ஈழம்: நிலமா? மக்களா?

பிப்ரவரி 5, 2009

உயிருடன் இருக்கும் உடல்கள்

இருந்தும் இல்லாமல் இருக்கும், அரை சடலங்கள்

இல்லாமலும் இருக்கும் அரை உடல்கள்

உயிரற்ற சடலங்கள்

இதுதான், இது மட்டுமேதான் இன்றைய ஈழம்.

இன்று உடல்களுக்கு எந்த மதிப்பும், மரியாதையும் இல்லை. சில உடல்களுக்காக பல உடல்கள் அடக்கப்படுவதும், அழிக்கப்படுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்ட நியதிகளாகிவிட்டன. இந்த அழிப்பு வேலையில் மதங்களும், ஆதிக்கங்களும் கை கோர்த்து ரத்தவெறிப் பிடித்து அலைகின்றன.

பல உடல்களின் ஆற்றல்உழைப்பு பிழிந்தெடுக்கப்பட்டு, சில உடல்களின் இன்பத்துக்கான பொருளாக மாறும்போது மதங்களும், மூலதனமும் ரத்தக் காட்டேரிகளாக பல்லிளிக்கின்றன.

முன்பு காலனியாதிக்கத்தின் மூலம் மனித உடலின் ஆற்றலை சுரண்டிய ஏகாதிபத்தியம், இன்று உள்நாட்டுப் போர்களை உருவாக்குவதன் மூலம் உடல்களை குறைக்கின்றன. காரணம், இப்போது இயற்கை வளங்களும், நிலப்பரப்புகளும் தேவைப்படும் அளவுக்கு உடல்கள் தேவைப்படுவதில்லை.

இந்த கொடூரமான முதலாளித்துவஏகாதிபத்திய சூழலில்தான் இந்தக் கேள்வி,

ஈழம்: நிலமா? மக்களா?

புலம் பெயர்ந்த, புலம் பெயராத அனைத்து ஈழ மக்களும் இந்த வினாவைத்தான் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

பிரபாகரனும், ‘இந்தக் கேள்விக்கு எப்படி விடையளிக்க வேண்டும்?’ என்று ஈழத்தமிழர்களின் சடலங்களை கையில் ஏந்தியபடி அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும், இந்தியாவையும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

அவரால் சுயமாக செயல்பட முடியாது. அமெரிக்கஇந்திய கைப்பாவையாக மாறி மாறி இருந்தே பிரபாகரனுக்கு பழகிவிட்டது. அதனால்தான் ஏகாதிபத்தியம் போலவே அவருக்கும் மனிதர்கள் கண்களுக்கு தெரியவில்லை. அனைவரும் உடல்களாக, சடலங்களாகவே காட்சியளிக்கிறார்கள்.

புரட்சிகர நடவடிக்கைகளோ, மார்க்சியலெனினிய சித்தாந்த அறிவோ அவருக்கு இருந்திருந்தால் இப்படி உடல்களை, சடலங்களை ஏந்தியபடி நின்றுக் கொண்டிருக்க மாட்டார். மக்களை ஒன்றுதிரட்டி மூன்றாம் உலக நாடுகளிலுள்ள புரட்சிகர அமைப்புகளின் துணையுடன் ஒட்டுமொத்த ஏகாதிபத்தியத்தையும் எதிர்த்து நின்றிருப்பார். ஆனால்

பிரபாகரனும் கேட்கத்தான் செய்கிறார், ஈழம்: நிலமா? மக்களா?

ஆனால், எத்தனை ஈழத்தமிழர்களின் சடலங்கள், உடல்கள் விழுந்தாலும், இந்தக் கேள்விக்கு அமெரிக்காவோ, இந்தியாவோ பதில் சொல்லாது. இதை பிரபாகரன் உணர்ந்தாராஉணரும்படி அருகில் இருப்பவர்கள் சொன்னார்களா, சொல்வார்களா என்று தெரியவில்லை. அப்படியே சொன்னாலும் சர்வாதிகாரத்துடன் இருக்கும் பிரபாகரன் அதை கேட்பாரா என்பதும் சந்தேகம்தான்.

நடந்து கொண்டிருப்பது சிங்களதமிழர் இடையிலான யுத்தம் அல்ல. தெற்காசிய வல்லரசாக நினைக்கும் இந்தியாவுக்கும், ஈழத்தின் சர்வாதிகார அமைப்பாக இருக்கும் புலிகளுக்குமான போர் இது.

நடுவில் உதிர்ந்துக் கொண்டிருக்கின்றன ஈழத் தமிழர்களின் உடல்கள்

தெற்காசிய வல்லரசாக மாறத் துடிக்கும் இந்தியாவுக்கு, ஈழ நிலப்பரப்பு, தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வர வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வை இருக்கிறது.

அதற்கு ஈழத் தமிழர்களின் உடல்கள் தடைகளாக இருக்கின்றன

இலங்கை கடற்படைக்குள் பாகிஸ்தான், சீனா போன்ற இந்திய அண்டை நாடுகளின் உளவுப் பிரிவினர் ஊடுருவியிருக்கிறார்கள் என்று இந்தியா நியாயம் சொல்லக் கூடும். அதற்கு வலு சேர்ப்பது போல் பாகிஸ்தான் உளவுத்துறைத் தலைவரான பஷீர்வாலி முகமது இலங்கைக்கான தூதுவராக நியமிக்கப்பட்டார். கொழும்புதூத்துக்குடிகன்னியாகுமரி என முக்கோண கடல் பகுதியை அமைக்கப் போவது இந்தியாவா, பாகிஸ்தானா, சீனாவா என்பதுதான் இப்போது தெற்காசிய ஆளும் வர்க்கங்களின் முன்னால் உள்ள கேள்வி.

இதற்கு மீனவர்களின் உடல்கள் தடையாக இருக்கின்றன

உண்மையில் இந்திய ஆளும் வர்க்கம் இப்போது பயப்படுவது பாகிஸ்தானை பார்த்து அல்ல. சீனாவை பார்த்து. காரணம், இந்தியாவை சுற்றியுள்ள எல்லா அண்டை நாடுகளிலும் சீனா வலுவாக கால்பதித்திருக்கிறது. பர்மாவிலும், பாகிஸ்தானிலும் கடற்படைத்தளமாக பயன்படுத்த வாய்ப்புள்ள துறைமுகங்கள் இன்று சீனாவின் வசம் இருக்கிறது. இதேபோல் இலங்கையிலும் அது மாதிரியான துறைமுகத்தை கட்ட சீனா முயற்சித்து வருகிறது.

இந்த இடத்தில் இந்துமகாக் கடலில் சீனா வலுவாக காலூன்றி இருப்பதை நினைவில் கொள்வது இந்திய ஆளும் வர்க்கத்தை புரிந்து கொள்ள வழிவகுக்கும். இதுதவிர, எண்ணெய் ஆய்வு என்ற பெயரில் சேது சமுத்திர பகுதியிலும் காலூன்ற சீனா முயற்சிக்கிறது. இதற்கு இலங்கை அரசும் ஆதரவு தெரிவித்திருக்கிறது. இதெல்லாம் இந்திய ஆளும் வர்க்கத்தின் பக்கம் இருக்கும்நியாயங்கள்!’

இந்த நியாயத்துக்காக, அநியாயமாக ஈழத்தமிழர்கள் சடலங்களாகிக் கொண்டிருக்கிறார்கள்

ஆனால், சீனா இப்படி இந்தியாவை சுற்றி வளைத்திருப்பதுப் போல், தைவான், கொரியா, வியட்நாம் போன்ற சீனாவை சுற்றியுள்ள அண்டை நாடுகளிலோ, பசிபிக் கடல் பகுதியிலோ இந்தியாவுக்கு ஒரு தளமும் இல்லை. இனிமேல் அப்படி ஒரு தளம் அமைப்பதற்கான வாய்ப்பும் குறைவு 

அதனால்தான் ஈழ நிலப்பரப்பில் வளர்ந்திருக்கும் உடல்கள் வெட்டப்படுகின்றன…  

சீனாவின் ஆதிக்கத்தை  இந்திய ஆளும் வர்க்கம் மட்டுமல்ல, அமெரிக்க ஏகாதிபத்தியமும் கவலையுடன் பார்க்கிறது. சீனாவும் தெற்காசிய வல்லரசாக மாறக் கூடாது. இந்தியாவும் வரக் கூடாது. தான் மட்டுமே என்றும் நாட்டாமையாக இருக்க வேண்டும் என அமெரிக்க ஏகாதிபத்தியம் திட்டம் போடுகிறது. அதற்கேற்ப்ப காய் நகர்த்தியும் வருகிறது.

இப்படியிருக்கையில் எதிரிக்கு எதிரி நண்பன் என்பதான ராஜதந்திரத்தைமனதில் கொண்டு பிரபாகரன் நகர்ந்தால், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உதவியை நாடினால், அது ஈழத்தை விலை போட்டு விற்பதாகவே அமையும்.

காரணம், மூன்றாம் உலகத்தின் உடல் அழிப்பு இயந்திரமாக இருப்பதே அமெரிக்க ஏகாதிபத்தியம்தான்  

கெரில்லா பயிற்சிகளில் விடுதலைப் புலிகள் கைதேர்ந்தவர்கள் என்பதும் அதற்கு பல்லாயிரம் போராளிகள் அவசியமில்லை, விரல்விட்டு எண்ணக் கூடியவர்களே போதுமானது என்பதையும் பிரபாகரனைவிட, அமெரிக்கா நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறது.
அதுமட்டுமல்ல, இப்போது நடைபெற்று வரும் யுத்தத்தில் கொல்லப்பட்ட போராளிகளில் பெருமளவினர் புதிதாக விரும்பியோ விரும்பாமலோ விடுதலைப் புலிகளில் இணைக்கப்பட்டவர்கள் என்றும் முறையான பயிற்சி பெற்ற புலிகளின் பலமான பிரிவினரிடையே பாரிய இழப்புகள் பெருமளவில் ஏற்படவில்லை என்றும் ராஜ பக் ஷேவை விட அமெரிக்காவுக்கு நன்றாகவே தெரியும்.
அதனால்தான் அழகான திட்டத்தை அமெரிக்க வகுத்து காய் நகர்த்திக் கொண்டிருக்கிறது.
ஹமாஸ் ஹிஸ்புல்லா போன்ற அமைப்புகளால் இஸ்ரேலை எதிர்கொள்ள முடியவில்லை. தலிபானால் அமெரிக்க மற்றும் நேசநாட்டு படைகளை எதிர்கொள்ள முடியவில்லை. அதேசமயம் இஸ்ரேலாலும் அமெரிக்காவாலும் யுத்தத்தை வெல்லவும் முடியவில்லை. ந்த அமைப்பை அப்படியே ஈழத்தில் பொருத்தி வைப்பதே அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் திட்டம்.
இன்னுமொரு ஆப்கானிஸ்தானையும், இன்னுமொரு ஈராக்கையும் இலங்கையில் உருவாக்குவதே ஏகாதிபத்தியத்தின் லட்சியம்.
 
அப்போதுதான் உடல்களின் எண்ணிக்கை குறையும். பரந்த நிலப்பரப்பும், கனிமஎண்ணெய் வளங்களும் கிடைக்கும்.
அதனால் உயிர்கள் சடலங்களாகுவது குறித்து எந்த ஆளும் வர்க்கத்துக்கும் கவலையில்லை.
கவலைப்படும் வர்க்கங்கள் பிரபாகரனுக்கு அவசியமும் இல்லை.
நசுங்கிக் கொண்டிருக்கின்றன ஈழத் தமிழர்களின் சடலங்கள்
ஆமாம், ஈழம்: நிலமா? மக்களா?

3 பதில்கள் -க்கு “ஈழம்: நிலமா? மக்களா?”

  1. rudhran Says:

    very well written உயிர்கள் சடலங்களாகுவது குறித்து எந்த ஆளும் வர்க்கத்துக்கும் கவலையில்லை.
    கவலைப்படும் வர்க்கங்கள் பிரபாகரனுக்கு அவசியமும் இல்லை.
    keep writing

  2. Eurasian Says:

    இப்போது கூட இதுவரை இறந்த மக்கள் தொகை போதாதாம். இன்னும் 10000 சாக வேண்டுமாம். அப்போது தான் உலகநாடுகள் தலையிட்டு தமிழீழம் வாங்கிக் கொடுக்கும் என்று வெளிநாடுகளில் இருக்கும் தமிழர்கள் பேசிக் கொள்கிறார்கள்.


  3. நிலமும் நிலம் சார்ந்த மக்களுமே தேசம் என்று படித்ததாக நினைவு.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: