ஒரே ஒருமைப்பட்டதாக புலிகள் இயக்கம் இருக்கிறது.

– 1986ம் ஆண்டு ஜூன் மாதம், ஆங்கில ‘இந்தியா டுடே’ மாதமிருமுறை இதழுக்கு பிரபாகரன் அளித்த பேட்டியிலிருந்து

பிரபாகரனுக்கு

ஈழ மக்கள் மருத்துவ வசதியில்லாமல் தொற்று நோய்க்கும், இலங்கை இராணுவத்தின் தாக்குதலுக்கும் ஆளாகி தவித்து வரும் நேரத்தில், இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

உன்னை தோழர் என்று அழைக்கவோ, போராளி என ஒப்புக் கொள்ளவோ மனம் மறுக்கிறது. பசி, பட்டினியுடன் அடுத்த விநாடி உயிர் வாழ்வோமா என்ற நிச்சயமற்ற நிலமையில் ஒரு இனமே அழிந்து கொண்டிருக்கும்போது, பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகி சகோதரிகள் கதறிக் கொண்டிருக்கும்போதுஎப்படி உன்னை புரட்சியாளனாக, மதிக்க முடியும்?

ஈழத்தமிழர்களின் இன்றைய நிலமைக்கு யார் காரணம் என எப்போதாவது உனக்குள் கேட்டிருக்கிறாயா? சிங்கள இனவெறிதான் இதற்கு காரணம்இதுகூடவா தெரியாது என்று சொல்லிவிட்டு போகாதே. சிங்கள இனவெறி மட்டுமல்ல, உனது பாசிச நடவடிக்கைகளும் இன்றைய ஈழ நிலமைக்கு காரணம். இதுதான் உண்மை.

உன்னையும், உனது இயக்கத்தையும் வளர்த்து ஆளாக்கியது யார்? சத்தியமாக ஈழத்தமிழர்களல்ல. இந்திய உளவுப்படை! அதனால்தான் ஆரம்பம் முதலே உனது பயணம் தெற்காசிய பிரதேசத்தின் நாட்டாமையாக வலம் வரத் துடிக்கும் இந்திய ஆளும் வர்க்கத்தின் உதவியை எதிர்பார்த்து நிற்பதாக அமைந்துவிட்டது. இது போதாதென்று உலக போலீஸ்காரனான அமெரிக்க ஏகாதிபத்தியத்திடம் பிச்சை வேறு

ஏன் பிரபாகரா, குள்ளநரிகளும் ஓநாய்களும், எதற்காக, எதன் பொருட்டு உதவி செய்யும், வளர்த்து ஆளாக்கும் என்ற தெளிவில்லாமலா ஒரு இயக்கத்தை கட்டி எழுப்பினாய்? அதுசரி, ‘விடுதலைப் புலிகள்இயக்கத்துக்கு என்ன அரசியல் தெளிவு, சித்தாந்தம் இருக்கிறது? உனக்கு அரசியல் ஆலோசகராக இருந்த பாலசிங்கம் ஒரு போலி கம்யூனிஸ்ட். இந்திய உளவுத்துறையின்முழுநேர ஊழியனாகபணிபுரிந்த ஆள். அப்புறம் பழ. நெடுமாறன் வகையறா. பாசிஸ்ட் இந்திராகாந்தியை ஆதரித்த பழ. நெடுமாறனால் என்ன விதமான அரசியல் தெளிவை உனக்குள் ஏற்படுத்தியிருக்க முடியும்? தமிழக நக்சல்பாரிகளை கொடூரமாக தாக்கிய தேவாரம், மோகன்தாஸ் போன்ற அடியாட்களை பராமரித்த எம்.ஜி. இராமச்சந்திரனை புகழ்ந்த பழ. நெடுமாறானால் எப்படி போராளிகளுக்கு சித்தாந்தத்தை கற்று தந்திருக்க முடியும்?

அதனால்தான் உன்னால் உலகம் முழுக்க அரசியல்ரீதியான ஆதரவை திரட்ட முடியவில்லை. அரசியல் உரிமையை வென்றெடுக்க முடியவில்லை. எழுதப்பட்ட, எழுதப்படாத வரலாற்று நெடுகிலும், ‘ஆயுதங்களிலிருந்து அதிகாரம்தான் பிறக்கிறது, சித்தாந்தமல்ல. மக்களை திரட்டி அவர்களின் ஒத்துழைப்போடு நடத்தப்படுவதுதான் புதிய ஜனநாயக் புரட்சியாக இருக்கும்’ என்று காணப்படுகிறதேஇதை நீ கற்காமல் போனதால்தான், உலகிலுள்ள புரட்சிகர இயக்கங்களுடன் உன்னால் தொடர்பு கொள்ளவோ, ஆதரவு திரட்டவோ முடியவில்லை.

புரட்சிகர நடவடிக்கையில் உன்னால் ஏன் இறங்க முடியாமல் போயிற்று?

காரணம் உனது பிறப்பு! (புலிகள் இயக்கத்தின் தோற்றத்தை குறிப்பிடுகிறேன்). எல்.டி.டி., எனப்படும் புலிகள் இயக்கம் வடக்கு மாகாணமான யாழ்பாணம் வளைகுடா பிராந்தியத்தை தளமாக கொண்டுதானே செயல்பட ஆரம்பித்தது. மேல்சாதி முதலாளித்துவ, குட்டி முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ, பணக்கார விவசாயப் பின்னணியில் உருவான, உனது இயக்கத்தால், ஏகாதிபத்திய, பாசிச அரசாங்கத்தின் வால் பிடித்தபடி செல்லத்தான் முடியும். ஈழ மக்களை இப்படியான அவலநிலைக்குத்தான் கொண்டுவந்து நிறுத்த முடியும்.

தமிழக ஓட்டுக் கட்சிகள் என்னை ஆதரிக்கிறார்கள் என சந்தோஷப்படாதே. உனது பிறப்பை போலவே (இங்கும் புலிகள் இயக்கத்தின் தோற்றத்தை குறிப்பிடுகிறேன்) தமிழக ஓட்டுப் பொறுக்கிகளின் பிறப்பும் மேல்சாதி முதலாளித்துவ, குட்டி முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ, பணக்கார விவசாயப் பின்னணியில் உருவானவைதான். அதனால்தான் ஓட்டுக் கட்சிகள் உன் புகழ்பாடுகிறார்கள்.

பிரபாகரா, ஈழத்தில் சொந்தக் காலிலும், வெளியில் புரட்சியாளர்களையும், பரந்துபட்ட மக்களையும் சார்ந்து நிற்கும் யுத்த தந்திரங்களை நீ கற்றிருந்தால், இன்று ஈழத்தின் நிலமையே வேறாக இருக்கும். ஆனால், இந்த போர்த்தந்திரங்களை உனது அரசியல் ஆலோசகராக தன் வாழ்நாள்வரை இருந்த பாலசிங்கம் சொல்லித்தந்திருக்க மாட்டான். காரணம் முன்பே சொன்னபடி பாலசிங்கமே ஒரு போலி கம்யூனிஸ்ட். அப்படியே தப்பித்தவறி பாலசிங்கம் உனக்கு இதையெல்லாம் சொல்ல வந்திருந்தாலும் நீ அதை செவிகொடுத்து கேட்டிருக்க மாட்டாய். காரணம், நீ முகஸ்துதியால் உருவானவன்.

பாசிஸ்டுகளிலேயே இரண்டுவகை உண்டு. ஒரு பிரிவினர் முகஸ்துதியால் சூழ்ந்திருப்பர். இன்னொரு பிரிவினர் முகஸ்துதியால் உருவாக்கப்படுவர். நீ இரண்டாவது வகையை சேர்ந்தவன்.

வரலாற்றில் தனிநபர்களின் பாத்திரம் குறித்த இயக்க இயல் கண்ணோட்டம் புரட்சியாளர்களுக்கு உண்டு. சரித்திரம் சில நாயகர்களை உருவாக்குவது போலவே, சரித்திரத்தின் போக்கை மாற்றும் பங்கும் இவர்களுக்கு உண்டு. இந்த விஷயம் உனக்கு பொருந்தாது.

காரணம், வசந்த் அண்ட் கோ விளம்பரத்தில் எல்லாம் கழிசடை வசந்தகுமார் சிரித்தபடி போஸ் கொடுப்பது போலவே, எல்லா புகைப்படத்துக்கும் நீ போஸ் கொடுக்கிறாய். இந்தியாவில் நீ இருந்த காலத்தில், தமிழகத்திலுள்ள அனைத்து பத்திரிகைகளிலும் உனது பேட்டிகளும், செய்திகளும் வந்தன. அந்த விஷயத்தில் பாலசிங்கம் ஒரு திறமையான பி.ஆர்.வோ.வாக செயல்பட்டான். கிட்டத்தட்ட ஜூனியர்விகடன், உனது பிரச்சார பீரங்கியாக இருந்தது. இதெல்லாம் உனக்கு கிடைத்த அங்கீகாரம் என நினைத்தாயா? அடப்பாவமேபிரபாகரா, இதற்கெல்லாம் ஆதாரமாக இந்திய உளவுத்துறை இருந்ததப்பா. அப்போது நீ, அவர்களது செல்லப் பிள்ளையல்லவா? அதனால் உன்னை சிங்காரித்து அலங்கரித்தார்கள். விதவிதமாக படம்பிடித்தார்கள். ஊடகங்கள் வழியாக உன்னை குஷிப்படுத்தினார்கள். இப்போது இந்திய உளவுத்துறைக்கு நீ வேண்டாதவனாகிவிட்டாய். எனவே தொடர்புசாதனங்களும் உனக்கு எதிராக இருக்கின்றன. இதை புரிந்து கொள்ளாமல் இப்போதும் நீ, இந்தியா ஏதாவது செய்யுமா என ஏக்கத்துடன் காத்திருக்கிறாய்.

ஒன்றை புரிந்து கொள் பிரபாகராஉண்மையான புரட்சியாளனும், போராளியும் ஒருபோதும் தன்னை முன்னிலைப்படுத்த மாட்டான். இயக்கத்தையே முன்னிருத்துவான். புரட்சியாளர்களின் அகராதியில் எப்போதுமே, ‘நான்கிடையாது. ‘நாங்கள்தான்.

உனது புகழ்பெற்ற வாசகங்கள் என்ன? யுத்த முனையில் எதுவும்எனதுஉத்தரவுபடியே நடக்கும். அவசர முடிவுகள் எடுக்க அங்கேயுள்ளஎனதுதளபதிகளுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் எல்லோரும்நான்எப்படி சிந்திப்பேனோ, அப்படி சிந்திக்க பயிற்சி அளிக்கப்பட்டவர்கள்…”

அடேங்கப்பா, ஒரு இயக்கத்தையே அடியாள் படையைப் போல் நடத்தும் வல்லமை பாசிஸ்டுகளுக்கு மட்டுமே கைவந்த கலை. அதனால்தான் அது, உனது கலையாகவும் இருக்கிறதா?

இலங்கையின் அதிபனாக இருக்கும் மகிந்த ராஜபக்சவுக்கும் உனக்கும் அடிப்படையில் பெரிய வேறுபாடுகள் இருப்பதாகத் தெரியவில்லை. ராஜபக்சே ஒரு சிங்கள பிரபாகரன் என்றால், நீயொரு தமிழ் ராஜபக்சே. ஒரே தளத்தில், ஒரே சிந்தனையில் உள்ள நீங்கள் இருவரும் (இரண்டு பாசிஸ்டுகளும்) மோதுவதால் ஒரு இனமே சீர்குலைந்து போயிருக்கிறது.

அடிக்கடி நீ சோசலிசம், மக்கள் ஜனநாயகம் என உச்சரித்து வார்த்தை விளையாட்டை நடத்தலாம். ஆனால், இட்லர் கூட தேசிய சோசலிசம், கட்டுப்பாடு, ஒழுங்கு, தேசிய அவமானத்துக்கு பழிவாங்குவது, தேசிய கெளரவத்தை நிலை நாட்டுவது என்ற பெயரில்தான் ஆட்சிக்கு வந்தான் இதை வரலாறு அறியும் 

மீண்டும் அழுத்தம்திருத்தமாக சொல்கிறேன். எந்தவொரு இராணுவ வெற்றியும் நிரந்தரமானதல்ல. இது உனக்கு மட்டுமல்ல, இலங்கை இராணுவத்துக்கும் பொருந்தும்.
என்றைக்குமே நீ, தமிழ் மக்கள் மத்தியில் உன் அரசியல் கொள்கையை முன்வைத்து ஆதரவு திரட்டியது கிடையாது. உனக்கு போட்டியான அமைப்புகள் புரிந்த மக்கள் விரோதச் செயற்பாடுகளை முன்நிறுத்தியே உனக்கான ஆதரவைத் திரட்டினாய். அதே போன்று இலங்கை இராணுவம் ஏற்படுத்துகின்ற அழிவுகளையும் இனஒடுக்கு முறையையும் பிரச்சாரப்படுத்தியே உனது இருப்பின் அவசியத்தை வலியுறுத்துகிறாய். இந்தப் போக்கினால்தான் இன்று தமிழ் இனத்துக்கு அழிவை தேடித் தந்திருக்கிறாய்.
இனியாவது புரட்சியாளனாக மலர முயற்சி செய். அதுதான் இதுவரை நீ செய்த படுகொலைக்கு பரிகாரமாக இருக்கும்
பெரும்பாலான தமிழக மக்கள், ஈழத்தமிழர்களுக்கு உணர்வுப்பூர்வமாகவும், உள்ளப்பூர்வமாகவும் ஆதரவு தருகிறார்கள்.   புரட்சிகர சக்தியாக மலர்ந்து இதை ஒன்று திரட்டு. மார்க்சிய – லெனினிய – மாசேதுங் பாதையே ஈழத்தமிழர்களுக்கு உண்மையான சுதந்திரத்தை பெற்றுத்தரும்.

– சூன்யம்

பின்குறிப்பு : 1982 நவம்பர் 27ல் தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் போராளி லெப்.சங்கர் உயிரிழந்ததன் ஞாபகமாக, ஆண்டுதோறும் உயிரிழந்த (விதைக்கப்பட்ட) விடுதலைப் புலிகள் அனைவரது தினமாக மாவீரர் தினம் நினைவு கூரப்படுகிறது. பிரபாகரனின் வருடாந்தஅறிக்கையும் ந்தத் தினத்தில் வெளியிடப்படுவதால் இந்நாள் விடுதலைப் புலிகளைப் பொறுத்த வரை மிக முக்கிய தினமாக அமைகிறது.

1982 ல் முதல் மாவீரன் உயிரிழந்த போதும், 1989 முதலேயே மாவீரர் தினம் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஒரு கலாச்சார வடிவமாக்கப்பட்டது. ஆனால், 1976ல் முன்வைக்கப்பட்ட தமிழீழப் பிரகடனத்துக்கும் பிரபாகரனின் மாவீரர் உரைக்கும் அடிப்படையில் எந்த வேறுபாடும் இருப்பதில்லை. தமிழ் ஊடகங்கள் குறிப்பிடும் அளவுக்கு மாவீரர் தின உரை முக்கியத்துவமானதாகவும் இருப்பதில்லை. அவ்வுரை பெரும்பாலும் கடந்த காலத்தின் தொகுப்பாகவே இருக்கிறது. இந்தத் தொகுப்பை பார்த்தாலே எந்தளவுக்கு சித்தாந்தம் இல்லாமல் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள் என்பது புரியும்.

நவம்பர் 1992: இந்த மிக முக்கியமான கடினமான நிலையில் நாங்கள் என்ன செய்ய முடியும்? எங்களுடைய மக்களையும் மண்ணையும் காப்பாற்றுவதற்கு போராடுவதைத் தவிர வேறுவழி உண்டா? எங்கள் சுதந்திரத்தை வெற்றி கொள்ள நாங்கள் போராட வேண்டும். பேரம் பேசுவதற்கு சுதந்திரம் விற்பனைப் பொருளல்ல. அது எமது உரிமை இரத்தம் சிந்தியே அதனை வெற்றி கொள்ள முடியும். எதுவும் யாரும் எங்களைத் தடுக்க முடியாது. நாங்கள் தொடர்ந்தும் உறுதியுடன் போராடுவோம்.
நவம்பர் 1993: சுதந்திர நாட்டை பெற்றுத்தர மக்களின் ஆணையைப் பெற்ற தமிழ் அரசியல் கட்சிகளும் அரசியல் சுதந்திரத்தைப் பெற்றுத் தருவதாக போராடிய ஆயுதக் குழுக்களும் தமது போராட்டத்தைக் கைவிட்டுள்ளன. மக்களுக்கு நம்பிக்கைத் துரோகம் இழைத்துள்ளன. எங்கள் இயக்கம் மட்டுமே கொள்கையில் தொடர்ந்தும் உறுதியாக உள்ளது. எமது போராட்டத்தின் உணர்வுபூர்வ மான நோக்கம் மட்டும் வெற்றியைப் பெற்றுத் தராது. எங்கள் தீர்மானத்தில் நாங்கள் பலமாக உறுதியாக இருக்க வேண்டும். போர்க் கலையில் திறமையானவர்களாக இருக்க வேண்டும்.
நவம்பர் 1994: தமிழ் மக்களுடைய தேசியப் பிரச்சனைக்கு சமாதானத் தீர்வைக் காணுவதற்கான அடிகளை எடுத்தால் நாங்கள் சந்திரிகா அரசுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம்.
நவம்பர் 1995: தமிழ் தேசத்திற்கான இராணுவ பலத்தை கட்டமைப்பது தவிர்க்க முடியாதது. இன்றைய வரலாற்றின் தேவையும் கூட. இளம் தலைமுறையினர் தாமதமின்றி எமது விடுதலை இயக்கத்தில் இணைய வேண்டுமென்று அழைப்பு விடுக்கிறேன். எவ்வளவு விரைவில் அவர்கள் வந்து இணைகிறார்களோ அவ்வளவு விரைவில் எங்கள் போராட்டத்தின் இலக்கை நாம் அடைய முடியும்.
நவம்பர் 1996: ஆக்கிரமிப்புப் படைகளை எமது மண்ணில் இருந்து வெளியெற்றும் வரை எங்கள் தேசம் விடுதலை அடையும் வரை தொடர்ந்தும் போராடுவோம்.
நவம்பர் 1997: இராணுவ வன்முறைப் பாதையைக் கைவிட்டு சிங்களம் தமிழ் மக்களுக்கு நீதி வழங்குமென நாம் எதிர்பார்க்கவில்லை. நாம் எமது விடுதலை இலட்சியத்தை அடைய தொடர்ந்து போராடுவோம்.
நவம்பர் 1998: தமிழீழத் தனியரசே தமிழ் மக்களின் இறுதியான தீர்வாக அமையுமென உறுதியாக நம்பி நாம் எமது லட்சியப் போரைத் தொடருவோம்.
நவம்பர் 1999: சுதந்திர தமிழீழ தனியரசே எமது தேசிய பிரச்சினைக்கு இறுதியான உறுதியான தீர்வு என்பதை எமது மக்கள் எப்பொழுதோ தீர்மானித்துவிட்டார்கள். எமது போராட்ட இலக்கு ஒளிமயமான எதிர்காலமாக எமது கண்களுக்குத் தெரிகிறது. நாம் நம்பிக்கையுடன் எமது இலட்சியப் பயணத்தைத் தொடர்வோம்.
நவம்பர் 2000: சமாதான பேச்சுக்கு உகந்ததாக சமாதான சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும். சிங்கள தேசம் இனவாதப் பிடியிலிருந்து விடுபடாமல் தமிழர்களுக்கு எதிரான அடக்கு முறையைதை; தொடருமானால் நாம் பிரிந்து சென்று தமிழீழத் தனியரசை அமைப்பதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை.
நவம்பர் 2001: பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதாயின் எமது இயக்கம் மீது விதிக்கப்பட்டு உள்ள தடை நீக்கப்பட வேண்டும். போர் நெருக்கடிகளும் பொருளாதாரத் தடைகளும் நீங்கிய இயல்பான இயல்பான அமைதியான சூழ்நிலையில் தான் பேச்சுக்கள் நடைபெற வேண்டும். தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு சமாதான வழிமூலம் தீர்வு காணப்பட்டால் தமிழர்களும் சிங்களவர்களும் ஏனைய சமூகத்தினரும் இந்த அழகிய தீவில், ஒத்திசைவாக, ஒன்றுகூடி வாழ முடியும். மறுத்தால் தமிழர்களாகிய நாம் பிரிந்து சென்று தமிழீழத் தனியரசை அமைப்பதைத் தவிர எமக்கு வேறு வழி எதுமில்லை.
நவம்பர் 2002: நம்பிக்கையூட்டும் நல்லெண்ண சூழ் நிலையில், அரசுபுலிகள் மத்தியிலான பேச்சுக்கள் முன்னேற்றம் அடைந்து செல்வது எமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. காலத்திற்கு ஏற்ப, வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்டத்தின் வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட லட்சியம் மாறப்போவதில்லை. சுமாதானச் பேச்சுக்களை பேரினவாத சக்திகள் குழப்பிவிட்டால், அது தமிழ் மக்களைத் தனியரசுப் பாதையில் இட்டுச் செல்லும்.
நவம்பர் 2003: சமரசத்திற்கும் சமாதான முன்னெடுப்பு களுக்கும் எம்மால் முடிந்தளவு நாம் முயற்சித்து வருகிறோம். சிங்கள இனவாத ஆளும் வர்க்கம் தொடர்ந்தும் எமது மக்களின் உரிமைகளை மறுத்து, சமரசத் தீர்வுகளை எதிர்த்து ஒடுக்கு முறையைத் தொடருமானால் தனியரசைக் கட்டி எழுப்புவதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை.
நவம்பர் 2004: நாம் முன் வைத்த இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத் திட்டத்தின் அடிப்படையில், நிபந்தனையற்ற முறையில், காலம் தாமதிக்காது பேச்சுக்களை ஆரம்பிக்குமாறு வேண்டுகோள்விடுகிறோம். எமது இந்த அவசர வேண்டுகோளை நிராகரித்து, காலத்தை இழுத்தடித்தால் நாம் எமது தேசத்தின் சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதைத் தவிர வேறுவழயில்லை.
நவம்பர் 2005: நியாயமான தீர்வுத் திட்டத்தை அரசாங்கம் முன் வைக்க வேண்டும். காலத்தை இழுத்தடிக்க முற்படுமானால் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை எமது தாயகத்தில் தன்னாட்சியை நிறுவும் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்.
நவம்பர் 2006: சிங்கள ஆட்சியாளர்கள் தமிழரின் தேசியப் பிரச்சினைக்குச் சமாதான வழியில் ஒரு நியாயமான தீர்வை ஒரு போதும் முன் வைக்கப்போவதில்லை என்பது இன்று வெட்ட வெளிச்சமாகி யிருக்கிறது. எனவே சுதந்திரத் தழிழீழத் தனியரசை நிறுவுவதென இன்றைய நாளில் நாம் தீர்க்கமாக முடிவு செய்திருக்கிறோம்.
நவம்பர் 2007: சிங்கள தேசத்தை நம்ப முடியாது என்பது உறுதியாகிவிட்டது. இனஅழிப்பைத் தொடரும் சிங்கள அரசிற்கு இராணுவப் பொருளாதார உதவிகள் வழங்குவதை அடியோடு நிறுத்தி, சர்வதேசச் சமூகம் எமது மக்களின் சுயநிர்ணய உரிமையையும் இறையாண்மையையும் ஏற்று அங்கீகரிக்க வேண்டும். நிறைந்துகிடக்கும் அனைத்து வளங்களையும் ஒன்றுதிரட்டி, எமது விடுதலைப் போராட்டத்திற்கு நீங்கள் தாருங்கள். நாம் எமது விடுதலைப் பாதையிலே தொடர்ந்து போராடுவோம்.
மாவீரர் தின உரைகளின் தொகுப்பு, இந்த இணையதளத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. நன்றி: த.ஜெயபாலன்  http://thesamnet.co.uk/?p=4866