ஈழத்தமிழர்களுக்காக ஆட்சியை இழந்தாரா கருணாநிதி? – சே.பாக்கியராசன்

பிப்ரவரி 4, 2009

சமீபத்தில் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில் தான் இரண்டுமுறை ஈழத்தமிழர்களுக்காக ஆட்சியை இழந்திருக்கிறேன், மூன்றாவது முறையும் இழக்கத் தயார் என்று கூறி உள்ளார்.

பல முறை தன் ஆட்சி பறிக்கப்பட்டதைப் பற்றி கருணாநிதி புலம்பியதுண்டு, ஆனால் இம்முறை ஈழத்தமிழர்களுகாக ஆட்சியை இழந்தேன் என்று கூறியதால் அதைப் பற்றி அலச வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.

1977:

முதன்முதலில் ஜனவரி திங்கள் 31 ஆம் தேதி திமுக ஆட்சி, கருணாநிதி இரண்டாம் முறையாக முதல்வராக இருந்தபொழுது நடுவண் அரசான காங்கிரசினால் கலைக்கப்பட்டது. அதற்கான காரணத்தைப் பார்போம்.

1975 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவில் நெருக்கடி நிலை அறிவிக்கபடுகிறது. அதற்கு அடுத்த நாளே திமுகவின் செயற்குழுவைக் கூட்டி கலைஞர் தலைமையில்ஜனநாயகத்தை பாதுகாக்கிறோம் என்று கூறி சர்வாதிகார கொற்றக் குடையின் கீழ் தர்பார் நடத்திட எடுக்கப்படும் முயற்சி நாட்டுக்கு ஏற்றதுதானாஎன்று தீர்மானம் நிறைவேற்றபடுகிறது. பிரதமர் இந்திரா மிகவும் கோபம் கொள்கிறார். மேல் சபையில் நடந்த ஒரு விவாதத்தில்இந்தியாவின் கட்டுபாடற்ற தீவாய் தமிழகம் இருப்பதாய்அறிவிக்கும் அளவிற்கு திமுகவின் ஆட்சியின் மீது கடுமையாகிறார். இதை அடுத்து ஜனவரி 30 ஆம் தேதி அப்போதைய கவர்னர், ஆட்சியைப் பற்றி நல்லவிதமாய் எடுத்துக்கூறிய பிறகும் 31 ஆம் ஜனாதிபதி ஆட்சியை கலைக்கிறார்.

இதற்கு நடுவே எம்.ஜி.ஆர் 1972 ஆம் ஆண்டு திமுகவில் இருந்து நீக்கப்பட்டு புதிய கட்சி ஆரம்பித்து, 1973யில் திண்டுக்கல் இடைதேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறுகிறது. 1973 ஆம் ஆண்டே எம்.ஜி.ஆர் திமுக அமைச்சரவை மீதான 54 ஊழல் புகார்களைக் கொண்ட பட்டியலை மத்திய அரசிடம் அளித்தார். அதன் அடிப்படையிலும் தான் நடவடிக்கை எடுக்கப்பட்டு ஆட்சி கலைக்கபட்டது. மிசாவில் திமுகவினர் கைது செய்யப்பட்டனர். அதில் இருவர் மரணமடைந்தார்கள்.

திமுக ஆட்சி கலைக்கப்பட்டபின் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் இந்திரா காங்கிரசுடன், அதிமுக கூட்டணி கண்டது. 1977 மார்ச் மாதம் நடந்த அத்தேர்தலில் பிற மாநிலத்தில் காங்கிரஸ் தோற்றாலும் தமிழ்நாட்டில் மிகப் பெரும்பான்மையாக வெற்றி பெற்றது. அதற்குப் பின் நடந்த சட்டமன்றத் தேர்தலில் எம்.ஜி.ஆர் இந்திரா காங்கிரஸ் உடனான கூட்டணியில் இருந்து விலகிய பின்னும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அதே 1977யில் வென்றார்.

72-இல் இருந்து 77-க்குள் தமிழ்நாட்டு அரசியலை ஆட்டிப்படைத்த இராஜாஜி, பெரியார், காமராசர் ஆகிய தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக மறைந்தார்கள். தமிழக அரசியலில் அவர்கள் இடத்தை இட்டு நிரப்ப அவர்கள் அளவிற்குத் தகுதி பெற்ற தலைவர்கள் இல்லை. அந்த வேளையில் எம்.ஜி.ஆரா கருணாநிதியா என்ற கேள்விதான் மக்கள் முன்னால் வைக்கப்பட்டது. மக்கள் எம்.ஜி.ஆர் அவர்களைத் தேர்ந்தெடுத்தார்கள்.

அன்றைய காலகட்டத்தில் ஈழத்தில் ஆயுதப்போராட்டம் ஆரம்பிக்கப்படவில்லை. அதே ஆண்டு அங்கேயும் தேர்தல் நடந்தது, தனி நாடுதான் தீர்வு என்று கூறி அமிர்தலிங்கம் தலைமையில் இருந்தஒருங்கிணைந்த தமிழர் விடுதலை முன்னணிபெருவாரியாக வெற்றிபெற்றது. இதுதான் நடந்தது. இதில் எங்கே ஈழப்பிரச்சனை வந்தது? இதில் எந்த இடத்தில் கருணாநிதி ஈழபிரச்சனைக்குப் பாடுபட்டார், குரல் கொடுத்தார் ஆட்சி இழந்தார் என்பதை நாம் அறிய முடியவில்லை?

1983 ஆம் ஆண்டு தான் இலங்கை இனப்பிரச்சினை தலைதூக்கிய சமயத்தில் அவரின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். யாரும் அவரை நிர்பந்திக்கவில்லை அவராகவே ராஜினாமா செய்தார். அப்பொழுது வெளியிட்ட அறிக்கையில், “இந்தியா அரசு ராணுவத்தை அனுப்பி ஈழத்தமிழர்களை பாதுகாக்கத் தவறிவிட்டது, எத்தனையோ வெளிநாடுகளுடைய பிரச்சனையை ஐக்கிய நாடுகள் சபை கவனத்திற்கு கொண்டு சென்று உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த இந்தியா, இலங்கைத் தமிழர் பிரச்சனையில் பாராமுகாய் இருந்துவிட்டது, இப்பொழுது நண்பர் பழ.நெடுமாறனின் தியாகப் பயணத்தையும் தடுக்க முனைகிறதுஎன்று குற்றஞ்சாட்டி ராஜினாமா செய்தார். ஆனால் அடுத்த வருடத்திலேயே மேல்சபைக்கு போட்டியிட்டு மேல்சபை உறுப்பினராகிவிட்டார். அதற்குப் பின் 1979 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் அதே காங்கிரசுடன் கூட்டணி கண்டு போட்டியிட்டு அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்ற பின் அனைத்து இடங்களையும் தோற்ற எம்.ஜி.ஆர் ஆட்சியை இந்திரா காந்தி துணையுடன் கலைத்தார் கலைஞர். ஆனால் முன்னைவிட அறுதிப் பெரும்பான்மை பெற்று மீண்டும் எம்.ஜி.ஆர் முதல்வரானார்.

1991:

1991 ஆம் ஆண்டு இரண்டாம் முறையாக அதே ஜனவரி 30 ஆம் தேதியில் மூன்றாம் முறையாக முதல்வரான கருணாநிதி ஆட்சி கலைக்கப்பட்டது. அதற்கான காரணத்தைப் பார்போம்.

எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பிறகு அதிமுக பிளவுபட்டது. சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்து ஜானகி அம்மாள் முதலமைச்சரானார். 24 நாட்களில் அவர் ஆட்சி கலைக்கப்பட்டது. பிளவுபட்ட அதிமுக தேர்தலை சந்தித்து, அதில் திமுக அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது. கருணாநிதி மீண்டும் முதல்வரானார். அடுத்து வந்த பாராளுமன்றத் தேர்தலில் போபர்ஸ் ஊழல் முக்கியமான பங்கு வகித்தது.

கருணாநிதி வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணியில் இருந்தார். அதிமுகவும், காங்கிரசும் கூட்டணி போட்டு அனைத்து இடங்களிலும் வென்றன. தமிழகத்தில் ஒரு இடத்தைக் கூட தேசியமுன்னணி பெறவில்லை. வடமாநிலத்தில் பல இடங்களில் வெற்றி பெற்றதால் தேசிய முன்னணி ஆட்சி அமைத்தது வி.பி.சிங் பிரதமரானார். மண்டல் கமிசன் பரிந்துரையை வி.பி.சிங் அமல்படுத்தியதால் ஆன அரசியல் மாற்றத்தில் காங்கிரஸ் பின்னணியில் சந்திரசேகர் 54 எம்.பி.க்களோடு வெளியேறியதால் வி.பி.சிங் ராஜினாமா செய்தார். சந்திரசேகர் பிரதமரானார். வி.பி.சிங்குடன் நெருக்கமாய் இருந்த திமுக ஆட்சியை ராஜிவ் காந்தியின் ஆசியோடு ஜெயலலிதாவிற்காக சந்திரசேகர் கலைத்தார். அதற்கு அவர் சொன்ன பல காரணங்களில் ஒன்று விடுதலைப்புலிகளை அடக்கத் தவறிவிட்டார் என்பதுதான். அரசியல் அறிந்தவர்கள் அனைவருக்கும் தெரியும் எதற்காக ஆட்சி கலைக்கபட்டதென்று… மேற்சொன்ன காரணம் உண்மையா பொய்யா என்றுஏனெனில் விடுதலைப்புலிகள் அப்போது இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கத்தினர் அல்லர்.

ஆக 1980 ஆம் அண்டு எம்.ஜி.ஆர் ஆட்சியை இந்திரா காந்தி உதவியோடு கலைஞர் கலைத்ததற்கு என்ன காரணங்களோ அதே காரணங்கள் தான் அவர் ஆட்சி 1991 ஆம் ஆண்டு ராஜிவின் உதவியோடு ஜெயலலிதா கலைஞர் ஆட்சியைக் கலைத்ததற்கும் என்பதை மறுப்பதற்கில்லை. அவர் ஆட்சி கலைக்கப்பட்டதற்கு உள்ளூர் அரசியல்.. அதிகார மாற்றங்கள்.. கூட்டணி மாற்றங்கள் என பல காரணங்கள் இருக்கின்றன. ஈழத்தமிழர்களுக்காக மட்டுமே கலைஞரின் எந்த ஆட்சியும் பறிக்கப்படவில்லை என்பதே வரலாறு. இனிமேலும் கலைஞர் ஈழத்தமிழர்களுக்காக ஆட்சி இழந்தேன் என்று கூறுவதை தமிழ்கூறும் நல்லுலகம் நம்பக்கூடாது.

இக்கட்டுரையின் நோக்கமே ஈழத்தமிழர்கள் ஆதரவு இப்பொழுதுதான் தமிழகத்தில் பல வருடங்கள் கழித்து எழுந்துள்ளது. அந்த எழுச்சியானது இதைப் போன்ற பொய்யுரைகளினால் இம்மியளவும் நலிந்துவிடக் கூடாது என்பதாலும், தமிழகத்தின் சில முக்கியமான அரசியல் வரலாறு அனைவருக்கும் தெரிய வேண்டும் என்பதாலும் தான்.

நன்றி

: கீற்று 

http://www.keetru.com/literature/essays/packiyarasan.php

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: