இதற்குதானே ஆசைப்பட்டாய் பிரபாகரா…

ஜனவரி 29, 2009

கேள்வி: தமிழீயத்திற்கானதாக என்ன அரசியல் அமைப்பை நீங்கள் கருதுகிறீர்கள்?

பிரபாகரன்: அது தமிழீழத்தின் ஒரு சோசலிச அரசாக இருக்கும். மேலும் மக்களால் ஆதரிக்கப்படும் ஒரு தனி அரசியல் கட்சி மட்டும் அங்கிருக்கும். நான் பலகட்சி ஜனநாயகத்துக்கு எதிரானவன். அந்த ஒரு கட்சி ஆட்சி மூலமாகத்தான் ஈழத்தை துரிதமாக நாங்கள் முன்னேற்ற முடியும். ஒரு சோசலிச அமைப்பில் மக்களுடைய தேவைகள் மிக முக்கியமானவை.

கேள்வி: நாடாளுமன்ற ஜனநாயகத்தை வைத்திருப்பீர்களா?

பிரபாகரன்: இல்லை. மக்கள் தேர்ந்தெடுக்கும் ஒரே கட்சி மட்டும் உள்ள யுகோஸ்லாவியாவில் உள்ளதைப் போன்றதொரு பாணியிலான மக்கள் ஜனநாயகமாக இருக்கும்.

கேள்வி: டெலோ மீது ஒரு யுத்தத்தை நீங்கள் தொடுப்பதற்கான காரணங்கள் என்ன? தீவிரவாதிகளிடையேயான ஒற்றுமையின்மை உங்கள் இயக்கத்தை பலவீனப்படுத்தும் என்று நீங்கள் கருதவில்லையா?

பிரபாகரன்: எங்கள் போராட்டத்தில் ஒரு ஒருமைப்பட்ட அணுகுமுறையை நாங்கள் மேற்கொள்ள வேண்டும். எங்களுக்குள் நிலவும் எந்த ஒற்றுமையின்மையும் தமிழ் இயக்கம் முழுவதையும் பலவீனப்படுத்தும். எனது கருத்தின்படி போராட்டத்துக்கு தலைமையேற்க ஒரேயொரு தீவிரவாத குழு மட்டுமே இருக்கவேண்டும். மேலும் சிரீலங்கா இராணுவ தாக்குதல்கள் பலவற்றை எங்கள் புலிகள் மட்டுமே முறியடிக்க முடிந்தது. ஒரு ஒருமைப்பட்ட தனி இயக்கத்தோடு போரிடுவது சிரீலங்கா இராணுவத்துக்கு ஆபத்தானதாக இருக்கும். இப்போது ஒரே ஒருமைப்பட்டதாக புலிகள் இயக்கம் இருக்கிறது.

– 1986ம் ஆண்டு ஜூன் மாதம், ஆங்கில ‘இந்தியா டுடே’ மாதமிருமுறை இதழுக்கு பிரபாகரன் அளித்த பேட்டியிலிருந்து

பிரபாகரனுக்கு

ஈழ மக்கள் மருத்துவ வசதியில்லாமல் தொற்று நோய்க்கும், இலங்கை இராணுவத்தின் தாக்குதலுக்கும் ஆளாகி தவித்து வரும் நேரத்தில், இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

உன்னை தோழர் என்று அழைக்கவோ, போராளி என ஒப்புக் கொள்ளவோ மனம் மறுக்கிறது. பசி, பட்டினியுடன் அடுத்த விநாடி உயிர் வாழ்வோமா என்ற நிச்சயமற்ற நிலமையில் ஒரு இனமே அழிந்து கொண்டிருக்கும்போது, பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகி சகோதரிகள் கதறிக் கொண்டிருக்கும்போதுஎப்படி உன்னை புரட்சியாளனாக, மதிக்க முடியும்?

ஈழத்தமிழர்களின் இன்றைய நிலமைக்கு யார் காரணம் என எப்போதாவது உனக்குள் கேட்டிருக்கிறாயா? சிங்கள இனவெறிதான் இதற்கு காரணம்இதுகூடவா தெரியாது என்று சொல்லிவிட்டு போகாதே. சிங்கள இனவெறி மட்டுமல்ல, உனது பாசிச நடவடிக்கைகளும் இன்றைய ஈழ நிலமைக்கு காரணம். இதுதான் உண்மை.

உன்னையும், உனது இயக்கத்தையும் வளர்த்து ஆளாக்கியது யார்? சத்தியமாக ஈழத்தமிழர்களல்ல. இந்திய உளவுப்படை! அதனால்தான் ஆரம்பம் முதலே உனது பயணம் தெற்காசிய பிரதேசத்தின் நாட்டாமையாக வலம் வரத் துடிக்கும் இந்திய ஆளும் வர்க்கத்தின் உதவியை எதிர்பார்த்து நிற்பதாக அமைந்துவிட்டது. இது போதாதென்று உலக போலீஸ்காரனான அமெரிக்க ஏகாதிபத்தியத்திடம் பிச்சை வேறு

ஏன் பிரபாகரா, குள்ளநரிகளும் ஓநாய்களும், எதற்காக, எதன் பொருட்டு உதவி செய்யும், வளர்த்து ஆளாக்கும் என்ற தெளிவில்லாமலா ஒரு இயக்கத்தை கட்டி எழுப்பினாய்? அதுசரி, ‘விடுதலைப் புலிகள்இயக்கத்துக்கு என்ன அரசியல் தெளிவு, சித்தாந்தம் இருக்கிறது? உனக்கு அரசியல் ஆலோசகராக இருந்த பாலசிங்கம் ஒரு போலி கம்யூனிஸ்ட். இந்திய உளவுத்துறையின்முழுநேர ஊழியனாகபணிபுரிந்த ஆள். அப்புறம் பழ. நெடுமாறன் வகையறா. பாசிஸ்ட் இந்திராகாந்தியை ஆதரித்த பழ. நெடுமாறனால் என்ன விதமான அரசியல் தெளிவை உனக்குள் ஏற்படுத்தியிருக்க முடியும்? தமிழக நக்சல்பாரிகளை கொடூரமாக தாக்கிய தேவாரம், மோகன்தாஸ் போன்ற அடியாட்களை பராமரித்த எம்.ஜி. இராமச்சந்திரனை புகழ்ந்த பழ. நெடுமாறானால் எப்படி போராளிகளுக்கு சித்தாந்தத்தை கற்று தந்திருக்க முடியும்?

அதனால்தான் உன்னால் உலகம் முழுக்க அரசியல்ரீதியான ஆதரவை திரட்ட முடியவில்லை. அரசியல் உரிமையை வென்றெடுக்க முடியவில்லை. எழுதப்பட்ட, எழுதப்படாத வரலாற்று நெடுகிலும், ‘ஆயுதங்களிலிருந்து அதிகாரம்தான் பிறக்கிறது, சித்தாந்தமல்ல. மக்களை திரட்டி அவர்களின் ஒத்துழைப்போடு நடத்தப்படுவதுதான் புதிய ஜனநாயக் புரட்சியாக இருக்கும்’ என்று காணப்படுகிறதேஇதை நீ கற்காமல் போனதால்தான், உலகிலுள்ள புரட்சிகர இயக்கங்களுடன் உன்னால் தொடர்பு கொள்ளவோ, ஆதரவு திரட்டவோ முடியவில்லை.

புரட்சிகர நடவடிக்கையில் உன்னால் ஏன் இறங்க முடியாமல் போயிற்று?

காரணம் உனது பிறப்பு! (புலிகள் இயக்கத்தின் தோற்றத்தை குறிப்பிடுகிறேன்). எல்.டி.டி., எனப்படும் புலிகள் இயக்கம் வடக்கு மாகாணமான யாழ்பாணம் வளைகுடா பிராந்தியத்தை தளமாக கொண்டுதானே செயல்பட ஆரம்பித்தது. மேல்சாதி முதலாளித்துவ, குட்டி முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ, பணக்கார விவசாயப் பின்னணியில் உருவான, உனது இயக்கத்தால், ஏகாதிபத்திய, பாசிச அரசாங்கத்தின் வால் பிடித்தபடி செல்லத்தான் முடியும். ஈழ மக்களை இப்படியான அவலநிலைக்குத்தான் கொண்டுவந்து நிறுத்த முடியும்.

தமிழக ஓட்டுக் கட்சிகள் என்னை ஆதரிக்கிறார்கள் என சந்தோஷப்படாதே. உனது பிறப்பை போலவே (இங்கும் புலிகள் இயக்கத்தின் தோற்றத்தை குறிப்பிடுகிறேன்) தமிழக ஓட்டுப் பொறுக்கிகளின் பிறப்பும் மேல்சாதி முதலாளித்துவ, குட்டி முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ, பணக்கார விவசாயப் பின்னணியில் உருவானவைதான். அதனால்தான் ஓட்டுக் கட்சிகள் உன் புகழ்பாடுகிறார்கள்.

பிரபாகரா, ஈழத்தில் சொந்தக் காலிலும், வெளியில் புரட்சியாளர்களையும், பரந்துபட்ட மக்களையும் சார்ந்து நிற்கும் யுத்த தந்திரங்களை நீ கற்றிருந்தால், இன்று ஈழத்தின் நிலமையே வேறாக இருக்கும். ஆனால், இந்த போர்த்தந்திரங்களை உனது அரசியல் ஆலோசகராக தன் வாழ்நாள்வரை இருந்த பாலசிங்கம் சொல்லித்தந்திருக்க மாட்டான். காரணம் முன்பே சொன்னபடி பாலசிங்கமே ஒரு போலி கம்யூனிஸ்ட். அப்படியே தப்பித்தவறி பாலசிங்கம் உனக்கு இதையெல்லாம் சொல்ல வந்திருந்தாலும் நீ அதை செவிகொடுத்து கேட்டிருக்க மாட்டாய். காரணம், நீ முகஸ்துதியால் உருவானவன்.

பாசிஸ்டுகளிலேயே இரண்டுவகை உண்டு. ஒரு பிரிவினர் முகஸ்துதியால் சூழ்ந்திருப்பர். இன்னொரு பிரிவினர் முகஸ்துதியால் உருவாக்கப்படுவர். நீ இரண்டாவது வகையை சேர்ந்தவன்.

வரலாற்றில் தனிநபர்களின் பாத்திரம் குறித்த இயக்க இயல் கண்ணோட்டம் புரட்சியாளர்களுக்கு உண்டு. சரித்திரம் சில நாயகர்களை உருவாக்குவது போலவே, சரித்திரத்தின் போக்கை மாற்றும் பங்கும் இவர்களுக்கு உண்டு. இந்த விஷயம் உனக்கு பொருந்தாது.

காரணம், வசந்த் அண்ட் கோ விளம்பரத்தில் எல்லாம் கழிசடை வசந்தகுமார் சிரித்தபடி போஸ் கொடுப்பது போலவே, எல்லா புகைப்படத்துக்கும் நீ போஸ் கொடுக்கிறாய். இந்தியாவில் நீ இருந்த காலத்தில், தமிழகத்திலுள்ள அனைத்து பத்திரிகைகளிலும் உனது பேட்டிகளும், செய்திகளும் வந்தன. அந்த விஷயத்தில் பாலசிங்கம் ஒரு திறமையான பி.ஆர்.வோ.வாக செயல்பட்டான். கிட்டத்தட்ட ஜூனியர்விகடன், உனது பிரச்சார பீரங்கியாக இருந்தது. இதெல்லாம் உனக்கு கிடைத்த அங்கீகாரம் என நினைத்தாயா? அடப்பாவமேபிரபாகரா, இதற்கெல்லாம் ஆதாரமாக இந்திய உளவுத்துறை இருந்ததப்பா. அப்போது நீ, அவர்களது செல்லப் பிள்ளையல்லவா? அதனால் உன்னை சிங்காரித்து அலங்கரித்தார்கள். விதவிதமாக படம்பிடித்தார்கள். ஊடகங்கள் வழியாக உன்னை குஷிப்படுத்தினார்கள். இப்போது இந்திய உளவுத்துறைக்கு நீ வேண்டாதவனாகிவிட்டாய். எனவே தொடர்புசாதனங்களும் உனக்கு எதிராக இருக்கின்றன. இதை புரிந்து கொள்ளாமல் இப்போதும் நீ, இந்தியா ஏதாவது செய்யுமா என ஏக்கத்துடன் காத்திருக்கிறாய்.

ஒன்றை புரிந்து கொள் பிரபாகராஉண்மையான புரட்சியாளனும், போராளியும் ஒருபோதும் தன்னை முன்னிலைப்படுத்த மாட்டான். இயக்கத்தையே முன்னிருத்துவான். புரட்சியாளர்களின் அகராதியில் எப்போதுமே, ‘நான்கிடையாது. ‘நாங்கள்தான்.

உனது புகழ்பெற்ற வாசகங்கள் என்ன? யுத்த முனையில் எதுவும்எனதுஉத்தரவுபடியே நடக்கும். அவசர முடிவுகள் எடுக்க அங்கேயுள்ளஎனதுதளபதிகளுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் எல்லோரும்நான்எப்படி சிந்திப்பேனோ, அப்படி சிந்திக்க பயிற்சி அளிக்கப்பட்டவர்கள்…”

அடேங்கப்பா, ஒரு இயக்கத்தையே அடியாள் படையைப் போல் நடத்தும் வல்லமை பாசிஸ்டுகளுக்கு மட்டுமே கைவந்த கலை. அதனால்தான் அது, உனது கலையாகவும் இருக்கிறதா?

இலங்கையின் அதிபனாக இருக்கும் மகிந்த ராஜபக்சவுக்கும் உனக்கும் அடிப்படையில் பெரிய வேறுபாடுகள் இருப்பதாகத் தெரியவில்லை. ராஜபக்சே ஒரு சிங்கள பிரபாகரன் என்றால், நீயொரு தமிழ் ராஜபக்சே. ஒரே தளத்தில், ஒரே சிந்தனையில் உள்ள நீங்கள் இருவரும் (இரண்டு பாசிஸ்டுகளும்) மோதுவதால் ஒரு இனமே சீர்குலைந்து போயிருக்கிறது.

அடிக்கடி நீ சோசலிசம், மக்கள் ஜனநாயகம் என உச்சரித்து வார்த்தை விளையாட்டை நடத்தலாம். ஆனால், இட்லர் கூட தேசிய சோசலிசம், கட்டுப்பாடு, ஒழுங்கு, தேசிய அவமானத்துக்கு பழிவாங்குவது, தேசிய கெளரவத்தை நிலை நாட்டுவது என்ற பெயரில்தான் ஆட்சிக்கு வந்தான் இதை வரலாறு அறியும் 

மீண்டும் அழுத்தம்திருத்தமாக சொல்கிறேன். எந்தவொரு இராணுவ வெற்றியும் நிரந்தரமானதல்ல. இது உனக்கு மட்டுமல்ல, இலங்கை இராணுவத்துக்கும் பொருந்தும்.
என்றைக்குமே நீ, தமிழ் மக்கள் மத்தியில் உன் அரசியல் கொள்கையை முன்வைத்து ஆதரவு திரட்டியது கிடையாது. உனக்கு போட்டியான அமைப்புகள் புரிந்த மக்கள் விரோதச் செயற்பாடுகளை முன்நிறுத்தியே உனக்கான ஆதரவைத் திரட்டினாய். அதே போன்று இலங்கை இராணுவம் ஏற்படுத்துகின்ற அழிவுகளையும் இனஒடுக்கு முறையையும் பிரச்சாரப்படுத்தியே உனது இருப்பின் அவசியத்தை வலியுறுத்துகிறாய். இந்தப் போக்கினால்தான் இன்று தமிழ் இனத்துக்கு அழிவை தேடித் தந்திருக்கிறாய்.
இனியாவது புரட்சியாளனாக மலர முயற்சி செய். அதுதான் இதுவரை நீ செய்த படுகொலைக்கு பரிகாரமாக இருக்கும்
பெரும்பாலான தமிழக மக்கள், ஈழத்தமிழர்களுக்கு உணர்வுப்பூர்வமாகவும், உள்ளப்பூர்வமாகவும் ஆதரவு தருகிறார்கள்.   புரட்சிகர சக்தியாக மலர்ந்து இதை ஒன்று திரட்டு. மார்க்சிய – லெனினிய – மாசேதுங் பாதையே ஈழத்தமிழர்களுக்கு உண்மையான சுதந்திரத்தை பெற்றுத்தரும்.

– சூன்யம்

பின்குறிப்பு : 1982 நவம்பர் 27ல் தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் போராளி லெப்.சங்கர் உயிரிழந்ததன் ஞாபகமாக, ஆண்டுதோறும் உயிரிழந்த (விதைக்கப்பட்ட) விடுதலைப் புலிகள் அனைவரது தினமாக மாவீரர் தினம் நினைவு கூரப்படுகிறது. பிரபாகரனின் வருடாந்தஅறிக்கையும் ந்தத் தினத்தில் வெளியிடப்படுவதால் இந்நாள் விடுதலைப் புலிகளைப் பொறுத்த வரை மிக முக்கிய தினமாக அமைகிறது.

1982 ல் முதல் மாவீரன் உயிரிழந்த போதும், 1989 முதலேயே மாவீரர் தினம் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஒரு கலாச்சார வடிவமாக்கப்பட்டது. ஆனால், 1976ல் முன்வைக்கப்பட்ட தமிழீழப் பிரகடனத்துக்கும் பிரபாகரனின் மாவீரர் உரைக்கும் அடிப்படையில் எந்த வேறுபாடும் இருப்பதில்லை. தமிழ் ஊடகங்கள் குறிப்பிடும் அளவுக்கு மாவீரர் தின உரை முக்கியத்துவமானதாகவும் இருப்பதில்லை. அவ்வுரை பெரும்பாலும் கடந்த காலத்தின் தொகுப்பாகவே இருக்கிறது. இந்தத் தொகுப்பை பார்த்தாலே எந்தளவுக்கு சித்தாந்தம் இல்லாமல் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள் என்பது புரியும்.

நவம்பர் 1992: இந்த மிக முக்கியமான கடினமான நிலையில் நாங்கள் என்ன செய்ய முடியும்? எங்களுடைய மக்களையும் மண்ணையும் காப்பாற்றுவதற்கு போராடுவதைத் தவிர வேறுவழி உண்டா? எங்கள் சுதந்திரத்தை வெற்றி கொள்ள நாங்கள் போராட வேண்டும். பேரம் பேசுவதற்கு சுதந்திரம் விற்பனைப் பொருளல்ல. அது எமது உரிமை இரத்தம் சிந்தியே அதனை வெற்றி கொள்ள முடியும். எதுவும் யாரும் எங்களைத் தடுக்க முடியாது. நாங்கள் தொடர்ந்தும் உறுதியுடன் போராடுவோம்.
நவம்பர் 1993: சுதந்திர நாட்டை பெற்றுத்தர மக்களின் ஆணையைப் பெற்ற தமிழ் அரசியல் கட்சிகளும் அரசியல் சுதந்திரத்தைப் பெற்றுத் தருவதாக போராடிய ஆயுதக் குழுக்களும் தமது போராட்டத்தைக் கைவிட்டுள்ளன. மக்களுக்கு நம்பிக்கைத் துரோகம் இழைத்துள்ளன. எங்கள் இயக்கம் மட்டுமே கொள்கையில் தொடர்ந்தும் உறுதியாக உள்ளது. எமது போராட்டத்தின் உணர்வுபூர்வ மான நோக்கம் மட்டும் வெற்றியைப் பெற்றுத் தராது. எங்கள் தீர்மானத்தில் நாங்கள் பலமாக உறுதியாக இருக்க வேண்டும். போர்க் கலையில் திறமையானவர்களாக இருக்க வேண்டும்.
நவம்பர் 1994: தமிழ் மக்களுடைய தேசியப் பிரச்சனைக்கு சமாதானத் தீர்வைக் காணுவதற்கான அடிகளை எடுத்தால் நாங்கள் சந்திரிகா அரசுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம்.
நவம்பர் 1995: தமிழ் தேசத்திற்கான இராணுவ பலத்தை கட்டமைப்பது தவிர்க்க முடியாதது. இன்றைய வரலாற்றின் தேவையும் கூட. இளம் தலைமுறையினர் தாமதமின்றி எமது விடுதலை இயக்கத்தில் இணைய வேண்டுமென்று அழைப்பு விடுக்கிறேன். எவ்வளவு விரைவில் அவர்கள் வந்து இணைகிறார்களோ அவ்வளவு விரைவில் எங்கள் போராட்டத்தின் இலக்கை நாம் அடைய முடியும்.
நவம்பர் 1996: ஆக்கிரமிப்புப் படைகளை எமது மண்ணில் இருந்து வெளியெற்றும் வரை எங்கள் தேசம் விடுதலை அடையும் வரை தொடர்ந்தும் போராடுவோம்.
நவம்பர் 1997: இராணுவ வன்முறைப் பாதையைக் கைவிட்டு சிங்களம் தமிழ் மக்களுக்கு நீதி வழங்குமென நாம் எதிர்பார்க்கவில்லை. நாம் எமது விடுதலை இலட்சியத்தை அடைய தொடர்ந்து போராடுவோம்.
நவம்பர் 1998: தமிழீழத் தனியரசே தமிழ் மக்களின் இறுதியான தீர்வாக அமையுமென உறுதியாக நம்பி நாம் எமது லட்சியப் போரைத் தொடருவோம்.
நவம்பர் 1999: சுதந்திர தமிழீழ தனியரசே எமது தேசிய பிரச்சினைக்கு இறுதியான உறுதியான தீர்வு என்பதை எமது மக்கள் எப்பொழுதோ தீர்மானித்துவிட்டார்கள். எமது போராட்ட இலக்கு ஒளிமயமான எதிர்காலமாக எமது கண்களுக்குத் தெரிகிறது. நாம் நம்பிக்கையுடன் எமது இலட்சியப் பயணத்தைத் தொடர்வோம்.
நவம்பர் 2000: சமாதான பேச்சுக்கு உகந்ததாக சமாதான சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும். சிங்கள தேசம் இனவாதப் பிடியிலிருந்து விடுபடாமல் தமிழர்களுக்கு எதிரான அடக்கு முறையைதை; தொடருமானால் நாம் பிரிந்து சென்று தமிழீழத் தனியரசை அமைப்பதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை.
நவம்பர் 2001: பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதாயின் எமது இயக்கம் மீது விதிக்கப்பட்டு உள்ள தடை நீக்கப்பட வேண்டும். போர் நெருக்கடிகளும் பொருளாதாரத் தடைகளும் நீங்கிய இயல்பான இயல்பான அமைதியான சூழ்நிலையில் தான் பேச்சுக்கள் நடைபெற வேண்டும். தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு சமாதான வழிமூலம் தீர்வு காணப்பட்டால் தமிழர்களும் சிங்களவர்களும் ஏனைய சமூகத்தினரும் இந்த அழகிய தீவில், ஒத்திசைவாக, ஒன்றுகூடி வாழ முடியும். மறுத்தால் தமிழர்களாகிய நாம் பிரிந்து சென்று தமிழீழத் தனியரசை அமைப்பதைத் தவிர எமக்கு வேறு வழி எதுமில்லை.
நவம்பர் 2002: நம்பிக்கையூட்டும் நல்லெண்ண சூழ் நிலையில், அரசுபுலிகள் மத்தியிலான பேச்சுக்கள் முன்னேற்றம் அடைந்து செல்வது எமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. காலத்திற்கு ஏற்ப, வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்டத்தின் வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட லட்சியம் மாறப்போவதில்லை. சுமாதானச் பேச்சுக்களை பேரினவாத சக்திகள் குழப்பிவிட்டால், அது தமிழ் மக்களைத் தனியரசுப் பாதையில் இட்டுச் செல்லும்.
நவம்பர் 2003: சமரசத்திற்கும் சமாதான முன்னெடுப்பு களுக்கும் எம்மால் முடிந்தளவு நாம் முயற்சித்து வருகிறோம். சிங்கள இனவாத ஆளும் வர்க்கம் தொடர்ந்தும் எமது மக்களின் உரிமைகளை மறுத்து, சமரசத் தீர்வுகளை எதிர்த்து ஒடுக்கு முறையைத் தொடருமானால் தனியரசைக் கட்டி எழுப்புவதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை.
நவம்பர் 2004: நாம் முன் வைத்த இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத் திட்டத்தின் அடிப்படையில், நிபந்தனையற்ற முறையில், காலம் தாமதிக்காது பேச்சுக்களை ஆரம்பிக்குமாறு வேண்டுகோள்விடுகிறோம். எமது இந்த அவசர வேண்டுகோளை நிராகரித்து, காலத்தை இழுத்தடித்தால் நாம் எமது தேசத்தின் சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதைத் தவிர வேறுவழயில்லை.
நவம்பர் 2005: நியாயமான தீர்வுத் திட்டத்தை அரசாங்கம் முன் வைக்க வேண்டும். காலத்தை இழுத்தடிக்க முற்படுமானால் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை எமது தாயகத்தில் தன்னாட்சியை நிறுவும் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்.
நவம்பர் 2006: சிங்கள ஆட்சியாளர்கள் தமிழரின் தேசியப் பிரச்சினைக்குச் சமாதான வழியில் ஒரு நியாயமான தீர்வை ஒரு போதும் முன் வைக்கப்போவதில்லை என்பது இன்று வெட்ட வெளிச்சமாகி யிருக்கிறது. எனவே சுதந்திரத் தழிழீழத் தனியரசை நிறுவுவதென இன்றைய நாளில் நாம் தீர்க்கமாக முடிவு செய்திருக்கிறோம்.
நவம்பர் 2007: சிங்கள தேசத்தை நம்ப முடியாது என்பது உறுதியாகிவிட்டது. இனஅழிப்பைத் தொடரும் சிங்கள அரசிற்கு இராணுவப் பொருளாதார உதவிகள் வழங்குவதை அடியோடு நிறுத்தி, சர்வதேசச் சமூகம் எமது மக்களின் சுயநிர்ணய உரிமையையும் இறையாண்மையையும் ஏற்று அங்கீகரிக்க வேண்டும். நிறைந்துகிடக்கும் அனைத்து வளங்களையும் ஒன்றுதிரட்டி, எமது விடுதலைப் போராட்டத்திற்கு நீங்கள் தாருங்கள். நாம் எமது விடுதலைப் பாதையிலே தொடர்ந்து போராடுவோம்.
மாவீரர் தின உரைகளின் தொகுப்பு, இந்த இணையதளத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. நன்றி: த.ஜெயபாலன்  http://thesamnet.co.uk/?p=4866

23 பதில்கள் -க்கு “இதற்குதானே ஆசைப்பட்டாய் பிரபாகரா…”

 1. dontask Says:

  ‘தமிழக நக்சல்பாரிகளை கொடூரமாக தாக்கிய தேவாரம், மோகன்தாஸ் போன்ற அடியாட்களை பராமரித்த எம்.ஜி. இராமச்சந்திரனை புகழ்ந்த பழ. நெடுமாறானால் எப்படி போராளிகளுக்கு சித்தாந்தத்தை கற்று தந்திருக்க முடியும்?’

  1980 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஆதரவுடன் போட்டியிட்டு வென்ற நெடுமாறன் அதிமுக ஆட்சியில்
  நடந்த மனித உரிமை மீறல்களை கண்டித்து சட்டசபையிலும் பேசினார்.தேவாரத்தின் மனித உரிமை
  மீறல்களை கண்டித்து பேசினார்.

  ஸ்டாலின்ஸ்ட் ம.க.இ.க ஆதரவாளர் சூன்யம் தன்
  எழுத்துக்களில் உள்ள முரண்களை முதலில் அறிந்து
  கொள்ளட்டும். பூக்கோவையோ அல்லது பின் நவீனத்துவத்தையோ மருதையன் ஏற்துண்டா?. நீங்கள்
  ஆதரிக்கும் ம.க.இ.க வின் ‘சோசலிச’ சமூகத்திலும்
  ஒற்றைக் கட்சிதான் இருக்க முடியும் என்பதுதானே
  அவர்கள் கொள்கை. அரை நக்சலியம்+ அரை
  பின் நவீனத்துவம், வினோதமான உருப்படாத கலவை.

 2. பன்னாடை Says:

  அடே பன்னாடை பிரபாகரன் எந்த பேட்டியில் ஒரு கட்சிதான் ஆட்சி செய்யும் என சொன்னார்.

  நீ ஏன்ரா இப்பிடி

 3. suuniyam Says:

  நண்பர் பன்னாடைக்கு, நீங்கள் கேட்ட கேள்விக்கான பதில் பதிவிலேயே இருக்கிறது. இருந்தாலும் உங்கள் பார்வைக்கு படும்படியாக திரும்பவும் இங்கு சுட்டிக் காட்டுகிறேன்.

  //1986ம் ஆண்டு ஜூன் மாதம், ஆங்கில ‘இந்தியா டுடே’ மாதமிருமுறை இதழுக்கு பிரபாகரன் அளித்த பேட்டியிலிருந்து…//

 4. suuniyam Says:

  நண்பர் dontask ,

  பழ. நெடுமாறன் சட்டசபையில் ‘கண்டித்து பேசினார்’ என தகவல் சொன்னதற்கு நன்றி. அவரால் எதற்கும் உருப்படாத, எதுவும் செய்ய இயலாத சட்டசபையில் ‘பேச’ (முடிந்தால் ஆவேசமாக!) மட்டும்தான் முடியும்.

  //பூக்கோவையோ அல்லது பின் நவீனத்துவத்தையோ மருதையன் ஏற்துண்டா?.//

  வரலாற்று முக்கியத்துவம் என கருதும் வினாவினை எழுப்பியிருக்கிறீர்கள். ஒரு விஷயம், தோழர் மருதையனுக்கும் இந்த வலைத்தளத்துக்கும் தொடர்பில்லை.

  பின்நவீனத்துவ சிந்தனைகளாக அறியப்படுபவைகளையும், பின் நவீனத்துவ சூழலையும் அதன் அடிப்படையிலிருந்து கற்று, தெரிந்து கொண்டவர்தான் தோழர் மருதையன். அதனால்தான் அதை அவர் ஏற்கவில்லை!

  மார்க்ஸிய – லெனினிய – மாசேதுங் சிந்தனைகளில் இருந்தும், பொருள்முதல்வாத, இயங்கியல் வழிமுறைகளில் இருந்தும் அறியப்படும் பின் நவீனத்துவ சிந்தனைகள் வேறுபடுகின்றன… மீண்டும் கருத்து முதல்வாதத்துக்கே செல்கின்றன என்ற புரிதல் அவருக்கு உண்டு.

  உதாரணமாக ‘எக்ஸிஸ்டென்ஷியலிஸம்’ என்கிற இருத்தலியல் வாதம், முதல் உலகப் போருக்கு பின்பு உருவானது. அந்த காலகட்டத்து சமூகமாறுதலின்போது மேலைநாடுகளில் ஏற்பட்ட பித்தநிலையின் வெளிப்பாடு இது.

  அதேபோல்தான் ‘ஸ்ட்ரக்சுரலிஸம்’ எனப்படும் அமைப்பியல்வாதம். இது இரண்டாம் உலகப் போருக்கு பின் உருவானது. இதற்கும் காரணம் போர் தந்த அழிவும், அணு ஆயுதங்கள் தந்த அதிர்ச்சியும், பயமும், ஏகாதிபத்தியத்தால் ஏற்பட்ட நிலையற்ற வாழ்க்கையும்தான்.

  இதனை தொடர்ந்து உருவான பின் அமைப்பியல்வாதம், பின் நவீனத்துவம் எல்லாமே அதன் நீட்சியாக வந்தவைதான். இந்த இரண்டும் உருவான காலகட்டத்தையும், சூழலையும் ஆராய்ந்தால் பல விஞ்ஞானரீதியான உண்மைகள் புலப்படும்.

  அத்துடன் முதலாளித்துவ, ஏகாதிபத்திய நாடுகளில்தான் இவை வளர்ந்தன, என்பது உங்களுக்கு சொல்லாமலேயே விளங்கியிருக்கும்!

  (இதையெல்லாம் தோழர் மருதையன் என்னிடம் சொன்னதில்லை. ஏனெனில் சூன்யம் யாரென்றே அவருக்கு தெரியாது. இருந்தாலும் அவர் சார்பில், இங்கு சொல்லக் காரணம், அவரது மேடைப் பேச்சுக்களும், அவர் எழுதும் கட்டுரைகளும்.

  ‘புதிய ஜனநாயகம்’, ‘புதிய கலாச்சாரம்’ இதழ்களை தொடர்ந்து உன்னிப்பாக படித்துப் பாருங்கள். பேசப்படும் அனைத்து சிந்தனைகளையும், போக்குகளையும் அவரும், மகஇக வின் முன்னணி தோழர்களும் கவனித்தும், வாசித்தும், விவாதித்தும் வருகிறார்கள் என்று தெரியும்.

  எதையும் குருட்டாம் போக்கில் அவர்கள் ஏற்பதில்லை. கட்டுடைத்து(!) பார்த்த பின்பே நிராகரித்திருக்கிறார்கள்).

  அடுத்து,

  //நீங்கள் ஆதரிக்கும் ம.க.இ.க வின் ‘சோசலிச’ சமூகத்திலும் ஒற்றைக் கட்சிதான் இருக்க முடியும் என்பதுதானே அவர்கள் கொள்கை.//

  நண்பா, சோசலிசம் என்று உருவான பின்பு அங்கு எந்தக் கட்சியும் இருக்காது. பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் மட்டும்தான் இருக்கும்!

  (ஆஹா… சர்வாதிகாரம் என நீயே குறிப்பிட்டு விட்டாய்… என ஆனந்த கூத்தாட மாட்டீர்கள் என நம்புகிறேன். இட்லர் – முசோலினி வகையறாக்களின் சர்வாதிகாரத்துக்கும், பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்துக்கும் இருக்கும் வித்யாசம், புரிதல் அறிந்தவர்தான் நீங்கள் என நம்புகிறேன்).

  இறுதியாக, சூன்யம் குறித்து குறிப்பிட்டுள்ளீர்கள்.

  //அரை நக்சலியம்+ அரை பின் நவீனத்துவம், வினோதமான உருப்படாத கலவை.//

  நன்றி!

 5. manimalar Says:

  ஜனநாயக முறையில் போராடிய தந்தை செல்வா, அமிர்தலிங்கம் மற்றவர்களின் அறவழி போராட்டங்களின் தோல்விக்கு பின்பு தான் ஆயுதம் ஏந்தி போராட புலிகளும் மாற்ற அமைப்புகளும் தள்ளப்பட்டன. ராஜீவ் ஜெயவர்த்தனே ஒபந்தபடியும் வடக்கு கிழ்க்கு மாகாணம் ஒருங்கு இணைக்க பட வில்லை . எல்லா வகையிலும் ஏமாற்ற பட்ட தமிழ் மக்களுக்கு புலி தலைவரை விட்டால் வேறு வழி இல்லை. நீங்கள் சொல்லுவது போல் முதலாளிகளின் கைகூலியாக பிரபாகரன் இருந்தால் எப்போதோ ஐரோப்பா கண்டத்திற்க்கோ இந்தியாவிலோ சிறப்பாக இருந்திருக்க முடியும் ஏன் சிங்கள அரசுடன் சிங்கராமாய்
  வாழ்ந்திருக்க முடியும் . போர் முனையில் போரிட தேவை இல்லையே. நிறை குறை இல்லா ஒரு தலைவன் கூட கிடையாது . காந்தியை கொன்ற நாடு தானே . வெளியே இருந்து பேசுவது எளிது . போர்முனையில் இருந்தால் தான் தெரியும்

 6. suuniyam Says:

  //எல்லா வகையிலும் ஏமாற்ற பட்ட தமிழ் மக்களுக்கு புலி தலைவரை விட்டால் வேறு வழி இல்லை.//

  தோழர் மணிமலர்,

  தவறாக நினைக்காதீர்கள். உங்கள் பின்னூட்டத்தை படிக்கும்போது, ‘அந்தக் கடவுள்தான் நம்மள காப்பாத்தணும்’ என இல்லாத இறைவனிடம் பிரார்த்தனை செய்வது போல் இருக்கிறது.

  புலிகளை தவிர வேறு அமைப்புகளோ, இயக்கங்களோ இல்லாமல் போனதற்கு யார் காரணம், என்று யோசித்து பார்த்தீர்களானால் உண்மை புரியும். மற்ற அமைப்பினர்களை தீர்த்துக் கட்டிவிட்டு, எங்களைத்தவிர ஈழத் தமிழர்களை காப்பாற்ற யாருமே இல்லை என்பதான பிம்பத்தை ஏற்படுத்தியது சரி என நினைக்கிறீர்களா?

  //ஜனநாயக முறையில் போராடிய தந்தை செல்வா, அமிர்தலிங்கம் மற்றவர்களின் அறவழி போராட்டங்களின் தோல்விக்கு பின்பு தான் ஆயுதம் ஏந்தி போராட புலிகளும் மாற்ற அமைப்புகளும் தள்ளப்பட்டன.//

  அப்படியில்லை மணிமலர். தந்தை செல்வா, அமிர்தலிங்கம் ஆகியோர் சிங்கள அரசின் கையை எதிர்பார்த்து ஜனநாயக ரீதியில் போராடினார்கள். ‘உங்களதான் நம்பி இருக்கோம்… ஏதாவது பார்த்து செய்ங்க’ என்பதான வழிமுறை அது.

  இந்த வழிமுறை எவ்வளவு பிற்போக்குத்தனமோ, அவ்வளவு பிற்போக்குத்தனம் வெறும் ஆயுதப் போராட்டத்தை மட்டுமே நம்புவதும்.

  //முதலாளிகளின் கைகூலியாக பிரபாகரன்//

  மன்னிக்கவும் பிரபாகரன் முதலாளிகளின் கைக்கூலியல்ல… அக்மார்க் முதலாளியே!

 7. porattamtn Says:

  //ராஜபக்சே ஒரு சிங்கள பிரபாகரன் என்றால், நீயொரு தமிழ் ராஜபக்சே. ஒரே தளத்தில், ஒரே சிந்தனையில் உள்ள நீங்கள் இருவரும் (இரண்டு பாசிஸ்டுகளும்) மோதுவதால் ஒரு இனமே சீர்குலைந்து போயிருக்கிறது. //

  மிகச் சரியான, ஆனால் ஒரு இனத்தின் துயரார்ந்த வரலாறு பொதிந்த வார்த்தைகள்!

  //போர் முனையில் போரிட தேவை இல்லையே//
  //நிறை குறை இல்லா ஒரு தலைவன் கூட கிடையாது . காந்தியை கொன்ற நாடு தானே . வெளியே இருந்து பேசுவது எளிது . போர்முனையில் இருந்தால் தான் தெரியும்//

  போகிற போக்கில் மணிமலர் சொல்லிச் செல்கிற இக்கருத்துக்கள்தான் பெரும்பான்மை புலி ஆதரவாளர்களின் கடைசிப் புகலிடமாக இருக்கிறது. ஒரு எளிமையான கேள்வி. இதே ‘விதியை’ கம்யூனிஸ்டுகளிடமும் கடைபிடிப்பீர்களா? கம்யூனிஸ்டுகள் தும்மினால் கூட சர்வாதிகாரம் என கூக்குரலிடுபவர்கள் பிரபாகரனின் சர்வாதிகாரத்திற்கு மட்டும் பல்லக்கு தூக்குவதன் காரணம் என்ன, ரசிக மனப்பான்மை என்பதைத் தவிர?

 8. பூனை Says:

  இலங்கையின் அதிபனாக இருக்கும் மகிந்த ராஜபக்சவுக்கும் உனக்கும் அடிப்படையில் பெரிய வேறுபாடுகள் இருப்பதாகத் தெரியவில்லை. ராஜபக்சே ஒரு சிங்கள பிரபாகரன் என்றால், நீயொரு தமிழ் ராஜபக்சே. ஒரே தளத்தில், ஒரே சிந்தனையில் உள்ள நீங்கள் இருவரும் (இரண்டு பாசிஸ்டுகளும்) மோதுவதால் ஒரு இனமே சீர்குலைந்து போயிருக்கிறது.

  suuniyam மிக சரியாக புரிந்துள்ளீர்கள்.நன்றி.ஆனால் வினவு வைகோ பாணியில் பிரபாகனுக்கு, புலிகளுக்கு அதரவு கொடுக்கிறார்களே?!!

 9. viswanarayan Says:

  கண்மூடித்தனமாக பலரும் பிரபாகரனை ஒரு மாவீரனாக பேசும் வேளையில் அறிவுபூர்வமாக நீங்கள் அவரை அடையாளம் காட்டும் வகையில் எழுதிய உண்மைகள் அருமை. வாழ்த்துக்கள்

 10. jp Says:

  //1986ம் ஆண்டு ஜூன் மாதம், ஆங்கில ‘இந்தியா டுடே’ மாதமிருமுறை இதழுக்கு பிரபாகரன் அளித்த பேட்டியிலிருந்து…//

  இந்த இருபத்தி இரண்டு வருடங்களுக்கு பின்பும், இந்த பேட்டியில் பிரபாகரன் கூறிய கருத்துகளில் எவற்றையுமே மாற்றி கொள்ளாமல் இருப்பார் என்று நம்புகிறீர்களா ?
  ஆண்டன் பாலசிங்கம் போன்றவர்களுடனான தொடர்பு, எத்தனையோ அமைதி பேச்சுவார்த்தைகள் …கம்யூநிச வல்லரசின் வீழ்ச்சி, அமெரிக்க ஏகாதிபத்தியத்தை யாராலுமே ஒன்றுமே செய்ய இயலாத நிலை, சதாம் தாலிபான் போன்றவர்களுக்கு ஏற்பட்ட நிலைமை, ருவாண்டா கொடூரங்கள், கொசாவா, மாசிடோனியா மற்றும் பல நாடுகள் உருவாக்கம் ….. இப்படி நடந்த எண்ணற்ற வரலாற்று நிகழ்வுகள் அவருக்கு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தி இருக்காதா ???

  தவறான நேரத்தில் களங்கம் ஏற்படுத்தவேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவாகவே பார்க்கிறேன்

 11. rat Says:

  nandraga irukkiradu. aanal porkkalathil knayam mattume parpadilli.vettri than mukkiam. ela makkalukkum adudan avisiam

 12. பகீ Says:

  “..ஒரு ஒருமைப்பட்ட தனி இயக்கத்தோடு போரிடுவது சிரீலங்கா இராணுவத்துக்கு ஆபத்தானதாக இருக்கும். ..”
  சரியாத்தான் சொல்லியிருக்குது அந்தாள். இப்ப கருணா , பிள்ளையான், சங்கரி…உப்பிடி எத்தின சிக்கலுகள்!

  மற்றது அண்ணை சூனியம், அந்தக்கால (ரெலோ உட்பட) சோசலிசம், கொமினிசம் எண்டு கதச்ச கூட்டமெல்லாம் உந்த தனிக்கட்சி கதை தான். சொல்லப்போனால் நம்மட கழகக்காரர் சொல்லிச்சினம் பிரபாகரன் இலக்சன் வக்கப்போறார் ஏனெண்டால் கூட்டணிக்காரரை பழையபடி வெல்ல வைக்கிறதுக்கு. ஆனால் எங்கட் ஆட்சியில 10 வருசத்டுக்கு இலக்சன் கதையே இல்லை எண்டு.

  “…டெலோ மீது ஒரு யுத்தத்தை நீங்கள் தொடுப்பதற்கான காரணங்கள் என்ன? தீவிரவாதிகளிடையேயான ஒற்றுமையின்மை உங்கள் இயக்கத்தை பலவீனப்படுத்தும் என்று நீங்கள் கருதவில்லையா?..”

  உண்மைதான் ரெலோ மீதான உள்குத்து வெட்டுகள்(பொபி-தாஸ் குறூப்) பிரச்சினையள் தான் அவேன்ர இயக்கத்தை பலவீனப்படுத்தினது எண்ட உண்மை எல்லாருக்கும் தெரியும். ஆனா சூனியத்துக்கு தெரியாது. மல்லாந்து கிடந்து கொண்டு ஆகாயத்தை பநோக்கி துப்பக்கூடாது சூனியம்!!!

 13. Sathiyanarayanan Says:

  enda ezhuthiye ura emathura neenga eezha makkala kappatha vendiyathuthana, na koosama ellam pesallam seithu paratha thanda theriym, avan avan kalathula erangikitu thanda thalaivaru annan ezhutharathuku munnadi varalara muzhumaiya padi

 14. மாலதி Says:

  //வெளியே இருந்து பேசுவது எளிது . போர்முனையில் இருந்தால் தான் தெரியும்.//

  மணிமலர், இதைத்தானே ஈழத்தில் இருக்கும் மக்களும் உங்களுக்கு சொல்கிறார்கள். நாங்கள் சாகிறோம், நாங்கள் கஷ்டப்படுகிறோம், அதனால் எமக்கு யுத்தமும் வேண்டாம், தமிழீழமும் வேண்டாம் என்று. இது உங்களுக்கு கேட்கவில்லையா?

 15. மாலதி Says:

  //உண்மைதான் ரெலோ மீதான உள்குத்து வெட்டுகள்(பொபி-தாஸ் குறூப்) பிரச்சினையள் தான் அவேன்ர இயக்கத்தை பலவீனப்படுத்தினது எண்ட உண்மை எல்லாருக்கும் தெரியும். ஆனா சூனியத்துக்கு தெரியாது.//

  உண்மை தான். புலிகள் இயக்குத்துக்குள்ளே மாத்தையா-பிரபா, கருணா-பிரபா, உள் குத்துவெட்டுகள் தான் இயக்கத்தை பலவீனப்படுத்தின உண்மை எல்லோருக்கும் தெரியும். பகீக்கு மட்டும் தெரியலையா? மல்லாந்து கிடந்து கொண்டு ஆகாயத்தை நோக்கி துப்பக்கூடாது பகீ!!!

 16. பூனை Says:

  jp-இந்த இருபத்தி இரண்டு வருடங்களுக்கு பின்பும், இந்த பேட்டியில் பிரபாகரன் கூறிய கருத்துகளில் எவற்றையுமே மாற்றி கொள்ளாமல் இருப்பார் என்று நம்புகிறீர்களா ?

  எல்லாம் மாறுகிறது பிரபாகரன் மட்டும் மாறவே இல்லை. அது தான் இலங்கை தமிழர்களில் இந்த சீரழிவற்க்கு காரணம்.

 17. பகீ Says:

  மாலதி,

  என்னுடைய கருத்தெல்லாம் மற்ற இயக்கக்காரருக்கு புலி பற்றி கதை அளக்க அருகதை இல்லை என்பதே. மற்றும் தங்கள் அழிவுக்கு புலிகளை காரணம் சொல்லக்கூடாது என்பதுமே. புலிகள் தங்கள் சிக்கல்களுக்கு மற்ற இயக்கத்தை காரணம் கூறியவர்களில்லை!

 18. bmurali80 Says:

  ஈழப் போராட்டம் நாட் கணக்கில் உட்கார்ந்து யோசித்து எந்த (தத்துவ) நிலை எடுத்து போராட வேண்டும் என்று நடக்கவில்லை. சிரிய தீக்குச்சி இன்று காட்டுத் தீயானதே ஒழிய இப்படித் தான் எரிய வேண்டும், எரிந்த பின்னர் எப்படி சீரமைப்பதென்றெல்லாம் நாற்காலியில் உட்கார்ந்து வெட்டி நியாயம் பேச மடியாத இயலாத ஒன்று.

  இன உணர்வால் ஒற்றுமையை தேடுவோர் ராஜபக்சேவாகவோ பிரபாகரனாகவோ இல்லாமல் வேறு எப்படி இருக்க முடியும் ?

 19. Dinesh Bharathy Says:

  Interesting article that tries to debate the real issues for the current generation to know. Leave alone the mistakes of Prabhakaran as a representative of the Tamils in Lanka, why is it that “India’s moral responsibility in settling the crisis or not intervening in the issue, to any smallest degree” has not been discussed on any of the forums – “Black on white”?

  Cos, I am feeling a small(!) guilt as an Indian, when I think, “Is India’s selfish principles on external affairs or to say(shame) – its security policies over the years and now, a cause for the current situation in Lanka?”

  Would it have been more better than it is now, if it had handled the situation better?

 20. உச்சை சிரவஸ் Says:

  தலைவர் பிரபாவின் எல்லா செவ்விகளும் சச்சி ஸ்ரீகாந்தா அவரைப் பற்றி எழுதிய நூலில் இருக்கிறது. பிரபாகரன் ஒரு நாளும் தனிக்கட்சி ஆட்சி அமைப்புத்தான் தனக்குப் பிடித்தது என்று கூறவில்லை. நீங்கள் ஒரு பச்சப் பொய்யர்.


 21. பற்பல துரோகங்கள் தானே ஈழ மக்களுக்கும் உலக மக்களுக்கும் புலிகளை தனி அடையாளப்படுத்தியது. பிரபாகரன் சுயநலவாதியென்றால் இன்று கருணாவைவிட மேலாக இருந்திருப்பாரே.பிரபாகரனை ஒரு நிலைப்படுத்தியே எழுதியிருக்கும் நீங்கள் ஏன் கருணா போன்றோரை மறந்தீர்கள்… என நீள்கிறது என் கேள்வி என்ன செய்வது நீங்களெல்லாம் அறிவுஜிவிகள் பதில் தயாராக இருக்கும் மறக்காமல் எனக்கும் எழுதிடுங்கள்

 22. VAS Says:

  dear suuniyam,
  excellent article. But we need to approach eelam problem in post modern point of view..especially focault’s thought are more relevant in eelam problem. Like how power is instituisialised,how power is being execerised. This is applicable to prabhakaran. He is not only execersising or implementing power but he himself becomes POWER. Thats why in TN we often comeacross depicting prabhakaran as revelotionary rebel like CHE. In the past, the notorious activities what LTTE done is unpardonable ( Killed various leaders who had different views, child soliders, ethnic cleansing of muslims,extorting money from diaspora tamilians). As you rightly pointed out, with out people’s co-operation no revolution is possible. Hence LTTE is merely a thug/Lumpen element.


 23. […] 4. பிரபாகரனுக்கு எழதப்பட்ட சூன்யத்தின் விமர்சனத்திற்குரிய திறந்த கடிதம்-   இதற்குதானே ஆசைப்பட்டாய் பிரபாகரா… […]


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: